முன்கதை: கிராமத்து கிணற்றில் நீச்சல் கற்று, போட்டிகளில் பெரிய வெற்றிகளை குவித்தான் சிறுவன் மிகிரன். பக்கத்து ஊரில் நடந்த நீச்சல் போட்டியில் கிடைத்த பதக்கத்தை, நீச்சல் கற்றுத்தந்த கணேசன் பாதங்களில் சமர்ப்பித்து ஆசி பெற்றான். இனி -
சாய் வேலுக்காஸ் நகை மாளிகை, நான்கு மாடி கட்டடமாய் நிமிர்ந்திருந்தது. இந்தியா முழுதும், 452 கிளைகளோடு இயங்கி வருகிறது. இவர்களின் ஒட்டு மொத்த ஆண்டு வியாபாரம், 4 ஆயிரத்து, 500 கோடி ரூபாய்.
ஓட்டி வந்த, 'பஜாஜ் பல்சரை' நிறுத்திய கணேசன், நகை மாளிகைக்குள் நுழைந்தார். 'கேஷ் கவுண்டர்' ஊழியரிடம் சென்று, ''எம்.டி., இருக்குறாரா...'' என வினவினார்.
''தளம், நான்கில் உள்ளார்...'' மின் துாக்கி வழியாக பயணித்து, குளுகுளு அறையின் கதவை நளினமாக தட்டினார் கணேசன்.
''யெஸ்... கமின்...''மலையாள தமிழ் வாடை விளிப்பில் தொனித்தது.
சாய் வேலுக்காசின் உரிமையாளர், கண்ணியமான உடையில் மினுமினுத்தார்.
''ஐயா... எப்படி இருக்குறீங்க...''
''உட்காருங்கள்... கொரோனா நோய் பரவல் காரணமாக நகை வியாபாரம் மந்தமாக செல்கிறது. என்ன குடிக்கிறீங்க... காபி அல்லது கூல்டிரிங்ஸ்...''
''ஆரஞ்சு ஜூஸ்...'' ஜூஸ் வந்ததும் குடித்தனர் இருவரும்.
''கிராமத்து சிறுவர், சிறுமியருக்கு நீச்சல் கற்றுத் தரும் பணி எப்படி செல்கிறது. 'வாலு டிவி' யுடியூப் சானலுக்கு எத்தனை பார்வையாளர்கள்...''
''நீச்சல் பயிற்சி பிரமாதம்... மேலும், யுடியூப் சானலுக்கு, இரண்டு லட்சம் பார்வையாளர்கள் பின் தொடர்கின்றனர்...''
''நல்லது... என்ன விஷயம்...''
''இதுவரை, ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியருக்கு நீச்சல் கற்றுத் தந்துள்ளேன். அதில், இரு நல் முத்துகளை கண்டுப்பிடித்துள்ளேன்...'' என கூறி, அலைபேசியில் இருந்த வீடியோக்களை காட்டினார் கணேசன்.
மிகிரன், சிற்பிகா இருவரும் நீரில் நீந்துவதை ஆர்வமுடன் பார்த்தார் நகை கடை உரிமையாளர்.
''சிறுவர், சிறுமியரின் பெயர் என்ன...''
''சிறுவன் மிகிரன்; வயது, 12; ஏழாம் வகுப்பு படிக்கிறான்; சிறுமி சிற்பிகா; வயது, 10; ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள்...''
''மிகிரன், வித்தியாசமான பெயர்... என்ன அர்த்தம்...''
''மிகிரன் என்றால், 'சூரியன்' என்று பொருள்...''
''இவர்களுக்கு நான், என்ன செய்ய வேண்டும்...''
''மிகிரன், சிற்பிகா, இருவரையும், 10 ஆண்டுகளுக்கு தத்தெடுத்துக் கொள்ளுங்கள். அவர்களை சென்னையில் உள்ள பள்ளியில் படிக்க வைத்து, தினமும், நான்கு மணி நேரம், நீச்சல் பயிற்சியும், அளிக்க வேண்டும். இருவருக்கும், 'ஸ்பான்சர்' செய்தால், நீச்சலில் உலக அளவில் சாதிப்பர்...''
''என்ன சாதிப்பர்...''''வரப்போகும், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெறுவர்; 'ஸ்பான்சர்' செய்த தங்களுக்கும், இந்தியாவுக்கும், பெருமையை தேடித் தருவர்...''
''மன்னிக்கவும்... இந்திய சிறுவர், சிறுமியர் மீது, பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. ஆரம்ப காலத்தில், பிரகாசிக்கும் அவர்கள், குறுகிய காலத்தில் மங்கிப் போய் விடுகின்றனர்...''
''இதற்கு விதிவிலக்கானவர்கள் மிகிரன், சிற்பிகா. நீங்கள், விரும்பினால், அவர்களை நேரில் அழைத்து வருகிறேன். பேசி பாருங்கள். நீச்சல் அடிப்பதையும், நேரடியாக காணுங்கள். அதன்பின், நான், உரைத்தது உண்மை என உணர்வீர்...''
''தனியார்கள், 'ஸ்பான்சர்' செய்வதை அரசு செய்யாதா...''
''செய்யாது...''
''இவர்களுக்கு, 'ஸ்பான்சர்' செய்வதால், நகை கடைக்கு என்ன லாபம்...''
''நேரடியான லாபம் இல்லை; ஒலிம்பிக்கில், இந்தியாவுக்கு குறைந்த பட்சம், ஒரு தங்கப்பதக்கம் வென்ற மகிழ்ச்சி கிடைக்கும்...''
''நன்கு பேசுகிறீர் கணேசன்... நமக்குள், 10 ஆண்டு கால பழக்கம் உள்ளது. இதுவரைக்கும், தங்களுக்கென என்னிடம் வந்ததில்லை...''
''சுய தேவைகளை பூர்த்தி செய்து, திருப்தியாக வாழ்கிறேன்; எனக்கு விளிம்பு நிலை மக்களை கை துாக்கி விடுவதே லட்சியம்...''
''இந்த சிறுவர், சிறுமியரின் பெற்றோர் என்ன செய்கின்றனர்...''
''சிறுவனின் தந்தை, தபால்காரர்; தாய், இல்லத்தரசி; சிறுமியின் தந்தை, ஏழை விவசாயி; தாய் இல்லத்தரசி...''
''எங்கு வசிக்கின்றனர்...''
''தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில்...''
''அந்த கிராமத்தில் கிணறு உள்ளதா...''
''இருக்கிறது...''
''கிணறு, வாய்க்கால், கண்மாய் மற்றும் குட்டை இம்மாதிரியான நீர்நிலையற்ற ஊரில், வசிப்பவர்கள் நீச்சல் கற்றுக் கொள்ள வாய்ப்பிருக்காது...''
''ஆமாம்...''
''இருவருக்கும், 'ஸ்பான்சர்' செய்தால் எவ்வளவு செலவாகும்...''
''மிகிரன், சிற்பிகா இருவருக்கும், மாதம், 1 லட்சம் ரூபாய் செலவாகும்...''
''ஒவ்வொருவருக்கும், 20 கிராம் தங்கம் செலவு என, வைத்துக் கொள்ளலாமா...''
''இருவர் அல்லது இதில் ஒருவருக்கு கட்டாயம், ஒரு ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வரவு என, வைத்துக் கொள்ளலாம்...''
''சரி கணேசன்... மிகிரன், சிற்பிகாவுக்கு, 'ஸ்பான்சர்' செய்ய தயார். ஒப்பந்தம் செய்து, இருதரப்பும் கையெழுத்து போட வேண்டும்; ஆனால், ஒரு நிபந்தனை...''
''என்ன நிபந்தனை...''
''இனி, 'ஸ்பான்சர்' என, வேறெந்த புதிய நபரையும் திணிக்கக் கூடாது...''தலையசைத்தார் கணேசன்.
ஒப்பந்தத்தில், மிகிரன், சிற்பிகா மற்றும் சாய் வேலுக்காஸ் உரிமையாளர் கையெழுத்திட்டனர். சிறுவர், சிறுமியரின் பெற்றோருக்கு, தலா 1 லட்சம் ரொக்க பணம் வழங்கினார் நகை கடை உரிமையாளர்.
''மிகிரா, சிற்பிகா... இருவரும், தலா 10 கிராம் நகை இலவசமாய் எடுத்துச் செல்லலாம்...''
இந்த உரையாடலின் ஊடே, 'எங்களை நெருங்கி விட்டாய் மிகிரா...' என கூறி, கடல் மட்டத்துக்கு வெளியே, 'டைவ்' அடித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், இருபதுக்கும் மேற்பட்ட கடல் கன்னியர்.
தொடரும்...
ஆர்னிகா நாசர்
கடல் கன்னி நகரம்! (8)
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!