Advertisement

214 ஜல்லிக்கட்டு காளைகள் ஓய்வெடுக்கும் பூஞ்சோலை வெள்ளியங்கிரி கோசாலை!

ஜல்லிக்கட்டுக்காளைகள் வீரம் விளைந்த மதுரை மண்ணை கூர்மையான கொம்புகளால் குத்திக் கிளறி, எட்டுத் திசைகளிலும் பட்டுத் தெறிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன; பச்சை மரத்தை முட்டி மோதி கிழித்துக் கொண்டிருக்கின்றன. பயிற்சிக் களத்தில் பாய்ந்தோடி, பிடிக்க வரும் இளம் காளைகளை துாக்கி எறிந்து பந்தாடிக் கொண்டிருக்கின்றன.

நம்புங்கள்... இப்படி எதுவுமே செய்யாமல் 214 ஜல்லிக்கட்டுக் காளைகள் மலையின் மடியில் மவுனமாக தியானம் செய்து கொண்டிருக்கின்றன. மேகக்கூட்டமும், பனி மூட்டமுமாக குளிர்ந்து கொண்டிருக்கும் வெள்ளியங்கிரி மலையடிவாரத்திற்கு வந்தால், அந்த அதிசயக் காட்சிகளை நீங்கள் கண்ணாரக் கண்டு உளமாற உணர்ந்து ரசிக்கலாம்.

தமிழக-கேரள எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி வெள்ளியங்கிரி மலையுச்சியில், சுயம்பு வடிவில் ஈசன் எழுந்தருளியுள்ள மலைக்குகைதான், பல லட்சம் பக்தர்களால் 'தென் கயிலாயம்' என்று போற்றப்படுகிறது. சித்ரா பவுர்ணமி நாட்களில், இங்கே ஈசனைத் தரிசிக்க மூன்று லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஏழு மலைகளை கஷ்டத்தோடு கடந்து ஏறி வருவர்.

அந்த வெள்ளியங்கிரி ஆண்டவரின் காலடியில் அமைதியின் பூஞ்சோலையாக அமைந்துள்ளது இந்த கோசாலை. அங்கேதான் இந்த 214 ஜல்லிக்கட்டுக் காளைகளும், ஓய்வு வாழ்க்கையை ஒய்யாரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஆக்ரோஷம், ஆவேசம் ஏதுமின்றி அமைதியாக அசை போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த கோசாலையை நடத்துபவர் கோவை ஜவுளி நிறுவன உரிமையாளர் சிவகணேஷ். அதி தீவிர சிவ பக்தர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், வெள்ளியங்கிரி மலைக்கு வெறும் காலோடு துள்ளிக்கொண்டு ஈசனைத் தரிசிக்கும் ஈரநெஞ்ச சிவனடியார்.

பசுக்களைக் காக்கும் பணியை பல ஆண்டுகளாகச் செய்து கொண்டிருக்கும் சிவகணேஷ், இறைச்சிக்காக அடிமாடாக கேரளாவுக்கு லாரிகளில் அடைத்துக் கொண்டு செல்லப்படும் பசுக்களை மீட்பதற்காக சட்டரீதியாக போராடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவற்றை மீட்கும் பசுக்களை எங்கே விடுவது என்ற கேள்வி எழுந்தபோது கிடைத்த விடைதான் இந்த கோசாலை.
கோவை மாநகராட்சியில் 2014ல் ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்த குப்பை மாட்டு வண்டிகள் ஒழிக்கப்பட்டன. அந்த மாடுகளை என்ன செய்வதென்று மாநகராட்சிக்குத் தெரியவில்லை. இறைச்சிக்காக ஏலம் விடப்படவிருந்த 45 பசுக்களைக் காப்பதற்காக சிவகணேஷ் துவக்கியதுதான் வெள்ளியங்கிரி கோசாலை.

முதலில் நரசிபுரத்தில் சிறிய அளவில் வாடகை இடத்தில் இருந்த கோசாலைக்கு, மீட்கப்பட்ட பல மாடுகள் வந்து சேர, இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போதுதான் அருகிலுள்ள பச்சாவயலில் 25 ஏக்கர் பரப்பில் வெள்ளியங்கிரி கோசாலை உருவாக்கப்பட்டது. இப்போது 70 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து, பச்சைப் பசுமையுடன் பேரெழில் நிறைந்த வளாகமாக மாறியுள்ளது; அங்கே இப்போது இருப்பவை 3200 மாடுகள். தென்னிந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோசாலை இதுதான்.
கேரளாவிற்கு சட்டவிரோதமாகக் கொண்டு சென்றபோது மீட்கப்பட்ட மாடுகளே இதில் அதிகம். தெருவில் திரிந்தவை, உரிமையாளர்களால் வளர்க்க முடியாதவை என மாடுகள் வந்து கொண்டே இருக்கின்றன.

கோவில் மாநகரிலிருந்து கோவைக்கு 2017ல் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த நுாற்றுக்கணக்கான ஜல்லிக்கட்டு காளைகள் வேறு வழியின்றி, அடிமாட்டுக்காக விற்கப்பட்டன. இதை அறிந்த சிவகணேஷ், அந்த காளைகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, ஊர் ஊராகச் சென்று 208 காளைகளை அவர்கள் சொன்ன விலைக்கும் அதிகமான விலைக்கு வாங்கினார். அந்தக் காளைகள், கோவில் மாநகரிலிருந்து கொங்கு மண்ணுக்கு வாகனங்களில் அணிவகுத்து வந்தன; அவற்றுக்கு கோவையில் அமர்க்களமான வரவேற்பு தரப்பட்டது.

