Advertisement

ஐங்கரன்

தயாரிப்பு - காமன்மேன்
இயக்கம் - ரவி அரசு
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - ஜிவி பிரகாஷ்குமார், மகிமா நம்பியார்
வெளியான தேதி - 12 மே 2022
நேரம் - 2 மணி நேரம் 17 நிமிடம்
ரேட்டிங் - 3/5

பார்த்துப் பார்த்துப் பழகிப் போன கதைகளைச் சொல்லாமல் புதிதாக கதை சொல்ல வரும் இயக்குனர்களையும், புதுப்புது கதாபாத்திரங்களை படைக்கும் இயக்குனர்களையும்தான் இந்தக் கால ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி வரும் படங்கள்தான் வெற்றி என்ற கோட்டைத் தாண்டுகின்றன.

2015ல் வெளிவந்த 'ஈட்டி' என்ற விளையாட்டை மையப்படுத்திய விறுவிறுப்பான ஆக்ஷன் படத்தை தனது முதல் படமாகக் கொடுத்து யார் இவர் எனக் கேட்க வைத்தவர் இயக்குனர் ரவி அரசு. அந்தப் படத்தில் வித்தியாசமான கதை, கதாபாத்திரங்கள் அவருக்கு வெற்றியைத்தேடிக் கொடுத்தது. அது போலவே அவருடைய இரண்டாவது படத்திலும் வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களுடன் கொடுத்து இந்தப் படத்தையும் பேச வைக்கிறார்.

மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்தவர் ஜிவி பிரகாஷ்குமார். நாமக்கல்லில் வசிக்கும் பிரகாஷுக்கு புதுப்புது கண்டுபிடிப்புகளைச் செய்வது வழக்கம். அப்படி பல தயாரிப்புகளை கண்டுபிடித்து அவற்றிற்கு உரிமம் பெற நடையாய் நடக்கிறார். ஆனால், அவருக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இதனிடையே, அவர்களது ஊரில் ஆழ்துளை குழாயில் விழுந்த ஒரு குழந்தையின் உயிரை தன்னுடைய கண்டுபிடிப்பால் காப்பாற்றுகிறார். அதோடு, வட இந்தியக் கும்பல் ஒன்று செய்யும் வைரக் கொள்ளையை தனது சாதுர்யத்தால் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.

கடந்த சில படங்களாக தனக்குப் பொருத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தொடர்ச்சியாக வெற்றியைப் பெற்று வருகிறார் ஜிவி பிரகாஷ்குமார். 'பேச்சுலர், செல்பி' படங்களைத் தொடர்ந்து இந்தப் படமும் அவருக்கு வெற்றிப் படமாக அமையலாம். ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்து இளைஞன், மெக்கானிக்கல் இஞ்சினியரிங் முடித்தவர், விதவிதமான கண்டுபிடிப்புகளின் சொந்தக்காரர் என எளிதில் நம் மனதில் இடம் பிடித்துவிடுகிறார் பிரகாஷ். பார்க்க சாதாரணமாகத் தெரிந்தாலும் ஆக்ஷனிலும் அசத்துகிறார். தனக்கான படங்கள் எவை, கதாபாத்திரங்கள் எவை என்பதை ஜிவி பிரகாஷ் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது.

ஜிவி பிரகாஷின் ஜோடியாக மகிமா நம்பியார். ஓரிரு காட்சிகள் மட்டுமே வந்து போகிறார். கதாநாயகி என்று ஒருவர் படத்தில் இருக்க வேண்டும் என சேர்த்திருப்பார்கள் போலிருக்கிறது.

படத்தின் முக்கிய வில்லனாக வட நாட்டு கொள்ளையனாக சித்தார்த். தோற்றத்திலும், பார்வையிலுமே வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். முயன்றால் இன்றைய இளம் வில்லன்கள் பஞ்சத்தைப் போக்கலாம். ஜிவி பிரகாஷின் நண்பனாக காயலான் கடை வைத்திருக்கும் காளி வெங்கட். ஜிவி பிரகாஷின் அப்பாவாக ஆடுகளம் நரேன், லஞ்சம் வாங்கும் ஆய்வாளராக ஹரிஷ் பெராடி அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.

படம் ஆரம்பம் முதல் கடைசி வரை போவது தெரியவில்லை. இடையில் அந்த ஆழ்துளை குழாய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்துடன் பெரிய அளவில் ஒட்டவில்லை. மையக் கதையை விட்டு அக்காட்சிகள் படத்தை வேறு திசையில் நகர்த்திச் செல்கின்றன. அவற்றின் நீளத்தையாவது குறைத்திருக்கலாம்.

பின்னணி இசையில் கவனம் செலுத்தியிருக்கும் ஜிவி பிரகாஷ், பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நாமக்கல் நகரையும், அதன் பின்னணியையும் கதையுடன் ஒன்ற வைத்திருக்கிறது சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு. இரண்டு மூன்று சண்டைக் காட்சிகள்தான் என்றாலும் அனைத்துமே சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

ஐங்கரன் - கரம் கொடுப்பான்…

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement