திருநெல்வேலியில் பீடி சுற்றும் தொழிலில் இருந்து பெண்களை விடுவிக்க நினைத்து தொடங்கியது தான் வேலி கற்றாழை நார்த் தொழில் தயாரிப்பு. தற்போது 175 பெண்களுடன் பெரிய நிறுவனமாக செயல்படுகிறது என்கிறார் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பத்மநேரியில் உள்ள காஸ்ட் தொண்டு நிறுவன தலைவி சுசீலா பாண்டியன்.
சொந்த ஊர் திருநெல்வேலி, வேலுார் சி.எம்.சி. மருத்துவமனையில் பி.எஸ்சி., நர்சிங் படிப்பு. படித்து முடித்ததும் திருநெல்வேலியில் பெண்களுக்கு சேவை செய்த பெல்ஜிய பெண்மணியின் நிறுவனத்தில் ஐந்தாண்டு வேலை. திட்டம் முடிந்த பின் தொண்டு நிறுவனம் தொடங்கி பெண்களுக்கு சேவை என 20 வயது முதல் 70 வயது வரை பயணத்தை நினைவுகூர்கிறார் சுசீலா.
களக்காடு, சேரன்மாதேவி, நாங்குநேரி, அம்பை, தென்காசியில் பீடி சுற்றும் தொழிலால் பெண்கள் டி.பி. நோய் போன்று உடல்ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த காலத்தில் கிராமங்களில் மருத்துவ வசதி இருக்காது. வீடு வீடாக சென்று கர்ப்பிணிகளை கணக்கெடுத்து பிரசவம் பார்த்து வந்தேன். என்னை போல சேவையில் ஆர்வமுள்ளவர்களை ஒருங்கிணைத்தேன். எனது கணவர் பாண்டியன் ஆசிரியராக இருந்தாலும் எனது சேவைக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார். 1992 முதல் 2004 வரை அரசு, தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 5000 குடும்பங்களுக்கு தனி டாய்லட் செய்துள்ளேன். 2004ல் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மையம் ஆரம்பித்தேன். தொடர் இறப்புகள் என்னை மனரீதியாக பாதித்ததால் அதை அரசிடம் ஒப்படைத்து விட்டு வயதானவர், ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் துவங்கினேன். திருமணமாகாமல் கர்ப்பமாகும் பெண்களை பாதுகாக்கும் இல்லம் துவங்கிய போது தான் அவர்களுக்கு தொழில் கற்றுத்தரும் எண்ணம் வந்தது.
கற்றாழையில் மேல் தோலை சீவினால் பட்டு போன்ற நார்கள் கிடைக்கும். அதை வைத்து பின்னல் மட்டும் செய்து அதில் உருவங்கள் செய்தோம். கோரை பாயை கட்டுவதற்கு இந்த நாரை பயன்படுத்தினோம். கைவினை துறை சார்பில் வாழை, பனை நார் பயிற்சி பெற்று பெண்களுக்கு பயிற்சி அளித்தோம். தொழில் கற்று கொடுத்து வீட்டிலேயே தயாரித்து வாங்கி விற்க ஆரம்பித்தோம்.
மதுரையிலுள்ள கதர் கிராமத் தொழில் ஆணையத்திடம் ரூ.ஒரு கோடி கடன் கேட்டு விண்ணப்பித்தோம். ஆணைய இயக்குனர் அசோகன், உதவி இயக்குனர் அன்புச்செழியன் வழிகாட்டினர். 175 பெண்களை ஒருங்கிணைத்து களக்காடு நார் சார்ந்த கைவினைத் தொழில் குழுமத்தை உருவாக்கினோம். ரூ.ஒரு கோடியில் ரூ.96 லட்சம் வரை மானியமாக தந்தனர். நுால் திரிக்கும் இயந்திரம், நார் பிரிக்கும் கருவி, தையல் இயந்திரம் என பல்வேறு கருவிகளை வாங்கினோம். எங்கள் முதலீடு ரூ.4 லட்சம் தான்.
தொழில்நுட்ப வல்லுனர்களை வரவழைத்து 15 நாட்கள் பயிற்சி அளித்தனர். 'கற்றாழை நாரிலிருந்து நுணுக்கமான வேலைப்பாடுடைய 'ஸ்கிரப்பர்', தேவதை பொம்மைகள், கீ செயின், லேம்ப் ேஷட், பனை, வாழை நார் கூடை, பெட்டி என 150 வகை தயாரிப்புகளுடன் வளர்ந்துள்ளோம்.
எங்கள் ஊரில் வேலிகற்றாழை, வாழை நிறைய கிடைப்பதால் தட்டுப்பாடின்றி வேலை கிடைக்கிறது. புதுச்சேரி ஆரோவில் ஆசிரமத்தில் எங்களது தயாரிப்புகளை விரும்பி வாங்குகின்றனர். தயாரிப்புகளை 'பிராண்டாக்கும்' முயற்சியில் 'களந்தை' என பெயரிட்டுள்ளோம்.
ஆன்லைனிலும் விற்பனையை தொடர்கிறோம் என்றார்.
தொடர்புக்கு : 99528 85224.
எம்.எம்.ஜெயலட்சுமி
எம்.கண்ணன்
வேதனைக்கு விடிவு தந்த வேலி கற்றாழை நார் - 175 பெண்களின் தொழில் குழுமம்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!