அதற்குப் பின்னும் மேலும் சில ஜல்லிக்கட்டுக் காளைகளை, உரிமையாளர்களே இங்கு வந்து கொடுத்துள்ளனர். அந்த காளைகள்தான் இப்போது 'பாட்ஷா வாழ்க்கையை மறந்த மாணிக்கங்களாக' அமைதியாக இந்த கோசாலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன.
இவற்றைத் தவிர்த்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுக்கள், 450 எருமைகள், 100 ஆடுகள், ஒரு ஒட்டகம், குதிரை என பல விதமான உயிர்களும் இந்த மலையின் மடியில் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன.

பசுக்கள், ஜல்லிக்கட்டுக் காளைகள், எருமைகள், கன்றுக்குட்டிகள் என தனித்தனியாக நீளநீளமாக ஷெட்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அழகாக இரண்டு வரிசையாக மாடுகளுக்கு தளங்கள் அமைக்கப்பட்டு, நடுவில் தீவனத்தொட்டியும், தண்ணீர்த் தொட்டியும் கட்டப்பட்டுள்ளன. இந்த மாடுகளுக்கு எந்த வேலையும் இங்கில்லை. வேளாவேளைக்கு உணவும், தண்ணீரும் கிடைத்து விடுகிறது.

கோசாலையைப் பராமரிப்பதற்கு 55 பணியாளர்கள் இந்த வளாகத்திலேயே குடியிருக்கின்றனர். உடனுக்கு உடன் சாணத்தை அள்ளி படுசுத்தமாக வைத்திருக்கின்றனர். வளாகத்திலேயே பல ஏக்கர் பரப்பில் தீவனப்புல் வளர்க்கப்படுகிறது. எருமைகளுக்கும், பசுக்களுக்கும் பிரமாண்டமான இரண்டு குளங்கள் வெட்டப்பட்டு அதில் தண்ணீரும் நிரப்பப்பட்டுள்ளது.

குளங்களில் மாடுகள் குளித்துக் கும்மாளம் போடுவது கண் கொள்ளாக்காட்சி. டக்ளஸ், செங்கோடன், கருப்பன் என்று இங்குள்ள சில மாடுகள், ஹீரோக்களாக வலம் வருகின்றன. பல ஆயிரம் மாடுகள் இருந்தாலும் ஒரு லிட்டர் பால் கூட கறக்கப்படுவதில்லை. இயற்கையாக அவற்றின் வாழ்வுக்காலம் நிறைவு பெறும் வரை நிம்மதியாக அவை வாழ்கின்றன. ஒரு மாடு இறந்தாலும், மனிதருக்குரிய மரியாதையோடு அடக்கச்சடங்கு நிகழ்த்தப்படுகிறது.

ஏழைகளுக்கு இலவச பால்பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அவற்றிலிருந்து பால் கறந்து அரசு மருத்துவமனையில் ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக கொடுப்பதற்கு கோசாலை நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது. சாணம் மட்டுமே விற்கப்படுகிறது. கோசாலைக்குள் வந்தால் ஒரு நாள் பொழுது நகர்வதே தெரியாமல் மனசும் லேசாகி விடுகிறது.
எல்லாவற்றையும் விட நம் கவனத்தை ஈர்ப்பது கோசாலையின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகை. கோசாலை பராமரிப்புக்காக எந்த நன்கொடையும் வாங்குவதில்லை என்பதுதான் அது.

'ஆண்டவர் எங்களுக்கு நிறையவே கொடுத்துள்ளார்' என்று சொல்லும் அந்த அறிவிப்பு, 'விருப்பப்பட்டால் இறைச்சிக்காகச் செல்லும் ஒரு மாட்டை வாங்கிக் கொண்டு வந்து இங்கே நீங்கள் கொடுத்தால் அதன் கடைசி மூச்சு வரை நாங்கள் காப்பாற்றுவோம்' என்று சொல்லி, காண்போரை ஒரு கணம் உடல் சிலிர்க்க வைக்கிறது.

''பசுக்களைக் காக்கவே கோசாலையைத் துவக்கினோம். இப்போது ஓர் உயிரினப் பூங்காவாக மலர்ந்திருக்கிறது. பசுக்களை சட்ட விரோதமாகக் கடத்துவது தொடர்கிறது. முன்பு திறந்த லாரிகளில் கொண்டு சென்றவர்கள், இப்போது மூடப்பட்ட கண்டெய்னர்களில் கொண்டு செல்கின்றனர்.இன்னும் எத்தனை ஆயிரம் மாடுகள் வந்தாலும், அவற்றை நாங்கள் பராமரிக்கத் தயாராக இருக்கிறோம். அதற்கான சக்தியையும், பொருளையும் அந்த வெள்ளியங்கிரி ஆண்டவர் எங்களுக்குக் கொடுத்திருக்கிறார். இன்னும் கொடுப்பாரென்ற நம்பிக்கை உள்ளது!''
கண்களில் கசியும் ஆனந்தக் கண்ணீரோடு, வெள்ளியங்கிரி மலையை நோக்கி தலைக்கு மேல் கைகளைக் குவித்தபடி சொல்கிறார் சிவகணேஷ்.
நம்மையும் அறியாமல் நம் கைகளும் உயர்கின்றன, மலையை நோக்கி...
அவரின் தலையை நோக்கி!.

எக்ஸ்.செல்வக்குமார்
சதீஷ்குமார்

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement