Advertisement

வெளிப்பட்டது!

வனவாசத்தின் போது, பாண்டவர்களும், திரவுபதியும், காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த நேரத்தில், ஜடாசுரன் என்பவன் மாறுவேடம் பூண்டு, பாண்டவர்களிடம் வந்தான்.

'நான், அஸ்திரங்களை பற்றி நன்கு அறிந்தவன்; சாமர்த்தியசாலி. உங்களுடன் கொஞ்ச காலம் இருக்க விரும்புகிறேன்...' என்றான்.தருமர் அனுமதித்ததுடன், 'திறமைசாலியான இவனை பாதுகாக்க வேண்டியது நம் கடமை...' என்று, அவனை பாதுகாத்து வந்தார்.

'இவர்களிடம் உள்ள ஆயுதங்களையும், இவர்களையும் துாக்கிக் கொண்டு போய் விடவேண்டும்...' என்ற எண்ணத்திலேயே, பாண்டவர்களுடன் இருந்தான், அசுரன். அவன் எதிர்பார்த்த காலமும் வந்தது.பாண்டவர்களின் பாதுகாவலனான பீமன், ஒருநாள் வேட்டைக்கு போயிருந்தான். இதுதான் சரியான சந்தர்ப்பம் என, தன் உண்மையான பெரும் அசுர வடிவைக் கொண்டு, பாண்டவர்களின் ஆயுதங்களையெல்லாம் கவர்ந்து கொண்டான்.

திரவுபதியையும், மற்ற பாண்டவர்களையும் துாக்கிக் கொண்டு ஓடத் துவங்கினான்.ஞானியான சகாதேவன் மட்டும் தன்னை விடுவித்து, தன் கத்தியையும் அசுரனிடமிருந்து பறித்து, பீமனை நோக்கி கூவத் துவங்கினான்.தீங்கு செய்த தீயவனுக்கு, நல்ல புத்தி சொன்னார், தர்மர்.

'பாதுகாத்தவருக்கு பாதகம் நினைக்கிறாய்; விஷத்தை எடுத்து நீயாகவே குடித்து விட்டாய்...' என்றெல்லாம் சொல்லி, அதிக பாரம் கொண்டவராகத் துவங்கினார்.தர்மரின் பாரம் அதிகமானதால், அசுரனின் வேகம் தடைப்பட்டது. அதற்குள் வந்து விட்ட பீமன், நொடிப் பொழுதில், நடந்தவைகளை புரிந்து கொண்டான். 'ஆயுதங்களை யெல்லாம் நீ பாதுகாத்து வரும்போதே, உன்னை புரிந்து கொண்டேன். நீ அரக்கன் என்பது, எனக்கு ஏற்கனவே தெரியும். இருந்தாலும், போனால் போகிறது என்று உன்னைக் கொல்லாமல் விட்டேன்.

'மரியாதையாக இவர்களையும், ஆயுதங்களையும் கீழே விட்டுவிட்டு, ஓடிப்போய் விடு. இல்லையேல் இறந்து போவாய்...' என்று எச்சரித்தான், பீமன்.

முதலில் பீமனுடன் சண்டை போட்டு, இவனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், தன்னிடம் இருந்தவைகளை எல்லாம் கீழே போட்டு விட்டு, போரிடத் துவங்கினான்.

எதிர்த்து வந்த அசுரனை, சில நிமிடங்களிலேயே கொன்றான், பீமன்.அசுரன் கொல்லப்பட்டதை அறிந்ததும், வனத்திலிருந்த முனிவர்களெல்லாம் வந்து, பாண்டவர்களை வாழ்த்தினர்.

தீமை பலப் பல வடிவங்களில் வரும்; கெடுதல் செய்யும். எச்சரிக்கையுடன் இருந்து, அவைகளை வெற்றி கொள்ள வேண்டும் என, மகாபாரதத்தில் வியாசர் கூறிய கதை இது.

பி. என். பரசுராமன்

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement