அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...
நான், 15 வயது சிறுமி. தந்தை, அரசு அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிகிறார். அப்பா வழி தாத்தா வீட்டோடு இருக்கிறார். வீட்டில் யாருக்கு உடம்பு சரியில்லை என்றாலும், என் தந்தை ஒரு ஹோமியோபதி மருத்துவரிடம் தான் அழைத்து செல்வார்.
ஆங்கில மருத்துவத்தை அடியோடு வெறுக்கிறார். எந்த வகை மருத்துவம் சிறப்பானது என்றும், மருத்துவங்களில் எத்தனை வகை உள்ளன என்ற தகவல்களை அறிய தாருங்கள் ஆன்டி.
இப்படிக்கு,
ரா.அனிதா.
அன்பு செல்லத்துக்கு...
அலோபதி அல்லது நவீன ஆங்கில மருத்துவம் அறிகுறிகளால் நோய்களை கண்டு பிடிக்கிறது. உடலில் எதிரான விளைவுகளை ஏற்படுத்தி, நோய்களை குணமாக்குகிறது.
ஹோமியோபதி ஒருவகை மாற்று மருத்துவம்; பக்க விளைவுகள் கிடையாது. மருந்து, மிட்டாய் போல் இருக்கும். வெள்ளை நிறத்தில், சிறு வில்லைகளை எளிதில் விழுங்கலாம்; மருந்து அடிமையாக்காது.
ஆனால், ஹோமியோபதி மருந்துகள் விஞ்ஞான ரீதியாய் நிரூபிக்கபடாதவை என, அலோபதி மருத்துவர்கள் குறை கூறுவர். ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை சாமுவேல் ஹனிமேன்; ஐரோப்பிய நாடான ஜெர்மனியை சேர்ந்தவர். அடிப்படையில் அலோபதி மருத்துவம் கற்றவர்.
நம் நாட்டில் உருவான சித்த மருத்துவத்தில் மெர்குரி மற்றும் சல்பர் உலோகங்களை மூல பொருளாக கொண்டு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மருத்துவத்தில், 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற கோஷமும் உள்ளது.
ஆயுர்வேதம் என்ற மருத்துவ முறையின் தந்தை சரகர்.
யுனானி என்ற மருத்துவம், கிரேக்க அரேபிய மருத்துவ முறை.
அக்குபஞ்சர் என்ற மருத்துவத்தின் தந்தை சி ஜுவா மின். சீன மருத்துவத்தின் தந்தை எம்பார் லெசன் நுன். இவை தவிர, இன்னும் பல மருத்துவ முறைகள் உள்ளன.
அவை, காந்த மருத்துவம், ரெய்கி மருத்துவம், கலை மருத்துவம், வர்ம வைத்தியம், முத்திரை மருத்துவம், அக்கு பிரஷர் மருத்துவம், பென்டுலம் மருத்துவம், மலர் மருத்துவம், நவமணி மருத்துவம், சிரிப்பு மருத்துவம், மசாஜ் மருத்துவம், பிராண சிகிச்சை முறை மருத்துவம், ஜோதிட மருத்துவம், எண்ணெய் மருத்துவம், தியான மருத்துவம், பெட் மருத்துவம், யோக மருத்துவம், கை மற்றும் விரல் மருத்துவம், வண்ண மருத்துவம்.
ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேனிங், அறுவை சிகிச்சை எல்லாம், அலோபதி என்ற ஆங்கில மருத்துவத்தில் தான் செய்யப்படுகின்றன.
ஆஸ்துமா, கீல் வாதம், நீரிழிவு போன்ற நோய்களை முழுமையாக குணப்படுத்த, சித்த மருத்துவமே உதவும். சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் போலிகள் அதிகம். அதை உணர்ந்து, மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.
- கூடை நிறைய அன்புடன்,
பிளாரன்ஸ்.
இளஸ்... மனஸ்... (174)
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!