Advertisement

22 ஆண்டு டிமிக்கி தந்த கொள்ளையன் டேவிட் பினு | காசநாடு சசி ஆக மாறிய கதை | theeran adhigaram ondru

பூந்தமல்லியில் 2000 ஆண்டு நடந்த கொள்ளையில் மாரி என்ற சின்னமாரி, டேவிட் பினு, பீட்டர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு நடந்தது. 2001ம் ஆண்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த 3 பேரையும் சிறையில் இருந்து அழைத்து சென்றனர். போகும் வழியில் 3 பேரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடினர். சின்ன மாரியை போலீசார் என்கவுன்ட்டர் செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வந்தனர். ஒரு கட்டத்தில் பீட்டர் பிடிபட்டான். டேவிட் பினு மட்டும் போலீசில் சிக்காமல் டிமிக்கி கொடுத்தான். அவனை கைது செய்து ஆஜர்படுத்த பலமுறை கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால் போலீசால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. 22 ஆண்டுகள் கழித்து டேவிட் பினு பற்றி ஒரு துப்பு கிடைத்தது. இன்னொரு வழக்கில் அவன் கேரள மாநிலம் கொல்லம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என்பது தான் அந்த தகவல். அந்த சிறையில் இருக்கும் கைதிகள் முகத்தை பார்த்து அவனை அடையாளம் காண முடியவில்லை. அங்கு ஆவணங்களில் பதிவாகி இருந்த கைரேகை பதிவுகளுடன் ஏற்கனவே தங்கள் வசம் இருந்த டேவிட் பினுவின் கைரேகை பதிவை ஒப்பிட்டு பார்த்தனர். அதில் ஒருவனது கைரேகை பொருந்தியது. அவனது கெட்டப் முற்றிலும் மாறி இருந்தது. டேவிட் பினு என்ற பெயரை காசநாடு சசி என்று மாற்றியதும் தெரிய வந்தது. பூந்தமல்லியில் இருந்து தப்பி சென்ற டேவிட் பினு, காசநாடு சசி என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு கேரளாவில் கைவரிசை காட்டி வந்துள்ளான். கேரள போலீசில் மட்டும் 20க்கும் அதிகமான கொள்ளை வழக்குகள் அவன் மீது இருப்பது தெரியவந்தது. அவனை பூந்தமல்லி வழக்கில் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவனை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. போலீசை தாக்கி விட்டு தப்பி ஓடிய கொள்ளையனை 22 ஆண்டு கழித்து தீரன் படம் பாணியில் கைரேகை பதிவை வைத்து தமிழக போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement