Advertisement

விடுதலை

தயாரிப்பு - ஆர்எஸ் இன்போடெயின்மென்ட்
இயக்கம் - வெற்றிமாறன்
இசை - இளையராஜா
நடிப்பு - சூரி, பவானிஸ்ரீ, விஜய் சேதுபதி, கவுதம் மேனன்
வெளியான தேதி - 31 மார்ச் 2023
நேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம்
ரேட்டிங் - 4/5

அரசின் திட்டங்கள், இயற்கை வளங்களின் பாதுகாப்பு, மக்களின் எதிர்ப்பு, சில குழுக்களின் வன்முறை, காவல்துறையின் அடக்குமுறை, கடமைக்காக தங்கள் இன்னுயிரை பலி கொடுக்கும் அப்பாவிக் காவலர்கள் என தமிழ் சினிமாவில் இதற்கு முன்பும் பல கதைகள் வந்திருக்கிறது. அவற்றில் ஒரு சில கதைகள் கமர்ஷியல் படமாக மட்டுமே அடையாளம் காட்டப்பட்டன. ஆனால், விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில படங்கள் மட்டுமே முதல் வரியில் குறிப்பிட்ட விஷயங்களை அவரவர் சார்ந்த நிலையில் ஒரு வாழ்வியலாகக் காட்டியுள்ளன. அப்படி ஒரு படத்தை இயக்குனர் வெற்றிமாறன் கொடுத்திருக்கிறார்.


வெற்றிமாறன், இளையராஜா, சூரி, விஜய் சேதுபதி என இந்தப் படத்தில் பங்கேற்றுள்ள சில கலைஞர்களை முதலிலேயே பாராட்டாமல் இந்த விமர்சனத்தைப் பதிவு செய்யவும் முடியாது. அவரவர் பங்களிப்பில் இதுவரையிலான அவர்களது திறமையின் சிறந்த வெளிப்பாடு இந்தப் படம்.

அருமபுரி என்ற ஊருக்கு அருகில் சுரங்கம் அமைக்க அரசு திட்டமிடுகிறது. ஆனால், அந்த சுரங்கத்தை எதிர்த்து விஜய் சேதுபதி தலைமையிலான மக்கள் படை என்ற தீவிரவாதக் குழு பேராடுகிறது. ரயில் குண்டு வெடிப்பு, காவலர்களைக் கொல்வது என பலவித தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறது. மக்கள் படை தலைவன் ஆன விஜய் சேதுபதி யார் என்றே அரசுக்கு தெரியாது. அவரைக் கண்டுபிடிக்கவும், அவரது படையை அழிக்கவும் பல மாதங்களாக சேத்தன் தலைமையில் ஒரு காவல் துறை அணி போராடி வருகிறது. அந்தக் குழுவில் டிரைவராக வேலைக்குச் சேரும் சூரி, ஓரிரு முறை விஜய் சேதுபதியைப் பார்க்கிறார். தனது கடமையில் ஈடுபாட்டுடன் இருக்கும் சூரி, மேலதிகாரி சேத்தன் ஆணையை மதிக்காத காரணத்தால் மெமோ கொடுக்கப்பட்டு பணித் தண்டனை கொடுக்கப்படுகிறார். காவல் துறை குழுவுக்கு புதிய அதிகாரியாக டிஎஸ்பி கவுதம் மேனன் நியமிக்கப்படுகிறார். அதன் பிறகு அந்தக் குழுவினர் விஜய் சேதுபதியைக் கண்டுபிடித்தார்களா, சூரி அதனுள் எப்படி வருகிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள காட்டுப்பகுதி, காவல்துறை குழு இருக்கும் இடம், படத்தில் கதாபாத்திரங்களுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர்கள் என ஒவ்வொருவருமே குறிப்பிடும்படியான அதிகப்படியான ஈடுபாட்டைக் காட்டியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பலத்த விமர்சனங்களுக்குள்ளாகும் படங்களைக் கொடுத்து வரும் இயக்குனர் வெற்றிமாறன் இந்தப் படத்தையும் அப்படியே கொடுத்திருக்கிறார்.

வெற்றிமாறன் படத்தில் சூரி கதாநாயகனா என யோசித்தவர்கள், இந்தப் படத்தைப் பார்த்த பின் குமரேசன் என்ற போலீஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் சூரி எந்த அளவிற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார் என்பதை ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். ஒரு இடத்தில் கூட இதற்கு முந்தை நகைச்சுவை நடிகர் சூரியை படத்தில் பார்க்க முடியாது. மேலதிகாரியாக இருந்தாலும் தான் தவறு செய்யாத போது எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குணம் கொண்டவர். பவானிஸ்ரீ மீது வரும் காதலில் அவருடைய காதல் நடிப்பு கூட கவனத்தை ஈர்க்கிறது. படத்தின் கடைசி அரை மணி நேரத்தில் சூரியின் நடிப்பிற்கும், ஆக்ஷனுக்கும் தியேட்டர் முழுவதும் கைத்தட்டல் கிடைப்பதே கதையின் நாயகனாக சூரிக்குக் கிடைத்துள்ள மிகப் பெரும் பாராட்டு.

இந்த முதல் பாகத்தைப் பொறுத்தவரையில் விஜய் சேதுபதியைத் தேடும் குழுவிற்கு முதல் அதிகாரியாக இருக்கும் கவுதம் மேனனை விட அவருக்குக் கீழ் சிஓ--வாக பணி புரியும் சேத்தன் தனது கடுகடுப்பை அந்த அளவிற்குக் காட்டியிருக்கிறார். சூரியைப் பார்த்தாலே எரிச்சல் வருகிறது என்று சொல்லுமளவிற்கு அவரது கதாபாத்திரம் உள்ளது.

டிஎஸ்பி ஆக கவுதம் மேனன், அந்தப் பதவிக்குரிய மிடுக்குடன் நடித்திருக்கிறார். இரண்டாம் பாகத்தில் இவருக்கான காட்சிகள் அதிகம் இருக்கலாம் எனத் தெரிகிறது. சூரியின் ஜோடியாக மலை கிராமத்துப் பெண்ணாக பவானிஸ்ரீ. அந்தப் பார்வையும், தன் பெற்றோரைப் பறிகொடுத்த சோகத்தையும் பற்றிச் சொல்லும் போது கண்கலங்க வைக்கிறார். தலைமைச் செயலாளராக ராஜீவ்மேனன். அந்தப் பதவிக்குரிய அதிகாரத் தோரணையை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு இந்த முதல் பாகத்தில் காட்சிகள் குறைவுதான். இடையிடையே வந்து போகிறார். கிளைமாக்சுக்கு முன்பாகக் கொஞ்சமாக வருகிறார். இரண்டாம் பாகத்தில் அவருடைய காட்சிகள்தான் அதிகம் இருக்கும் எனத் தெரிகிறது. படம் முடிந்த பிறகு இரண்டாம் பாகக் காட்சிகள் சிலவற்றைக் காட்டுவதிலிருந்து அப்படி ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.

தமிழ் சினிமாவில் 1500 படங்களுக்கும் மேல் இசையமைத்தவர் இளையராஜா. அவருடைய இசைத் திறமை என்னவென்பது பற்றி தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கறிவார்கள். இந்தப் படத்திற்காக தனி கவனம் செலுத்தி, உலகத் தரம் வாய்ந்த வேறொரு விதமான பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார். படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே நம்மை படத்துக்குள் இழுத்துக் கொண்டு செல்கிறது அவரது பின்னணி இசை. இரண்டு பாடல்களும் அப்படியே மனதோடு கலக்கிறது. தன் காதலியை போலீஸ் பிடியிலிருந்து காப்பாற்ற சூரி ஓடும் போது இளையராஜாவின் குரலில் வரும் அந்தப் பாடல் உருக வைக்கிறது.

காடு, மேடு, மலை, இரவு, பகல், பனி எனக் கடந்து இயற்கையுடன் ஒன்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் வேல்ராஜ். ராமர் படத்தொகுப்பு, ஜாக்கி கலை, பீட்டர் ஹெய்ன், ஸ்டன்ட் சிவா ஆகியோரின் சண்டைக் காட்சிகள், என மற்ற தொழில்நுட்பக் குழுவினர்களும் கடுமையாய் உழைத்திருக்கிறார்கள்.

காவல் துறையின் விசாரணைக் காட்சிகளை மிகவும் வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார்கள். சென்சார் செய்யப்பட்டும் அந்தக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது ஆச்சரியம்தான். படத்தின் ஆரம்ப ரயில் குண்டு வெடிப்புக் காட்சி நீளமாகவும், இடைவேளைக்குப் பின் கொஞ்ச நேரம் கதையோட்டம் கொஞ்சம் தடைபடுவதும் படத்தின் வேகத்தைக் குறைக்கிறது.

'விடுதலை' போராட்டம்…

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

 • AKM KV SENTHIL MUSCAT - muscat,ஓமன்

  அசௌர்யமான அந்த இரண்டு வார்த்தையை தவிர்த்து இருக்கலாம் குறைந்த பட்சம் ஒரு எழுத்தோடு நிறுத்தி இருக்கலாம்

 • Vasudevan - Chennai,கனடா

  போராட்டம், போராளிகள் என்று அவர்களை போற்றும் இன்னுமொரு படம். ரயில் விபத்து ஏற்படுத்தி 25 அப்பாவிகளை சாகடிப்பது என்ன நியாயம்? போலீஸ், ராணுவம் இவர்களிடம் காட்டணும் வீரத்தை. படிக்காத இளைஞர்கள் மூளை சலவை செய்யப்பட்ட 1980 களின் முன்பகுதி. அண்டை நாட்டு தீவிரவாதிகள் இன்னும் வந்து தூபம் போட்ட காலகட்டம். ஏற்கனவே கை வெட்டப்பட்ட நிலையில், காலில் விழுந்து கதறும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலையை வெட்டுவது எப்படி நியாயம்? தீவிரவாதம் செய்தால் போலீஸ் அவார்ட் ஆ கொடுக்கும்? நாம் கற்காலத்திலா வாழ்கிறோம்? வண்டி ஓட்ட பெட்ரோல்? மின்சார கம்பிகள் தயாரிக்க தாமிரம், வீடு கட்ட சிமெண்ட்? எங்கே இருந்து வரும்? இரும்பு செய்ய இரும்பு தாது? சுரங்கம் தோண்டம எப்படி சாத்தியம்? மாற்று குடியிருப்பு, மக்களுக்கு வேலை வாய்ப்பு கேட்டு அமைதி போராட்டம் செய்யலாம். ஆயுத போராட்டம் எப்படி செய்யலாம்? யார் இவர்களுக்கு அந்த உரிமை கொடுத்தது? புரட்சி போராட்டப்படம் என்று நினைத்து விஜய் சேதுபதி இந்த படங்களில் இனி நடிக்க கூடாது. நீங்கள் செய்த கொடிய வில்லன் கேரக்டர் வேறு. ஹீரோ தலைவன் போன்ற வாத்தியார், மூளை சலவை செய்யும் கேரக்டர் படு மட்டம். 1987 ஆயுத போராட்டம், அப்பாவி மக்கள் கொடூர கொலை, வங்கியில் கொள்ளை செய்த குழு தலைவன் உள்பட அனைவரும் மக்களால் கல்லால் அடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

 • naadodi - Dallas,யூ.எஸ்.ஏ

  Based on Dinamalar review, I will watch this movie.

 • வலியவன் -

  One of the worst movie, and nothing new in screenplay. Soori effort is waste for this kind of bore movie. I knew vetri has talent but he lost his memory even kamal/rajini/sivaj/MGR who ever act this movie, definitely flap. Hats off soori dedication.

 • தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா

  அர்பன் நெக்ஸலைட்களை ஆதரிக்கும் இந்த படத்தை தடை செய்வது, அமைதிக்கு நல்லது.

 • Aruljothi R - Gulbarga,இந்தியா

  வெற்றிமாறன், மேஸ்ட்ரோ இளையராஜாவோடு கூட்டணி அமைத்தது மிகச் சிறப்பு 👏👏👏👏👏வெற்றிமாறன் + இளையராஜா எனும் அற்புதமான வெற்றிக் கூட்டணி தொடரட்டும் 🎹🎶❤️

 • Vijay D Ratnam - Chennai, Thamizhagam.,இந்தியா

  வெற்றிமாறன் அவர்களே, விடுதலை படம் பார்த்துவிட்டு எழுதுகிறேன். அற்புதம். ஒரு வேண்டுகோள். எழுத்தாளர் சுஜாதா 1981ஆம் ஆண்டில் எழுதிய ரத்தம் ஒரே நிறம் என்ற நாவலை நீங்கள் பிரமாண்டமாக படமாக்கலாமே. சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் ரத்தம் ஒரே நிறம் என்று சொல்லலாம். உங்கள் டைரக்ஷனில் வெளிவந்தால் அது வெற்றிமாறனின் மாஸ்டர் பீஸாக அமையும். கதைக்களம் 1857ஆம் ஆண்டு. பீரியட் பிலிம். ஆங்கில நடிகர் நடிகைகளை நடிக்க வைக்க வேண்டும். கதையின் நாயகனாக முத்துக்குமரன் நாயகியாக பூஞ்சோலை, அவள் தங்கையாக சிவகாமி, குறிப்பாக பிரிட்டிஷ் ராணுவ தளபதியாக வரும் அந்த எட்வார்ட் மக்கின்ஸி என்ற கொடூர வில்லன் ரோல், அவன் வலுக்கட்டாயமாக மணமுடிக்கும் மனைவியாக எமிலி அட்கின்சன் என்ற பாத்திரம், அவள் விரும்பும் ஆஷ்லி மார்ட்டின் ப்ரெஸர் என்ற அற்புதமான ரோல். சுஜாதா ஒவ்வொரு வரியிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். நீங்கள் அநேகமாக படித்து இருப்பீர்கள். இதை படமாக எடுங்கள் என்று கூட பலர் உங்களிடம் சொல்லியிருக்கலாம். நான் இதுவரை இருபது இருபத்தைந்து முறைக்கு மேல் படித்திருப்பேன். ஒன்றுமட்டும் நிச்சயம். வெற்றமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையில் சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம் படம் வெளிவந்தால் இதுவரை இந்திய சினிமாவில் வெளிவந்த அத்தனை படங்களையும் தரத்தில் வசூலில் தூக்கி சாப்பிட்டுவிடும்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement