Advertisement

சாமி போட்ட பணம்!

கயிற்று கட்டிலில் அமர்ந்திருந்தான், மண்டைக்கசாயம். வயது, 42. தோல் உறித்த பிராய்லர் கோழி போல மெலிந்த தேகம். பெரிய முன்வழுக்கை, பட்டை கிருதா, பின்னந் தலையில் தேங்காய் நார் போல தலைகேசம். கம்பி மீசை, நீக்ரோ உதடுகள், கொசுவலை பனியனும், லுங்கியும் அணிந்திருந்தான்.

கிருஷ்ணாபுரம் பேரூராட்சியின், 'ஆல் இன் ஆல்' அழகுராஜா, மண்டைக்கசாயம். 'பிளம்பிங், ஒயரிங், மேஸன்' மற்றும் இரும்புக் கொல்லன் பணிகளை சிறப்பாக செய்வான்.

கயிற்றுக்கட்டில் அருகே, மர ஸ்டூல் மேல், மண் சட்டியை வைத்தாள், அவனது மனைவி. அதில், பொரித்த வயல் நண்டுகளை கொட்டினாள்.

தன் முதுகுக்கு பின்னிருந்து சாராய பாட்டிலை எடுத்தான், மண்டைக்கசாயம். ஒரு வாய் சாராயம் குடித்து விட்டு, ஒரு வயல் நண்டை வாய்க்குள் போட்டு மென்றான்.

''வயல் நண்டு, மணப்பாறை முறுக்கு மாதிரி மொறுமொறுன்னு இருக்கு,'' என்று, ரசித்து சாப்பிட்டான்.

துாரத்தே புழுதி கிளம்பியது. பார்க்கும்போதே நான்குக்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள், மண் சாலையில் முளைத்தன.

முதலில் வந்த கார், மண்டைக்கசாயத்தின் அருகே கிரீச்சிட்டு நின்றது. அதிலிருந்து மார்பு வரை பேன்ட்டை துாக்கி, 'இன்' பண்ணி, பட்டை பெல்ட் போட்ட ஆசாமி இறங்கினார். அவருக்கு பின் அவரின் நான்கைந்து அல்லக்கைகள் குதித்தனர்.

துருத்தும் தொப்பையை எக்கியபடி மண்டைக்கசாயத்திடம் வந்த முதலாமவர், ''வணக்கம் மண்டைக்கசாயம் சார்... என் பெயர் கொளஞ்சியப்பன்!''

''இருக்கட்டும், அதுக்கென்ன?''

''சிதம்பரம் நகர், சிந்தியன் வங்கி மேனேஜர்.''

''சரி!''

அவித்த நான்கு வாத்து முட்டைகளை கொண்டு வந்து வைத்தாள், மண்டைக்கசாயத்தின் மனைவி. ஒரு முட்டையை வாய்க்குள் திணித்துக் கொண்டான், ம.கசாயம்.

''அய்யா, உங்களை பார்க்கத்தான் நாங்க மொத்தமா வந்துருக்கோம். கொஞ்சம் பேசலாமா?''

''கூட்டணி பேச வந்திருக்கும் கட்சி தலைகள் மாதிரி தெரியுறீங்க... சாதாரண பிளம்பர் என்கிட்ட உங்களுக்கென்ன வெட்டிப் பேச்சு?''

''நீங்க, சாதாரணமானவர் இல்ல; எங்க குலசாமி.''

''எக்ஸ்ட்ரா பாட்டில் சாராயம் வச்சிருக்கேன். வாத்து முட்டையை கடிச்சுக்கிட்டு, அரை பாட்டில் சாராயம் குடிக்கறீங்களா?''

''அய்யே... நாங்க அதுக்கு வரலப்பா... வேற ஒரு தலை போற வேலை.''

''பீடிகை போடாம விஷயத்துக்கு வா, தொப்பை சார்!''

''உங்க பெயர் ஐ.மண்டைக்கசாயம், சன் ஆப் இருளாண்டி. அட்ரஸ், 28 குளக்கரை ரோடு, கிருஷ்ணாபுரம் பேரூராட்சி, சிதம்பரம் தாலுகா. சரியா?''

''சரி!''

''எங்க சிந்தியன் வங்கியில, உங்களுக்கு, ஒரு சிறு சேமிப்பு கணக்கு இருக்கு. ---ஏ.டி.எம்., கார்டும், காசோலை புத்தகமும் வழங்கி இருக்கிறோம்!''

''ஆமா இருக்கு. அதுக்கென்ன?''

