தயாரிப்பு - விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ், ஆர்டி டீம் ஒர்க்ஸ்
இயக்கம் - செல்லா அய்யாவு
இசை - ஜஸ்டின் பிரபாகரன்
நடிப்பு - விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லெட்சுமி, கருணாஸ்
வெளியான தேதி - 2 டிசம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 26 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5
தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் அரைத்த மாவையே சில இயக்குனர்கள் அரைத்துக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் சில இயக்குனர்கள் புதுப் புதுக் கதைகளை, காட்சிகளை வைத்து மாறுபட்ட ரசனையான படங்களை எடுத்து வருகிறார்கள். ஆண்களுக்குப் பெண்கள் சிறிதும் சளைத்தவர்கள் அல்ல என்பதுதான் இந்தப் படத்தின் கரு. இந்த ஒரு விஷயத்திற்காகவே பெண் முன்னேற்றத்திற்கான படமாக இந்தப் படத்தைக் கருத்தில் கொண்டு தேசிய விருதைக் கூடத் தரலாம்.
இரண்டரை மணி நேரப் படத்தை கலகலப்பாகவும் சொல்ல வேண்டும், சென்டிமென்ட்டாகவும் சொல்ல வேண்டும், அதே சமயம் ஒரு நல்ல கருத்தைப் பதிய வைக்க வேண்டும் என அனைத்தையும் சேர்த்து ஒரு சிறப்பான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் செல்ல அய்யாவு.
பொள்ளாச்சியில் 20 ஏக்கர் விவசாய நிலத்திற்குச் சொந்தமானவர், அதிகம் படிக்காதவர் விஷ்ணு விஷால். திருமணத்திற்காகப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார். வரப் போகும் மனைவி தன்னை விட குறைவாகப் படித்திருக்க வேண்டும், நீளமான தலை முடி இருக்க வேண்டும் என்பது அவருடைய கண்டிஷன். பக்கத்து கேரள நகரமான பாலக்காட்டில் 'கட்டா குஸ்தி' வீராங்கனையான, காலேஜ் படித்தவரான, குறைவான தலைமுடி கொண்டவரான ஐஸ்வர்ய லெட்சுமியை பொய் சொல்லி அவருக்குத் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். மாமா கருணாஸ் ஆலோசனைப்படி மனைவியை தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்க நினைக்கிறார் விஷ்ணு. இடைவேளையின் போது மனைவி பற்றிய அனைத்து உண்மைகளும் அவருக்குத் தெரிய வருகிறது. அதன்பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சமீப காலத்தில் வந்த படங்களில் சரியான இடைவேளைக் காட்சி இந்தப் படத்தில் அமைந்துள்ளது. விஜய், அஜித் படங்களுக்கு நிகராக தியேட்டர்களில் அதைக் கைத்தட்டி ரசிக்கிறார்கள் ரசிகர்கள். கதாநாயகிக்கும் அதிக முக்கியத்துவம் உள்ள ஒரு கதையைத் தேர்வு செய்து அதைத் தயாரித்து கதாநாயகனாக நடிப்பதற்கும் ஒரு பெரிய மனது வேண்டும். அந்த மனதே விஷ்ணுவிற்கு இந்தப் படத்தை வெற்றிப் படமாகக் கொடுத்துவிடும். படிக்காத கிராமத்து இளைஞராக, மாமா பேச்சைக் கேட்பவராக, மனைவியை அடக்கி ஆள வேண்டும் என்று நினைப்பவராக வீரா கதாபாத்திரத்தில் தன்னை அப்படியே ஐக்கியமாக்கிக் கொண்டுள்ளார் விஷ்ணு விஷால்.
'பொன்னியின் செல்வன்' படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் ஐஸ்வர்ய லெட்சுமி. 'கட்டா குஸ்தி' வீராங்கனையாக படத்தில் அதிரடி காட்டியுள்ளார். ஆரம்பத்தில் 'பாயிஷ்' தோற்றத்தில் இருப்பவர் திருமணத்திற்காக நீள தலை முடி, புடவை என மாறும் போது அவரா இவர் என ஆச்சரியப்பட வைக்கிறார். அவர் பற்றி விஷ்ணு எப்போது உண்மையைத் தெரிந்து கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நம்மிடம் ஏற்படுகிறது. அந்த எதிர்பார்ப்பை சரியானதொரு இடைவேளைக் காட்சியில் அதிரடியாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அந்தக் காட்சியில் ஐஸ்வர்யாவின் ஆக்ஷன் அதிரடியோ அதிரடி. படத்தில் அவரைப் பார்த்து நிஜத்தில் எத்தனை பேர் 'குஸ்தி' கற்க போகப் போகிறார்களோ ?.
விஷ்ணு விஷாலின் மாமாவாக கருணாஸ். மனைவியரை கணவன்மார்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற பிற்போக்கான குணம் கொண்டவர். அதை எப்படியெல்லாம் செய்ய வேண்டும் என விஷ்ணுவுக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு ஐஸ்வர்யா தனது 'கையால்' ஒரு பாடம் எடுக்கிறார். அதுவே படத்தின் திருப்புமுனையாக அமைகிறது.
விஷ்ணுவின் வக்கீல் நண்பனாக காளி வெங்கட், ஐஸ்வர்யாவின் சித்தப்பாக முனிஷ்காந்த் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள். ரெடின் கிங்ஸ்லி சில காட்சிகளில் வந்தாலும் சிரிக்க வைக்கிறார். திருமண பந்தத்தின் அர்த்தத்தை சரியாக விளங்க வைக்கிறார் கோச் ஹரிஷ் பெராடி. வில்லன்கள் அஜய், சத்ரு இருவரும் சில காட்சிகளில் வந்தாலும் 'குத்து'பட்டு ஓடுகிறார்கள்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் மலையாள ஸ்டைலில் அமைந்துள்ள திருமணப் பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். பொள்ளாச்சி, பாலக்காடு என இரண்டு மாநில நிலத்தடங்களை அழகாய் பதிவு செய்திருக்கிறது ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு.
முதல் பாதியில் கலகலப்பாக நகரும் படம், இடைவேளைக்குப் பிறகு சென்டிமென்ட் பக்கம் போய்விடுகிறது. இரண்டாம் பாதியில் உள்ள ஒரு சில 'க்ளிஷே'வான காட்சிகள் மட்டுமே படத்திற்குக் கொஞ்சம் மைனஸ் ஆக அமைந்துள்ளது. பெண்களை உயர்வாகச் சொல்லி, அவர்களை உத்வேகப்படுத்தும் ஒரு படம். சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு பெண்களும் பார்க்க வேண்டிய படம்.
கட்டா குஸ்தி - தங்கம்
கட்டா குஸ்தி
வாசகர் கருத்து (7)
-
-
குடும்ப அமைப்புங்கற பேர்ல வரதட்சணை கேட்டு பொண்டாட்டிய கொடுமபடுத்தும் போதெல்லாம் கட்டுக்கோப்பை இருந்துச்சாக்கும் ஆபீசர் ....
-
படத்திற்கு மனைவியின் பெயரை வைத்து விட்டார். Jwala Gutta.
-
மனைவி கணவனிடம் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பது பிற்போக்கு தனமா??
-
க்ளிஷேவ் என்றால் என்ன?
-
ஒரே மாதிரியான என்ற பொருள் படும். அதாவது ஆரம்பத்தில் புதுமையாக இருந்து, பின் எல்லாவற்றிலும் அதை செய்யும்/சொல்லும் பொழுது, அதை ஆங்கிலத்தில் '' என்பார்கள். சில திரைப்படங்களில் புதுமையாக இருந்த காட்சி அமைப்பு, பின் எல்லா திரைப்படங்களிலும் இடம்பெறுவது.
-
விசுவின் "மணல்கயிறு" போன்ற கதையாக உள்ளது. நல்லவேளை, விசு இப்பொழுது நம்மிடையே இல்லை. தனது கதையா திருடி விட்டார்கள் என்று வழக்கு போட்டிருப்பார்.
Already Ladies are in vibration mode. Now This will make them in hyper boxing mode. These kind of movies are the ones which are spoling the society and separating the families, making life miserable for men.