நாம் விரும்பியபடி
ஆழமாக அலசவில்லை
நடுநிலை தன்மையில்லை
ஆதங்கப்பட்டாலும்
சகிப்புத்தன்மையுடன்
நாளிதழ்கள் வாசிக்கத்
தவறுவதில்லை!
காலியாய் கிடக்கும்
குப்பைத் தொட்டியில்
குப்பையைக் கொட்டாமல்
பலரும் சுற்றி சுற்றி
கொட்டுகின்றனரே...
சகிப்புத்தன்மையுடன்
குப்பை மீது நடந்து
தொட்டியில்
கொட்டி வருகிறோம்!
லஞ்சம் வாங்குவதும் குற்றம்
கொடுப்பதும் குற்றமென
அறிவிப்பு பலகை
கண்ணில் பட நம்
காரியம் நடந்தேற
சகிப்புத் தன்மையுடன்
கையூட்டு கொடுத்து
நகர்கிறோம்!
குண்டும் குழியுமான ரோடுகள்
போனில் பேசியபடி
பலரும் வாகனம் ஓட்ட
சிலரின் விதிமீறல்கள்
கண்ணில் பட
கடுகடுத்தாலும்
சகிப்புத்தன்மையுடனே
சாலையில் பயணிக்கிறோம்!
துர் நாற்றத்துடன்
தேங்கி நிற்கும்
சாக்கடை நீர்
பெருகிவிட்ட நாய் தொல்லை
சாக்கடையும், தெருக்குழாயும்
இணைந்தே செல்கிறது
கொசுக் கடிக்கு மத்தியில்
சகிப்புத் தன்மையுடன்
குழாயில் நீர் பிடிக்கிறோம்!
அப்பட்டமாகத் தெரிகிறது
தரமில்லா பணிகள் என
தட்டிக் கேட்க முடியாது
சகிப்புத் தன்மையுடன்
பார்த்து விட்டு செல்கிறோம்!
ஆள்பவர்களிடமும்
அதிகாரிகளிடமும்
சரியாக நிர்வாகமிருந்தால்
மக்கள் எதையும்
சகித்துப் போக வேண்டியதில்லை
எதையும் சந்தோஷமாய்
கடக்கலாம்!
வி.எஸ். ராமு, செம்பட்டி,
திண்டுக்கல்.
கவிதைச்சோலை! - சகிப்பு!
வாசகர் கருத்து (2)
-
-
பாராட்டுக்கள்
இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்