''உங்க கணக்கில் எப்பவுமே குறைவான தொகை தான் இருக்கும். ௧௦ நாட்களுக்கு முன், வங்கி அதிகாரிகளான நாங்க, ஒரு தப்பு பண்ணிட்டோம். தவறுதலா, உங்க வங்கிக் கணக்கில், மூன்று கோடி ரூபாய் வரவு வச்சிட்டோம்.''

''எப்படி?''

''கிருஷ்ணாபுரத்துக்கு தார் சாலை, புது வாட்டர் டேங்க், கருவேலம் மரங்கள் அழிப்பு பணிகளுக்கு, 'கான்டிராக்டர்' ஞானதிரவியத்துக்கு, அரசு, மூன்று கோடி ரூபாய், 'பில் சாங்ஷன்' பண்ணி, எங்க வங்கிக்கு அனுப்பி வைச்சுது.

''ஞானதிரவியத்தின் வங்கி கணக்கு, 22ல் முடியும். உங்க வங்கி கணக்கு, 12ல் முடியும். பணம் அனுப்பும் போது, தவறுதலா, உங்க வங்கி கணக்கை குறிச்சுட்டாங்க; பெயரை கவனிக்காம, நாங்களும் மூன்று கோடி ரூபாயை, உங்க கணக்குக்கு, 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டோம்.''

''அச்சச்சோ... அப்படியா?''

''வேலைப்பளுல, நடந்த தவறை, 10 நாளா கவனிக்காம, 'அசால்ட்டா' இருந்துட்டோம். இன்னைக்கு காலைல, எங்ககிட்ட வந்து புகார் பண்ணினார், ஞானதிரவியம். உங்க வங்கி கணக்கை, 'செக்' பண்ணினோம்.

''நாங்க பணம் போட்ட மறுநாளே முழு பணத்தையும் நீங்க எடுத்துட்டீங்கன்னு தெரிஞ்சுக்கிட்டோம். பணத்தை எடுத்த வங்கி கிளையிலிருந்து, டி.டி.எஸ்., கழிச்சிருக்காங்க. 2.௭௦ கோடி ரூபாய் உங்க கைக்கு கிடைச்சிருக்கு.

''அனாமத்தா வந்த பணம் தானே? லாபத்துல நஷ்டம்ன்னு டி.டி.எஸ்., கழிக்கிறதை பொறுத்துக்கிட்டேன்,'' என்றான், ம.கசாயம்.

கொளஞ்சியப்பனின் பின்னாளிலிருந்து வெளிப்பட்டு தாம்துாம் என குதித்தார், ஞானதிரவியம்.

''அடப்பாவி... அன்னாடங்காய்ச்சி பய நீ. உன் வங்கி கணக்குல லம்ப்பா ஒரு தொகை போடப்பட்டா, வங்கி அதிகாரிகள்கிட்ட, 'ரிப்போர்ட்' பண்ணிருக்கணும்; அத விட்டுட்டு பணத்தை சுருட்டிட்டியே. பணத்தை எங்க வச்சிருக்க? உடனடியாக பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படை,'' துள்ளினார், ஞானதிரவியம்.

''யோவ் ஞானதிரவியம்... நீ, ஏன் என்கிட்ட சண்டை இழுக்கிற? பிரச்னை எனக்கும், சிந்தியன் வங்கிக்கும் இடையே... நாங்க பேசிக்கிறோம்.''

''அய்யா... ஒரு பத்தாயிரம் செலவு பண்ணிருப்பியா? பரவாயில்லை, மீதியைக் கொண்டா,'' ஒருமைக்கு தாவினார், வங்கி மேலாளர்.

''சாரி மேனேஜர்... பணம் பூராத்தையும் செலவு பண்ணிட்டேன்.''

''ரெண்டே முக்கால் கோடியை, ஏழெட்டு நாள்ல செலவு பண்ணிட்டியா... வாய்ப்பே இல்லை...''

''மனமிருந்தா மார்க்கபந்து. பணத்தை, பேருராட்சி இளைஞர்களிடம் பிரிச்சு குடுத்திட்டேன்.''

''பிச்சை எடுக்குமாம் -- அத பிடுங்குமாம் --ன்னு இருக்கு, உன் பேச்சு. யார் வீட்டு பணத்தை யாருக்கு பங்கு பிரிச்சுக் குடுக்கிறது... போலீஸ்ல புகார் பண்ணி, உன்னையும், உன் சகாக்களையும் களி திங்க வைக்கிறேன்.''

''மேனேஜா, எங்களை எதுக்கு போலீஸ்ல புடிச்சுக் குடுப்ப... வங்கிக்குள்ள புகுந்து, கொள்ளை நடத்தினோமா... இல்ல, ஏ.டி.எம்., அறைக்குள்ள புகுந்து இயந்திரத்தை துாக்கிட்டு போனோமா...

''அக்கவுன்ட் நம்பரை தப்பா போட்டு, வங்கிக்கு பணம் அனுப்பினது, அரசு அதிகாரிகள். அவன் தான் அக்கவுன்ட் நம்பரை தப்பா போட்டான்னா, பெயரை சரி பார்க்காம, பணத்தை என் வங்கி கணக்குல போட்ட வங்கி ஊழியர்கள் நீங்க.''

''பணத்தை பங்கு பிரிச்சுக்கிட்ட உன் நண்பர்களின் மொபைல் எண்களை கொடு!''

''மேனேஜா, நீ லேட்டு. போன வாரமே ஒரு இளைஞன், தன் பங்கு பணத்துல, ஜே.சி.பி., இயந்திரம் வாங்கி, ஊர் முழுக்க இருக்கிற கருவேல மரங்களை வேரோடு பிடுங்கிகிட்டு இருக்கான்.

''ஒரு இளைஞன், தன் பங்கு பணத்துல, புது வாட்டர் டேங்க் கட்ட ஆரம்பிச்சிட்டான். ஒரு இளைஞன், பேரூராட்சியின் மண் சாலையை, தார் சாலையாக்கும் பணியில் இருக்கிறான். தவிர, ஊர்ல இருக்கிற ரெண்டு குளங்களை துார் வாருகிறோம். பெண்கள் படிக்கும் பள்ளியில் கழிப்பறைகள் கட்ட துவங்கியிருக்கிறோம்!''

''ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேன்ற பழமொழி உனக்கு சரியா இருக்கு.''

''ஞானதிரவியத்துக்கு அரசாங்கம், 'சாங்ஷன்' பண்ணிய பணத்தை பற்றி கொஞ்சம் ஆராயலாமா?''

''என்னய்யா ஆராய?'' குதித்தார், ஞானதிரவியம்.

''பழைய வாட்டர் டேங்கை இடிச்சிட்டு புது வாட்டர் டேங்க் கட்றது, கருவேல மரம் அகற்றுறது, ஊருக்கு தார் சாலை போடுறது, ஊர் குளங்கள் துார் வார்ற பணிகளுக்காக ஞானதிரவியத்திடம், 'கான்டிராக்ட்' கொடுக்கப்பட்டது. இந்த பணிகளுக்கான மொத்த மதிப்பீடு, மூன்று கோடி!''

''அரசியல் பேசாதே!''

''அரசியல்வாதிகளுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டினார், ஞானதிரவியம். எந்த பணிகளுமே செய்யாமல் பணத்தை பிரித்துக் கொள்ள முடிவெடுத்தனர். புது வாட்டர் டேங்க் கட்டாம, பழைய வாட்டர் டேங்கை டிங்கரிங் பண்ணினர்.

''ஜே.சி.பி., இயந்திரத்தை சில நாட்கள் வாடகைக்கு எடுத்து, கருவேல மரங்களை அகற்றுவது போல, பூச்சி காட்டினர். தார் சாலை போடவே இல்லை. குளங்களை துார் வாரவே இல்லை. எல்லா வேலைகளும் நடந்ததாக ஆவணம் தயாரித்தனர்.

''உனக்கு, 20 சதவீதம்; எனக்கு, 30 சதவீதம்; அவனுக்கு, 10 சதவீதம்; இவனுக்கு, 10 சதவீதம் என, தன் சொந்த பணத்தை எடுத்து பிரிச்சுக் கொடுத்துட்டார்.

''அரசியல்வாதிகளுக்கு தன் கை பணத்திலிருந்து கமிஷன்களை கொடுத்துவிட்டு, லம்ப்பா, முழுத் தொகைக்காக காத்திருந்தார், ஞானதிரவியம். உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா கதை ஆகி போச்சா ஞானதிரவியம் கதை!''

வளைந்து, நெளிந்து, குழைந்தார், ஞானதிரவியம்.

''இதுவரை ஊர் பணிகளுக்கான செலவு பண்ணின தொகையை தவிர, மீதி தொகையை குடுத்திருங்கடா செல்லங்களா.''

''பத்து பைசா தர முடியாது. 2.௭௦ கோடி ரூபாயை, எடுத்த அரை மணி நேரத்தில், சிந்தியன் வங்கியில இருந்த, என் வங்கி கணக்கை, 'குளோஸ்' பண்ணிட்டேன்.

''பணம் எங்ககிட்ட நோட்டா இல்ல, எல்லாம் ஜே.சி.பி., இயந்திரமா, சிமென்ட்டா, தாரா, ஜல்லியா பொருட்கள் ஆயிருச்சு. வக்கீலை, 'கன்சல்ட்' பண்ணிட்டோம். சட்டரீதியா உங்களால எங்களை ஒண்ணும் பண்ண முடியாது!''

''குடிகாரப்பய, ஊர் நலம், பொதுநலம் பேசுற தியாகியா பிலிம் காட்டுற!''

''குடிக்கிறவன்க அயோக்கியன்க, குடிக்காதவங்க யோக்கியன்கன்னு எவன் சொன்னது... இப்ப நான் தின்னேன் பார், வயல் நண்டு. நேத்து நான், வயலுக்குள்ள இறங்கி பிடிச்சது. நாங்க வளக்கிற வாத்துகள் இட்ட முட்டைகளை அவிச்சு உரிமையா தின்கிறேன். ஒரு பைசா உங்க பணமில்லை.''

''எந்த கேசும் போடாம, 'லாக் - அப்'ல வச்சு, 10 - 15 நாள் அடிச்சு, துவைச்சா, புத்தி வரும்,'' என பாய்ந்தார், மப்டியில் இருந்த உதவி ஆய்வாளர்.

திடீரென்று காட்சியமைப்புக்குள் பூகம்பம் பூத்தது.

நுாற்றுக்கணக்கான ஊர் மக்கள், 'ஹோ'வென இரைந்தபடி ஓடி வந்து, மண்டைக்கசாயத்தை சுற்றி, மனித அரண் அமைத்தனர்.

'யாராவது மண்டைக்கசாயத்தை தொட்டீங்க, துவம்சம் பண்ணிருவோம்... இரண்டே முக்கால் கோடி ரூபாய்ல எல்லா ஊர் பணிகளையும் முடிச்சிட்டு, உங்க எல்லாரையும் கூப்பிடுறோம்...

'ஊழலில் யாருக்கோ போக வேண்டிய பணம், பொது நலனுக்கு எப்படி செலவாகி இருக்கும்ன்னு புரிஞ்சுப்பீங்க. இந்த, 2.70 கோடி பணம், ஞானதிரவியம் பணமில்ல, கிருஷ்ணாபுரம் மக்கள் நலனுக்காக, சாமி போட்ட பணம்...' என்றனர்.

வங்கி மேலாளரும், வங்கி கணக்கை கையாளும் வங்கி ஊழியரும், ஞானதிரவியத்தின் வங்கி கணக்கு எண்ணை தவறுதலாக போட்ட அரசு ஊழியர்களும், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

விசாரணை தொடர்கிறது. வீடு, வயல், கார் எல்லாவற்றையும் விற்று, வாங்கிய கடனை அடைத்து, திவாலானார், ஞானதிரவியம்.

கிருஷ்ணாபுரத்தின் அனைத்து நலப்பணிகளும் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டன. கட்டிய கொத்தனார், சித்தாள்கள், சாலை பணியாளர்கள், துார் வாரிய கூலித்தொழிலாளிகளை வைத்தே, அவை திறந்து வைக்கப்பட்டன.

இரண்டு ஆண்டுகள் சென்ற பின்...

புது வீட்டுக்கு மின் இணைப்பு பணிகள் செய்து கொண்டிருந்த மண்டைக்கசாயத்தின் மொபைல் சிணுங்கியது. எடுத்து பார்த்தான். கணக்கு ஆரம்பித்த புது வங்கியிலிருந்து குறுஞ்செய்தி.

உங்க---------- --வங்கி கணக்கில், 60 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது!

''ஹைய்யா... சாமி திரும்ப பணம் போட்டுருக்கு,'' குதுாகலித்தான், மண்டைக்கசாயம்.
ஆர்னிகா நாசர்

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்

    பரவா இல்ல.

  • MUNIAPPAN. A - Kovilpatti,இந்தியா

    அடிமட்ட ஊழியருக்கு உள்ள ஞானம். அது ஊராரின் ஒத்துழைப்புடன் நல்ல காரியத்திற்கு நல்ல மதி நுட்பத்துடன் செயல் படுத்திய விதம் அற்புதம். அப்புறம் அடுத்து என்ன? வரவான ரூ.60,00,000/-அடுத்த கட்ட ஊரின் அடிப்படை தேவைக்கு பயன் படுத்தயா

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement