Advertisement

காணி மக்களின் கார்த்திகை பொங்கல்

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் ராஜியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இதனை ஆண்ட மன்னர்களில் ஒருவரான மார்த்தாண்டவர்மாவுக்கும், எட்டு வீட்டு பிள்ளைமார்களுக்கும் தீரா பகை உண்டு. இவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க மன்னர் பல இடங்களில் மறைந்து வாழ்ந்தார். அந்த பகுதிகளில் ஒன்றுதான் தற்போதைய காணி மக்களின் வாழிடமான மலை பகுதி. தங்கள் பகுதிக்கு வந்த மன்னருக்கு உணவும், பாதுகாப்பும் கொடுத்த அன்பில் நெகிழ்ந்து போன மன்னர் இம்மக்களுக்கு மலைப் பகுதியில் உள்ள இடங்களை, 'பண்டார வகை காணிச்சொத்து' என்ற பெயரில் செப்புப்பட்டையம் எழுதிக் கொடுத்திருக்கிறார். மன்னர் கொடுத்த காணிக்கு (இடம்) சொந்தக்காரர்கள் ஆனதால்தான் இவர்கள் காணிக்காரர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

பேச்சிப்பாறையை மையமாகக்கொண்டு செம்பூஞ்சி மலையிலும், ஆறுகாணியை மையமாகக்கொண்டு எல்லைக்கல் மலையிலும், கேரளா எல்லைப்பகுதியை மையமாகக்கொண்டு சாக்கப்பாறை கன்னித்தோன் மூடு என்ற இடத்திலும் உள்ள பகுதிகளில் 48 ஆதிவாசி பழங்குடி காணி குடியிருப்புகள் உள்ளன. எல்லா சமூகத்திலும் உட்பிரிவு இருப்பது போல இங்கும் 10 வகை பிரிவுகள் உள்ளது. ஒரே இல்ல உறவினர்களுக்கிடையே திருமண பந்தம் வைத்து கொள்வதில்லை. இங்குள்ள வீடுகள் மூங்கில் கம்புகளில் பனை ஓலைகளில் வேயப்பட்டு காணப்படுகிறது. மன்னர் கொடுத்த இடத்தில் காய்கறி, ரப்பர், மிளகு போன்றவை பயிரிட்டு கிடைப்பது தான் இவர்கள் வருமானம். நமக்கு தை பொங்கல் போல கார்த்திகை முதல் வெள்ளியில் இங்கு நடைபெறும் பொங்கல் இந்த மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தேன், தினை மாவு, அவல், பழம், இளநீர், வெண்பொங்கல் படைத்து வழிபடுவர்.

குருத்தோலை தோரணங்கள் கட்டியும், தீப்பந்தங்கள் கொளுத்தியும் இந்த பொங்கலை கொண்டாடுகின்றனர். எந்த வேலை இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெய்வங்களை வழிபடத்தவற மாட்டார்கள். சாஸ்தா வழிபாடு முக்கியமாக இருந்தாலும் காலாட்டு தம்புரான், மல்லங்கருங்காளி, மந்திரமூர்த்தி, ஆயிரம்வல்லித்தம்புரான், கருங்காளி, கடுவா மூர்த்தி, ஆலம்பாறை இத்திரன், செம்பூஞ்சி ஐயனார் சேம்பல்லப்பு சாஸ்தா, வடக்குப்பேயி காளி, சேத்திப் பேயி என பல்வேறு மலை தெய்வங்களையும் வழிபடுகின்றனர். கார்த்திகை மாதம் 30 நாட்களும் 'கொடுதி' என்ற படையல் வழிபாடு நடக்கும். 'காட்டில் நாங்கள் பயமின்றி வாழவும், தெய்வங்கள் காப்பாற்றவும் ஆண்டு தோறும் இந்த கொடுதியைக் கொடுக்கிறோம்' என்கின்றனர் காணி மக்கள்.

'பெரும்பாலும் மருத்துவமனைக்கு போகமாட்டோம். மூலிகைகள் பயன்படுத்தி நோய்களை குணப்படுத்திக்கொள்வோம். நாகரீகம் என்னதான் வளர்ந்தாலும் எங்களைப்பொறுத்தவரை மலைதெய்வங்களின் ஆசி இல்லாமல் எந்த செயலும் இல்லை.
ஆண்டு தோறும் நாங்கள் தெய்வங்களுக்குக் கொடுக்கும் கொடுதியில் தெய்வங்கள் மனம் நிறைந்து எங்களை நோய் நோடியின்றி, எந்த பிரச்சனையும் அண்ட விடாமல் காப்பர்' என்கின்றனர் இவர்கள். இந்த சமூகத்தை சேர்ந்த சுரேஷ்காணி சித்த இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

இவர் கூறுகையில் 'கல்தோன்றி மண் தோன்றா காலத்து மூத்தகுடியான காணிக்காரர்கள் ஆதி தமிழர்கள். பகிர்ந்து உண்ணும் குணத்தை அடிப்படையாக கொண்ட இவர்கள், ஆதிகாலத்தில் வேட்டைக்குச்சென்று ஒரு மிருகம் கிடைத்தாலும் அனைவருமே அதை பங்கிட்டு உண்டனர்.
இவர்களுக்குள் பணப்பிரச்னை இல்லை. இன்றளவும் வெந்ததைத்தின்று விதி வந்தால் சாவது என்ற கொள்கையுடனே உள்ளனர். சேமிப்புப்பழக்கம் இல்லை. உடல் வலிக்க வேலை செய்வார்கள். பிறரை ஏமாற்றும் குணம் கிடையாது” என்றார். மலைவாழ் காணி மக்களும், அவர்களின் பொங்கல் விழாவும் வித்தியாசமானதாகவே இருக்கிறது.

என்.எஸ்.மணிகண்டன்

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement