Advertisement

ஜன கன மன (மலையாளம்)

தயாரிப்பு : மேஜிக் பிரேம்ஸ்
இயக்கம் : டிஜோ ஜோஸ் ஆண்டனி
இசை : ஜேக்ஸ் பிஜாய்
நடிகர்கள் : பிரித்விராஜ், சுராஜ் வெஞ்சாரமூடு, மம்தா மோகன்தாஸ், ஜி.எம்.சுந்தர், ஸ்ரீதிவ்யா, சாதனா, ஷம்மி திலகன், இளவரசு, கிட்டி, மற்றும் பலர்
வெளியான தேதி : 28.04.2022
நேரம் : 2 மணி 42 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5

கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட சம்பவமும், அதில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும், அதிரடியாக என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய போலீஸ் அதிகாரி சஜ்ஜனாரை மக்கள் ரியல் ஹீரோ என கொண்டாடியதும் ஞாபகம் இருக்கலாம்.. இந்த என்கவுண்டருக்கு வேறு ஒரு கோணம் இருந்தால்..? அதுதான் இந்த ஜனகனமன படத்தின் கதை. இதை அரசியலுடன் முடிச்சுப்போட்டு விறுவிறுப்பான படமாக கொடுத்திருக்கிறார்கள்.

ஐஐடி பேராசிரியர் மம்தா மோகன்தாஸ் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்படுகிறார். அந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி சுராஜ் வெஞ்சாராமுடு நேர்த்தியாக துப்புத்துலக்கி இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நால்வரை கைது செய்கிறார்.. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லும் வழியில் நால்வரையும் என்கவுண்டரில் போட்டு தள்ளுகிறார் சுராஜ்.

இதனால் பொதுமக்களும் கல்லூரி மாணவர்களும் மாதர் சங்கங்களும் அவரை ரியல் ஹீரோ என பாராட்டுகின்றனர். ஆனால் மனித உரிமை கமிஷன் அவர்மீது வழக்கு தொடுக்கிறது.. இந்த வழக்கில் சுராஜுக்கு ஆதரவாக ஆஜராகும் வழக்கறிஞர் ஷம்மி திலகன் அவரது செயலை நியாயப்படுத்துகிறார்.

ஆனால் எதிர்தரப்பில் திடீர் என்ட்ரி கொடுக்கும் வழக்கறிஞர் பிரித்விராஜ், மம்தா மோகன்தாஸ் மரணத்தில் உள்ள மர்மத்தையும் சுராஜ் நடத்திய என்கவுன்டர் திட்டமிடப்பட்ட ஒன்று என்கிற அதிர்ச்சி அளிக்கும் தகவல்களையும் கூறுகிறார். அப்படியானால் உண்மையில் நடந்தது என்ன..? நேர்மையான அதிகாரியான சுராஜ் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என இந்த என்கவுன்டரை நடத்தவில்லை என்றால், வேறு எதற்காக இதை செய்தார் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு நீதிமன்றத்தில் பிரித்விராஜின் வாதம் மூலமாக பதில் சொல்கிறார்கள்.

தரையில் ஸ்டிக்கை ஊன்றி காலை விந்தியபடி நடந்து வரும் பிரித்விராஜ் இடைவேளைக்கு சற்று முன்னதாகத்தான் என்ட்ரி கொடுக்கிறார் குறிப்பாக நீதிமன்ற விசாரணை அறைக்குள்ளேயே அவரது மொத்த காட்சிகளும் அடங்கி விடுகின்றன. அவர் விசாரணையை ஆரம்பித்த சில நிமிடங்களில் அவர்மீது நமக்கு கோபம் ஏற்பட்டாலும் படம் பார்க்கும் நாம் அனைவரும் திடமாக நம்பும் ஒரு விஷயத்தை அது உண்மை இல்லை என அவர் வாதிடும் காட்சிகள் எதிர்பாராத ட்விஸ்ட் ரகம். .

படத்தின் ஹீரோ பிரித்விராஜா இல்லை சுராஜா என கேட்கவைக்கும் விதமாக இடைவேளைக்கு முன்புவரை சுராஜ் வெஞ்சாரமூடுவின் ராஜ்ஜியம் தான். இனி இவரது கலக்கலான காமெடி நடிப்பை பார்க்கவே முடியாதா என்பது போல படம் முழுக்க சீரியசான மனிதராகவே வருகிறார்..

பேராசிரியராக, மாணவர்களின் உரிமைக்கு துணை நிற்கும் கதாபாத்திரத்தில் மம்தா மோகன்தாஸ் நிறைவான நடிப்பு.. நீண்ட நாளைக்கு பிறகு ஸ்ரீதிவ்யா, அதிலும் முதல் மலையாள படம் என ஆச்சர்யமாக எதிர்பார்த்தால், கிளைமாக்ஸுக்கு சற்று முன்னதாக சில நிமிடங்கள் மட்டுமே காட்சியளித்து மிகப்பெரிய ஏமாற்றம் தருகிறார்.

வழக்கறிஞராக வரும் ஷம்மி திலகனை பார்த்ததும் அவரது தந்தை திலகனையே பார்ப்பது போல இருக்கிறது.. இன்னும் சில வருடங்களில் உருவத்தில் திலகனாகவே மாறிவிடுவார் போல தெரிகிறது.

வில்லனாக ஜி.எம்.சுந்தர், பாசத்தந்தையாக இளவரசு, நீதிபதியாக கிட்டி, ஸ்ரீதிவ்யா இவர்களுடன் கர்நாடக, கேரளா, தமிழக எல்லைப்பகுதியில் நடக்கும் கதை என்பதால் அதிக அளவில் தமிழ் வசனம் பேசும் கதாபாத்திரங்கள் என ஒரு தமிழ்ப்படம் பார்ப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. (தமிழிலும் இந்தபடம் வெளியாகி உள்ளது)..

உண்மையை சொல்வதற்குத்தான் மீடியாவா, அல்லது மீடியா சொல்வது தான் உண்மையா, காவல்துறை அதிகாரி நீதி வழங்கி இருக்கிறார் என்றால், சட்டம் நீதி வழங்காதா என பிரித்விராஜ் கதாபாத்திரம் மூலமாக சில துணிச்சலான கேள்விகளை எழுப்பியுள்ளார் இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி. குறிப்பாக பேராசிரியரின் பாலியல் பாலத்கார மரணம் முதல் பக்க செய்தியாகவும், சிறுமியின் பாலியல் வன்கொடுமை மரணம் ஏழாம் பக்கம் பெட்டி செய்தியாக இடம் பெறுவதிலும், சோஷியல் மீடியாவில் எந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, அது ஏன் என்றும் பல கேள்விகளை எழுப்பி நம்மை யோசிக்க வைக்கிறார் இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி.

இந்தப்படம் வெளியாவதற்கு முன் சில நாட்கள் முன்னதாக படத்தில் இடம்பெறும் குண்டு வெடிப்பு நிகழ்வு ஒன்று டீசராக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.. ஆனால் படத்தில் அந்த காட்சி இடம்பெறவில்லை,. அதற்கு முன்னதாக வெளியான டிரைலரில் காட்டப்பட்ட காட்சிகளும் கூட படத்தில் எங்கேயும் காணோம். அதேசமயம் ஐபிஎஸ் அதிகாரியான பிரித்விராஜ் வழக்கறிஞராக மாறி வாதாடுகிறார். இதெல்லாம் என்ன என குழம்ப வேண்டாம்.. இந்தப்படத்திற்கு இரண்டாம் பாகம் உண்டு என ஏற்கனவே பிரித்விராஜ் ஹின்ட் கொடுத்திருப்பதால் இவையெல்லாவற்றுக்கும் இரண்டாம் பாகம் விடை சொல்லும் என எதிர்பார்க்கலாம்.

ஜனகனமன : நீதியின் மறுபக்கம்

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Vaduvooraan - Chennai ,இந்தியா

    இடதுசாரி சித்தாந்த பாரத்தினால் தனது கருத்துக்கள் அனைத்தையுமே தலையணைக்கு பஞ்சை திணிப்பது போல ஒரே படத்தில் சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குநர். அதுதான் பிரச்சினை படத்தின் மிகப்பெரிய பலவீனம் அதன் நீளம். எடிட்டருக்கு மண்டை காய்ந்திருக்கும்.. பார்ப்பவர்களுக்கும்தான் ஒரு நல்ல திரில்லர் படம் பிரச்சாரப் படமாக உருமாறியது கோளாறு நெகடிவ் பாத்திரங்களுக்கு காவி உடையணிவித்து தனது இடதுசாரி கொள்கைகளை தூக்கி நிறுத்துகிறார் இயக்குநர் A wasted effort

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement