மெல்லிய திரைக்கு பின் ஒரு மின் விளக்கின் வெளிச்சம். திரைக்கு முன் ஆர்வத்துடன் அமர்ந்திருக்கும் மாணவர்கள், சரசரக்கும் பாவை ஓசைகளுடன், கதாபாத்திரங்களுக்கு ஏற்ப பல குரல்களில் பேசி தோல் பாவை பொம்மைகளை இயக்கி கொண்டிருந்தார் கலைமாமணி விருதுபெற்ற கலைஞர் முத்துலெட்சுமணராவ் 68 .
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியை சேர்ந்த இவர் 10 வயது முதல் தோல் பாவை கூத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் கூறியதாவது...
முன்பெல்லாம் ஓலையால் வேயப்பட்ட சிறிய அறையில் மெல்லிய திரைகட்டப்பட்டு அதனுள் விளக்கு அமைக்கப்பட்டு அந்த விளக்கு வெளிச்சம் மூலம் ஓலையில் செய்யப்பட்ட பாவைகளின் நிழல் திரையில் விழும்.
பின் ஓலை பாவைக்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட ஆட்டுத் தோலில் பாவை செய்து வண்ணம் தீட்டி பயன்படுத்தினோம். தற்போது பிளாஸ்டிக் பாவைகள் கூட பயன்பாட்டில் உள்ளது. ஆனால் நாங்கள் பாரம்பரியப்படி தோல் பாவைகளையே பயன்படுத்தி வருகிறோம்.
பாவைகளை இயக்குவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு குரல்களை மாற்றி பேசுவார்.
மற்றொருவர் இசை வாத்தியங்களை வாசிப்பார். இந்த கூத்தை பொதுவாக குடும்பத்தினர் தான் இணைந்து நடத்துவார்கள். விழாக்காலங்களில் பல ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்று கூத்து நடத்தி விட்டு ஊர் திரும்ப மாதக்கணக்கில் ஆகிவிடும். நாடோடி வாழ்க்கை இது.
நாடகங்களுக்கு முன்னோடியாக திகழ்வது தோல்பாவை கூத்து. முன்பெல்லாம் தோல்பாவை கூத்து நிகழ்த்தும் போது மக்கள் கூட்டம் அலை மோதும். கடவுள், ராஜா கதைகள் கூறப்பட்டு வந்தது. சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடம் சுதந்திர வேட்கையை பரப்ப தோல்பாவை கூத்து பயன்பட்டது.
கூத்து நடத்தினால் மழை பொழியும் எனும் ஐதீகம் கிராமங்களில் இருந்தது. இக்காலம் வரையிலும் நல்லதங்காள் கதைக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு உள்ளது.
எனது தந்தை காலத்தில் தோல்பாவை கூத்திற்கு டிக்கெட் போட்டு நடத்தும் பழக்கமெல்லாம் இருந்தது. எனது காலத்தில் இந்த கலை முற்றிலும் நலிந்து விட்டது.
ஒரு தோல் பாவை பொம்மை தயாரிக்க குறைந்தது 2 ஆயிரம் ரூபாய் ஆகும். போதிய வருமானம் இல்லாததால் நாங்களும் கால மாற்றத்திற்கு ஏற்றார் போல் சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு, வன விலங்கு பாதுகாப்பு என சமூக விழிப்புனர்வு கதைகளை உருவாக்கி அதற்கு பாவைகளை உருவாக்கி பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
ஒருசில மாவட்டங்களில் அரசின் விழிப்புணர்வு செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியையும் அளித்தார்கள்.
முன்பு கலைஞர்களை கலை காப்பாற்றி வந்தது. தற்போது என்னை போன்ற கலைஞர்கள் கலையை காப்பாற்றி வருகின்றனர். ஆர்வமுள்ள இளம் தலைமுறையினருக்கும் ,எனது மகன், பேரன்களுக்கும் கற்று கொடுத்துள்ளேன். எனக்கு பின்னரும் இந்த கலை தொடரும்.
முத்து காத்தான்
கதை பேசும் தோல்பாவை கூத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!