Advertisement

பாஜ நிர்வாகியை தீர்த்துக்கட்டியது ஏன்? கொலையாளிகள் திடுக் வாக்குமூலம் | BJP SC wing zonal head

தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த ரவுடி பீரி வெங்கடேசன் வயது 35. பாஜவில் எஸ்சி பிரிவு மண்டல தலைவராக இருந்தார். பீர்க்கன்கரணை, தாம்பரம், சேலையூர் போலீஸ் ஸ்டேஷன்களில் இவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. புரட்சி பாரதம் நிர்வாகி கொலையில் தொடர்புள்ளவர். நேற்று காலையில் குட்வில் நகரில் உள்ள காலி மைதானம் ஒன்றில் வெட்டு காயங்களுடன் அவர் இறந்து கிடந்தார். மர்ம நபர்கள் அவரை வெட்டி கொலை செய்திருந்தனர். சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் வெங்கடேசனுக்கு ஏற்கனவே பகை இருந்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் மீது சந்தேகம் வந்தது. கொலை நடந்த பிறகு 4 பேரும் ஊரில் இல்லை. அவர்களை போலீசார் தேடினர். தாம்பரம் அருகே காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. அங்கு சென்ற போலீசார் சந்துரு, அருண், சதீஷ்குமார், குணா ஆகிய 4 பேரையும் சுற்றி வளைத்தனர். வெங்கடேசனை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: பெருங்களத்தூர் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களை வளைத்து மோசடியாக விற்பதில் வெங்கடேசனுக்கும் கைதானவர்களுக்கும் இடையே போட்டி வந்தது. முன்பு நண்பர்களாக இருந்தவர்கள் பிறகு எதிரிகளாக மாறினர். வெங்கடேசன் போல் கைதானவர்கள் மீதும் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலையாளிகளில் 3 பேர் வேறொரு வழக்கில் கைதாகி சமீபத்தில் தான் ஜாமினில் வெளியே வந்திருந்தனர். தங்களது தொழிலுக்கு வெங்கடேசன் தடையாக இருப்பதாக உணர்ந்தனர். அவர் தங்களை கொல்லக்கூடும் என்றும் அச்சப்பட்டனர். எனவே வெங்கடேசன் முந்துவதற்குள் அவரை தீர்த்துக்கட்டி விட வேண்டும் என்று திட்டம் போட்டனர். வெங்கடேசனிடம் திடீரென நட்பாக பேசினர். மது அருந்தலாம் என்று அவரை சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றனர். வெங்கடேசனுக்கு சற்று போதை ஏறியதும் ஏற்கனவே அந்த பகுதியில் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement