Advertisement

இளஸ்... மனஸ்... (165)

அன்பு பிளாரன்ஸ் அம்மா...என் வயது, 35; இல்லத்தரசியாக உள்ளேன். கணவர், பன்னாட்டு நிறுவனத்தில், நல்ல சம்பளத்துடன் கூடிய பணியில் இருந்தார்; கொரோனா தொற்று நோய் பரவலால் வேலை இழந்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், குறைந்த சம்பளத்தில் சிறிய வேலை ஒன்று கிடைத்துள்ளது.
எனக்கு கொரோனா நோய் வந்து படுத்த படுக்கையாக இருந்து மீண்டேன். இருவரும், இரண்டு தவணை தடுப்பூசிகள் போட்டுள்ளோம்; எங்களுக்கு, 9 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர்.தற்சமயம், இருவரும் பள்ளிக்கு செல்லாமல், ஆன்லைனில் படிக்கின்றனர். கடந்த, ஒரு ஆண்டாக, இரு குழந்தைகளும் எதையோ இழந்தவர் போல காணப்படுகின்றனர். சரியாக சாப்பிடுவதில்லை; சரியாக துாங்குவதில்லை; சிடு சிடுப்பாய் பேசுகின்றனர்.
இருவருக்கும் மலச்சிக்கல் இருக்கிறது; மொத்தத்தில், வீடே குண்டு விழுந்த போர்க்களமாய் இருக்கிறது; இதிலிருந்து மீள என்ன செய்யலாம். நல்ல பதில் சொல்லுங்கள்.
இப்படிக்கு,க.தாயம்மாள்.

அன்பு சகோதரிக்கு...உலகில், ஏழு குழந்தைகளில் ஒன்று, மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. கொரோனா தொற்று நோய் காரணமாக, 106 கோடி குழந்தைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளன.இரண்டரை ஆண்டுகளாக கொரோனா பரவல் தலை விரித்து ஆடுகிறது. இதனால், பெரும்பாலான குழந்தைகள், 'கோவிட் ஸ்ட்ரஸ் சின்ட்ரோம்' என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 13 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி இல்லை. அந்த வயதுள்ள குழந்தைகள் கொரோனா வந்து விடுமோ என்ற பயத்தில் உள்ளனர்.
பெற்றோருக்கு வேலை பறிபோவதால், வருமானம் இல்லை; கொரோனா சூழல், அதிக செலவுகளை கொண்டு வருகிறது. படிப்பு, உணவு மற்றும் இருப்பிடத்துக்கு செலவு செய்ய பணம் இருக்குமா என்ற பயமும் இருக்கிறது.கிருமிநாசினியால் கையை சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல், ஆறடி இடைவெளி விடுதல், கபசுர குடிநீர் குடித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை சரியாக செய்கிறோமா என்ற பதற்றம் அதிகரித்துள்ளது.
பக்கத்தில் இருப்பவர் தும்மினால் திகிலடைவது, கொரோனா செய்திகள் உருவாக்கும் கூடுதல் பயம் போன்றவை அதிகரித்து வருகிறது.பொதுவாக, குழந்தைகள் பள்ளிக்கு செல்வது ஒரு இனிய அனுபவம். ஒரு வகுப்பறையில், 40 குழந்தைகள் இருந்தால் அவர்களோடு அளவளாவலாம், விளையாடலாம், பாடம் சம்பந்தமாக சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். கற்று தரும் ஆசிரியையை, ரத்தமும், சதையுமாய் கண்ணெதிரே பார்க்கலாம்.இவற்றை தவிர்க்கும் விதமாக அமையும் ஆன்லைன் வகுப்புகள் ஒரு சாபம்; இது குழந்தைகளை தனிமைக்குள் தள்ளி சோம்பேறி ஆக்குகிறது.
கொரோனா பீதி காரணமாக, மற்ற குழந்தைகளுடன் விளையாட அனுமதி மறுக்கப்படுகிறது. ஒரு மாதிரியான வீட்டு சிறை, துக்கம், பயம், நிச்சயமற்ற தன்மை, சமூக தனிமை, ஆன்லைன் அடிமைத்தனம், மனச்சோர்வு போன்றவை உன் குழந்தைகளையும் பீடிக்காமலிருக்க, கீழ்க்கண்ட உபாயங்களை மேற்கொள்ளவும்.
* குடும்ப பொருளாதார பிரச்னைகளை, குழந்தைகளிடம் வெளிப்படுத்த வேண்டாம்
* ஆன்லைன் வகுப்புகள், தினமும், 90 நிமிடம் தாண்டாமல் பார்த்துக் கொள்ளவும்
* பாதுகாப்பான சூழலை வீட்டுக்குள்ளே ஏற்படுத்தி, தினமும், இரண்டு மணி நேரம் விளையாட வாய்ப்பை ஏற்படுத்தி தரவும்
* கபசுர குடிநீரில் பனங்கற்கண்டு கலந்து, இனிப்பான பானமாக மாற்றி கொடுக்கவும்
* வண்ணமயமான பூ போட்ட ஆடைகளுக்கு மேட்சிங்கான, முகக்கவசத்தை அணிய கொடுக்கவும்
* கொரோனா உயிர்க்கொல்லி நோயல்ல; அது முழுமையாக ஜெயிக்கப்படும் என்ற நம்பிக்கையை குழந்தைகளிடம் விதைக்கவும். மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்று, தேவையான ஆலோசனைகளை வழங்கவும்!
கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு, எட்டு மாதம் நிறைவடைந்திருந்தால், கணவன், மனைவி இருவரும் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளவும்.நாளை நமதே!

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement