Advertisement

திண்ணை!

ஒரு சமயம், எட்வர்ட் தாம்சன் என்ற ஆங்கிலேயர், காந்திஜியிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, 'தற்சமயம் உலகம் முழுவதிலும் உள்ள காடுகளில் வசிக்கும் வன விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இது எனக்கு கவலை அளிக்கிறது...' என்றார்.
புன்முறுவலுடன், 'அதனாலென்ன, நகரங்களில் தான் அவற்றின் எண்ணிக்கை பெருகி வருகிறதே...' என்றார், காந்திஜி.கவலையோடு இருந்த, எட்வர்ட் தாம்சன், காந்திஜியின் நகைச்சுவையைக் கேட்டு, சிரித்து விட்டார்.
***

தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த காந்திஜி, திருச்சிக்கு வந்தார்.அவரைப் பிடிக்காத ஒரு கோஷ்டி, கறுப்புக் கொடிகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். ஆங்காங்கே கூட்டமாக நின்று, காந்திஜியை பற்றி கேவலமாக எழுதிய துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வினியோகித்தனர்.
'காந்தியே, நீ ஹிந்து மதத் துரோகி. ஹிந்து மதத்தை பூண்டோடு அழிக்க புறப்பட்ட துவேஷி. நீ உடனே திரும்பிப் போ...' என்று, முழக்கமிட்டனர்.அவற்றைக் கண்டும், கேட்டும் அமைதியாக இருந்தார், காந்திஜி.'பாபுஜி, இந்த அவமரியாதையை...' என்றார், அருகிலிருந்த உதவியாளர்.
'இதில் கவலைப்பட ஒன்றுமே இல்லை. என்னை எதிர்த்து பிரசாரம் செய்ய, அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அந்த உரிமையில் தலையிட எனக்கு உரிமை இல்லை. அவர்களின் உணர்வுகளுக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும்...' என்று அமைதியுடன் கூறினார், காந்திஜி.
அன்று மாலை, அங்கு நடந்த பிரார்த்தனை கூட்டத்தில், 'எதிர்ப்புப் பிரசாரத்தைத் தவறான முறையில் நடத்தாமல், ஒழுங்காக அவர்கள் நடத்தியது எனக்கு மகிழ்ச்சியையே அளிக்கிறது...' என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார், காந்திஜி.
***

ஒருசமயம், பஞ்சாப் மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த காந்திஜிக்கு, உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு வைத்தியம் செய்ய வந்தார், டாக்டர்.'அதிக பிரசாரம் மேற்கொண்டதால், எனக்கு களைப்பு தான் ஏற்பட்டுள்ளது. மற்றபடி, எனக்கு உடலில் எந்த வியாதியும் இல்லை...' என்று கூறிய காந்திஜி, அந்த டாக்டரிடம் தன் உடலைக் காட்ட மறுத்து விட்டார்.
ஆனால் டாக்டரோ, 'பாபுஜி, தங்கள் உடலை பரிசோதித்து பார்க்காத வரை, என் மனது சமாதானமாகாது. ஆகவே, ஒரே ஒருமுறை அனுமதியுங்கள்...' என்றார்.
'நீங்கள் சமாதானமாக வேண்டுமென்றால் நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், என் உடலை பரிசோதிக்க, நீங்கள் எனக்கு, பீஸ் தரவேண்டும்...' என்றார்.
அதற்கு மறுப்பு ஏதும் சொல்லாத டாக்டர், தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் காந்திஜியிடம் கொடுத்து, 'தங்களை பார்க்க வருவதற்கு முன், ஒரு நோயாளியை பார்க்கப் போனேன். அவர் கொடுத்த பீஸ் முழுவதையும் தங்களிடம் கொடுத்து விட்டேன். இப்போது தங்கள் உடலைப் பரிசோதிக்கலாமா...' என்று கேட்டார்.
'தாராளமாக...' என்றார், காந்திஜி.அவரிடமிருந்து பெற்ற பணத்தை, தன் ஹரிஜன நல நிதியில் சேர்த்து விட்டார், காந்திஜி.
***

வார்தா ஆசிரமத்தில் காந்திஜி இருந்தபோது, பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராயாக லின்லித்கோ பிரபு (பதவிக்காலம் 1936 - 1943) இருந்தார்.
தன் கருத்துக்களை அடிக்கடி கடிதம் மூலமாக லின்லித்கோ பிரபுவுக்கு தெரிவித்து வந்தார், காந்திஜி.
அது, காந்திஜிக்கு மிகவும் சிரமம் என்று கருதிய லின்லித்கோ பிரபு, தம் செலவிலேயே ஆசிரமத்தில் தொலைபேசி இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.
உடனே, ஆசிரமவாசிகளிடம் கண்டிப்புடன், 'வைஸ்ராயின் வசதிக்காகத்தான் இங்கே தொலைபேசி இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை நான் உபயோகப்படுத்த மாட்டேன். நீங்களும் உபயோகப்படுத்தக் கூடாது. வைஸ்ராய் அழைத்துப் பேசினால் மட்டுமே நாம் பேச வேண்டும்...' என்றார், காந்திஜி.
இதன் காரணமாக வைஸ்ராய், காந்திஜியின் மீது வைத்திருந்த மதிப்பு மேலும் அதிகமாகியது.
***

காந்திஜியின் சபர்மதி ஆசிரமத்தில், உணவு நேரத்தில், இரண்டு முறை மணி அடிக்கப்படும். சாப்பிட வேண்டிய ஆசிரமவாசிகள் இரண்டாவது மணி அடிப்பதற்குள், உணவுக் கூடத்துக்கு சென்று விடவேண்டும். இல்லையென்றால், இரண்டாவது பந்திக்காக காத்திருக்க வேண்டும். இரண்டாவது மணி அடித்ததும், சமையல்கூட கதவை மூடி விடுவர்.
ஒருநாள், காந்திஜியே உணவருந்தத் தாமதமாகி விட்டார். அவருக்கு பின்னே வந்த உபாத்தியாயர் ஹரிபாபு, வராந்தாவில் காந்திஜி நிற்பதைப் பார்த்து லேசாக சிரித்து, 'பாபுஜி, இன்று நீங்களும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு விட்டீர்கள் போலிருக்கிறதே...' என்றார்.'சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் தானே...' என்று கூறி புன்னகைத்தார், காந்திஜி.
'சற்று பொறுத்திருங்கள். நீங்கள் அமர ஒரு நாற்காலி எடுத்து வருகிறேன்...' என்று சொன்ன ஹரிபாபுவை தடுத்தார், காந்திஜி.'வேண்டாம். ஒரு குற்றவாளி தண்டனையை முழுமையாக அனுபவிக்க வேண்டும். தண்டனை நேரத்தில், எந்த சலுகையும், வசதியையும் எதிர்பார்க்கக் கூடாது. அதில் தான் முழுமையான இன்பம் இருக்கிறது...' என்றார்.
***

கடந்த, 1942ல் ஆகாகான் மாளிகையின் ஓர் அறையில், காந்திஜியும், கவிக்குயில் சரோஜினி நாயுடுவும் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது, சரோஜினி நாயுடு, 'அண்ணலே, தங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். கேட்கலாமா...' என்றார்.
'ஓ... தாராளமாக கேளுங்கள்...' என்றார், காந்திஜி.'ஆண்டவன் ஏழைகளிடத்தில் ரொட்டி வடிவில் வருகிறான் என்ற வாக்கியத்தை சொன்னவர் யார்...' என்று கேட்டார், சரோஜினி நாயுடு.
உடனே காந்திஜி, 'எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது. ஆனால், எங்கே கேட்டேன் என்று தெளிவாகச் சொல்லத் தெரியவில்லை. யார் இந்த அழகான நீதியை சொன்னது? அவர் நிச்சயம் நன்கு கற்றறிந்த ஒரு பெரியவராகத்தான் இருக்க வேண்டும்...' என்றார்.அதைக்கேட்டு புன்சிரித்த சரோஜினி நாயுடு, 'அந்தக் கற்றறிந்த பெரியவர் தாங்கள் தான். தங்களின் ஹரிஜன் பத்திரிகையில் தான் இதை முதன் முதலில் எழுதினீர்கள். எவ்வளவு ஞாபக மறதி பார்த்தீர்களா உங்களுக்கு...' என்றார்.அதைக் கேட்டதும் சிரித்தார், காந்திஜி.
***

நடுத்தெரு நாராயணன்

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement