Advertisement

களைப்பாற்றும் கிராமத்து களப்புகடைகள்

ஒரு காலத்தில் கிராமங்களுக்கு ஆடு, மாடு, கோழிகள் வாங்க வியாபாரிகள் வருவர். கூவிக்கூவி பாத்திரம், துணி, உப்பு, கோலப்பொடி விற்போர், அம்மிக்கல், ஆட்டுரல் கொத்துவோர், செம்பு, பித்தளை, வெங்கலப் பாத்திரங்களுக்கு ஈயம் பூசுவோர், கிளி ஜோசியர், குறி சொல்வோர், மாடுகளுக்கு லாடம் கட்டுவோர் வருவர்.
அவர்கள்,'பசியாறணும்; இந்த ஊர்ல களப்புக் கடை இருக்கா,' என விசாரிப்பர். களப்புக் கடைகளில் இட்லி, அவித்த மொச்சைப் பயறு, டீ, வடை சாப்பிட்டு இளைப்பாறிச் செல்வர். சுண்ணாம்பு வண்ணம் பூசிய மண் சுவர், சோளம், வைக்கோல் அல்லது பனை ஓலை அல்லது தென்னங்கீற்று அல்லது மண் ஓடு வேய்ந்த கூரை, பசுஞ்சாணத்தால் மெழுகிய மண்தரை, திண்ணை போன்ற திண்டுதான் களப்புக் கடையின் அடையாளம். பெயர் பலகை இருக்காது. ஆட்டுரலில் அரைத்த மாவில் தயாரித்த இட்லி, பருப்புவடை, தேங்காய், பொரிகடலை சட்னி, காரச்சுவை (மிளகாய்) சட்னிக்கு தனி ருசிதான். நாட்டுச் சர்க்கரை கலந்த டீ, கடுங்காபி, சுக்கு, மல்லி தண்ணீர் இவை களப்புக் கடையின் தனித்த அடையாளங்கள். இட்லி, வடை, டீ, கால்படி அவித்த மொச்சைப் பயறு 5 காசுக்கு விற்கப்பட்டது 45 ஆண்டுகளுக்கு முன்.

அதிகாலையில்...
பக்கத்து ஊர் சினிமா கொட்டகையில் என்ன படம் ஓடுகிறது என களப்புக் கடை சுவற்றில் ஒட்டிய போஸ்டர்களை பார்த்து இளசுகள் அறிவர். விவசாயம், விளைச்சல், சச்சரவுகள், குடும்ப பிரச்னைகள் பற்றி சுடச்சுட செய்திகள் இக்கடைக்குள் வந்துவிடும். சில பெருசுகள் நாளிதழ் செய்திகளை வாசித்து நாட்டு நடப்புகளை விவாதிப்பர். அதிகாலை 4:00 மணிக்கு களப்பு கடையில் விறகு அடுப்பு பற்றவைப்பது வழக்கம். வயது முதிர்ந்த பெருசுகள், தானியங்களை அறுவடை செய்து களத்து மேட்டில் குவித்து காவல் காக்கும் விவசாயிகள், காடுகளில் ஆடு, மாடு கிடைகளுக்கு காவல் காக்கும் கீதாரிகளுக்கு அந்நேரம் முழிப்புத் தட்டும். நேராக களப்புக் கடைக்கு வந்து,'டீ போடுங்க...,' என்பர். ஆவி பறக்க குடித்துவிட்டு, இடுப்புத் துணியில் மடித்து வைத்த சில்லரைக் காசுகளை கொடுப்பர்.
வெளி கிராமங்களிலிருந்து சில சம்சாரிகள் (விவசாயிகள்) களப்புக் கடைக்கு வருவர். 'எங்க ஊர்ல மழை பேய்ஞ்சிருக்கு. விதைப்புக்கு ஏர் பூட்டி உழனும். இந்த ஊர்ல இருந்து ஏர் மாடுகளுடன் சம்சாரிகள் வருவாங்களா,'என்பர். களப்புக் கடைக்காரரோ,'இங்கு முந்தின மழைக்கே விதைப்பு முடிஞ்சிருச்சு. இங்கிருந்து 50 ஜோடி ஏர் மாடுகள் விதைப்புக்கு வரும்,' என கூறி உள்ளூர் விவசாயிகளை கிளப்பி விடுவார். கிடை அமர்த்தும் கீதாரிகளை தேடி வருவோர்,'எங்க புஞ்சை, நஞ்சை காட்டுல ஒருவாரம் கிடை அமர்த்தணும். எப்போ வருவீங்க,'என்பர். கீதாரிகளோ,'இங்க ஒரு சம்சாரி காட்டுல கிடை நிற்குது. ஒருவாரம் ஆகும்,' என்பர்.

வெளியூர்களிலிருந்து
வருவோர், 'இந்த ஊர்ல இன்னார் வீடு எங்கே இருக்கு...,' என முகவரி கேட்பர். 'இந்த வழியா போயி, கிழக்காம திரும்பினா 4 வது வீடுதான்,' என களப்புக் கடையில் அரட்டை அடிப்போர் அடையாளம் காண்பிப்பர். கிராமங்களில் முன்பு பண்டிகையின் போதுதான் இட்லி, தோசை, பலகாரங்களை தயாரிப்பர். யாராவது உடல் சுகவீனம் அடைந்தால், 'பொன்னையா பெரியப்பா களப்புக் கடையிலே இட்லி வாங்கிட்டு வாப்பா,' என சிறுவர்களிடம் காசு, பாத்திரம் கொடுத்து அனுப்புவர். சாப்பிட்டு விட்டு, 'காசு இல்ல. வெள்ளாமை (விளைச்சல்) வீடு வந்து சேர்ந்ததும் கடனை கழிச்சுடுறேன் அல்லது பட்டாளத்துக்கார (ராணுவ வீரர்) மகன் மணியார்டர் அனுப்பினால் தர்ரேன்,' என கடன் சொல்லி செல்வோரும் உண்டு. கடன் குறிப்பு எதையும் களப்புக் கடைக்காரர்கள். மனக்கணக்காக வைத்துக் கொள்வர்.
ஓட்டல் என்ற சொல்லிற்கு மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் கிராமங்களில் புழங்கப்படும் சொல் வழக்கு 'களப்புக் கடை'யாகவே இன்றும் தொடர்கிறது. மக்கள் பசி போக்கி, களைப்பாறும் இடம் இன்பதால் அது மருவி 'களப்புக் கடை'யாகி இருக்கலாம் அல்லது கலந்து பேசும் இடம், பல பொருட்களை கலந்து விற்பதால் அதற்கு கல(ள)ப்புக் கடை என்ற சொல் வழக்கு வந்திருக்கலாம். இன்று கிராமங்களில் அந்த கடைகள் கான்கிரிட் கட்டடங்களாக மாறி, நாற்காலி, குளிர்சாதன பெட்டி, பெயர் பலகையுடன் நவீனம் ஆகியுள்ளன. போதாக்குறைக்கு பரோட்டாவும் கிடைக்கிறது. மண்சுவர், திண்ணை, விறகு அடுப்பு, பாய்லர் என சில கிராமங்களில் இன்னும் களப்புக் கடைகள் பழமையை பறைசாற்றுகின்றன என்பது மகிழ்வானது.

ந. ராஜகுமார்

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement