அன்புள்ள அம்மா —
என் வயது, 37. எங்களது காதல் திருமணம். மனைவி வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். ஒரு பெண் குழந்தை உள்ளது. வயது, 9. எனக்கு அப்பா மற்றும் உடன் பிறந்தவர்கள் இல்லை; அம்மா உள்ளார்.
நான், கம்ப்யூட்டர் சென்டர் வைத்துள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக சென்ற வாழ்க்கையில், 'கொரோனா' காலத்தில், நிதி பற்றாக்குறையால் வேறு தொழில் செய்ய நினைத்து, பங்கு சந்தையில் ஈடுபட்டேன்.முதலில் நல்ல லாபம் பார்த்தாலும், பின்பு அதிகமாக நஷ்டம் வந்தது. அதை சரிகட்ட, கடன் வாங்கி பங்கு வர்த்தகம் செய்து, அதிலும் நஷ்டம் ஆனேன்.
இதற்கிடையில், கோழி பண்ணை வைத்து தருவதாக சொன்னார், மாமனார். ஆனால், அவர்கள் வீட்டோடு இருக்க கூறினார். வயதான அம்மாவை பராமரிக்க வேண்டியதால், எனக்கு அதில் விருப்பம் இல்லை.அம்மாவிற்கும், என் மனைவிக்கும் ஒத்து வராததால், இருவரையும் அருகில் தனித் தனி வாடகை வீட்டில் வசிக்க வைத்தேன். தற்போது, மகளுடன், அவள் அப்பா வீட்டுக்கு சென்று விட்டாள், மனைவி. என்னிடம் கேட்காமல், மகளை வேறு ஒரு பள்ளியில் சேர்த்து விட்டாள்.மகளும், மனைவியும் தினமும் என்னுடன் பேசுவர். என்னை அங்கு வர சொல்கின்றனர்.
தற்போது, அம்மாவை விட்டு எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். அம்மாவிற்கு என்னை விட்டால் யாருமே இல்லை. அப்பா இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு என்னை வளர்த்தார், அம்மா.இனி நான் என்ன செய்வது. தனியாக வீட்டில் இருப்பது மிக கொடுமையாக இருக்கிறது. மகள் இல்லாமல் ஒருநாளை கடத்துவது, 10 நாளை கடத்துவது போல இருக்கிறது.
அம்மா இருக்கும் வரை, அவர்களை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என உறுதியாக இருக்கிறேன். சில கேள்விகளுக்கு விடை இல்லாமல் தவிக்கிறேன். தற்போது, கடன் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. அதை சரிகட்டவே பல ஆண்டுகள் ஆகும். குடும்ப பிரச்னையும், கடன் பிரச்னையும் தினமும் கொல்வதால், எனக்கு அடிக்கடி தற்கொலை எண்ணம் வருகிறது. ஆனால், எனக்கு நீண்ட நாள் வாழ ஆசையாக உள்ளது. மீண்டும், அம்மா, மனைவி, மகள் என, குடும்பத்துடன் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ ஆசையாக இருக்கிறது. ஆனால், என்ன செய்வது என்று தெரியவில்லை. தயவுசெய்து எனக்கு தகுந்த ஆலோசனை தரவும்.
— இப்படிக்கு,
ஜெ.ரவிச்சந்திரன்.
அன்பு மகனுக்கு
பொதுவாக காதல் திருமணம் செய்து கொண்டோர், திருமண வாழ்க்கையில் பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுவதில்லை. காதல் திருமணம் செய்து கொண்ட அவர்களது வீடுகளில் எதிர்மறை அதிர்வுகள் தடதடக்கின்றன.
உங்களுக்கு பெண் குழந்தை பிறந்த பிறகு, மனைவி வீட்டார் உங்களோடு ராசியாகி இருப்பர் என, நம்புகிறேன். மாமனார், பணக்காரர் என்பதால், பொருளாதார சிக்கல் ஏற்பட்டால், தன்னை துாக்கி பிடித்து நிறுத்துவார் என்ற அசட்டு நம்பிக்கையும் உனக்கு கூடவே பூத்துள்ளது.
அம்மா பிள்ளையாக வளர்வோர் பெரும்பாலும், வாழ்வின் கொண்டை ஊசி வளைவுகளை சமாளித்து பயணிக்க தவறி விடுகின்றனர். அப்படி தவறவிட்ட ஆண்களில் நீயும் ஒருவன்.
திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகியும் நீ, இன்னுமே மனைவி பக்கமும் சாயாமல், அம்மா பக்கமும் சாயாமல் இரண்டும் கெட்டானாய் நிற்கிறாய். இது வெட்கக்கேடு.அம்மா பெற்றாள், வளர்த்தாள், ஒருத்திக்கு திருமணம் செய்து வைத்தாள். இது, ஓர் ஆணிண் ஆயுளில் முதல், 25 ஆண்டுகள். ஆனால், அதற்கு அடுத்த, 50ஆண்டுகள், ஒரு ஆண், மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும்.
அம்மா கொட்டி வளர்த்த தாய்பாசத்தை விட, மனைவி தரும் தாம்பத்யத்தின் கன பரிமாணம் அதிகம். அம்மாவுக்கும், மகனுக்கும் இடையே, மெல்லிய தடுப்பு உறவுச் சுவர் உண்டு. ஆனால், கணவனுக்கும், மனைவிக்கும் இடையே எந்த ஒளிவுமறைவும் இல்லை. திருமணமான மகனின் எதிர்காலத்துக்காக ஒரு தாய், மகனிடமான தன் முக்கியத்துவத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். மகனும் பின்னிருக்கையில் அம்மாவை அமர்த்தி, முன்னிருக்கையில் மனைவியை அமர்த்த வேண்டும்.
இனி, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
* வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பது, இழிவான விஷயமல்ல. எத்தனையோ வீடுகளில் வீட்டோடு இருக்கும் மாப்பிள்ளையை, மகன் போல் பாவிக்கின்றனர். ஒரு கட்டத்தில் மாமனார், தன் கையிலுள்ள அதிகாரத்தை மருமகனிடம் கொடுத்து சுயமாய் நிர்வகிக்கச் சொல்கிறார்.
வீட்டோடு மாப்பிள்ளை, 'கான்செப்ட்' வெற்றி பெற, இருதரப்பிலும் சமரசமும், விட்டுக் கொடுத்தலும், 'ஈகோ' தொலைத்தலும் தேவை
* முறையான திட்டமிடல் இல்லாது, அதீத கற்பனை உணர்வுடன் எந்த தொழில் தொடங்கினாலும் அது வெற்றி பெறாது. சூதாடும் மனோபாவம் ஆபத்தானது
* ஏற்கனவே கடனில் இருக்கும் நீ, எதற்கு தனித்தனி வீடுகளை வாடகைக்கு அமர்த்தி அம்மா மற்றும் மனைவி, மகளை குடியமர்த்த வேண்டும்?
* தொடர்ந்து கம்ப்யூட்டர் சென்டரே நடத்து. கணினி தொடர்பான அனைத்து வருமான வழிகளை திறந்து வை
* அம்மாவின் மேல் இருக்கும் பிரியத்தால், குடும்ப வாழ்க்கையை பாழடித்து விடாதே. அம்மாவிடம் இதம் பதமாக பேசி, மாதா மாதம் பணம் கட்டி வசதியாய் பராமரிக்கும் முதியோர் இல்லத்தில் அவரை சேர்
* தற்கொலை எண்ணம், வாழத் தெரியாத அறிவிலிகளின் பேதைமை தனம்; அதை கை கழுவு மனைவி, மகளுடனான தகவல் தொடர்பை மேம்படுத்து.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!