Advertisement

கோவை குண்டுவெடிப்பு: 14 வருடம் கழித்து உடலில் இருந்து ஒரு ஆணி எடுத்தோம்

1998 ம் ஆண்டு, பிப்ரவரி 14-ம் நாள். பிப்.,14 என்றாலே காதலர் தினம் தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், கோவைவாசிகளுக்கோ, அது ஒரு கறுப்பு தினம். கறுப்பு சனிக்கிழமை. அன்றைய தினம் உலகமே அதிர்ந்து போனது, கோவையில் நடந்த அதிபயங்கர தொடர் குண்டுவெடிப்பால்... நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக கோவை வந்த பா.ஜ., தலைவர் அத்வானியை குறிவைத்து நடத்தப்பட்டதுதான் இந்த சங்கிலித்தொடர் குண்டுவெடிப்பு சதி. அத்வானியின் விமானம் லேட். காலதாமதமாக கோவை பீளமேடு ஏர்போர்ட் வந்திறங்கினார். அதற்கு முன்பே அதிர்ந்தது கோவை. ஒரு இடம் , இரண்டு இடமல்ல... 11 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. சின்னாபின்னமானது கோவையின் அமைதி. அடுத்தடுத்து ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்துவமனை, சுந்தராபுரம் என, திரும்பிய பக்கமெல்லாமல் குண்டுவெடிப்பு. மக்களின் கூக்குரல். எங்கும் மரண ஓலம். இக்குண்டுவெடிப்பில், 58 பேர் பலியாகினர். 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான தனியார், பொதுச் சொத்துக்கள் சேதமடைந்தன. இத்தாக்குதலில் இருந்து மீளமுடியாமல் தவித்தது கோவை. ராணுவம் வந்தது. புலன் விசாரணை அமைப்புகள் முடுக்கிவிடப்பட்டன. டீ கேன் குண்டு, பைப் குண்டு என, விதவிதமான குண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன. ஆர்.எஸ்.புரம் லோகமான்யா வீதியில் நிறுத்தப்பட்டிருந்த அதிபயங்கர சக்தி வாய்ந்த கார் குண்டை உள்ளூர் வெடிகுண்டு நிபுணர்களால் செயலிழக்கச் செய்ய முடியவில்லை. எல்லைப்பாதுகாப்பு படையினர் வந்தபிறகே ஒரு வாரத்துக்குப்பின் செயல் இழக்கச் செய்யப்பட்டது. இந்தியாவில் மும்பைக்கு அடுத்தபடியாக பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கடந்த 25 ஆண்டுகளில் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். இதில் ஒரு சிலருக்கு மட்டும் மாநில அரசு பணியில் தொகுப்பூதியத்தில் பணியாற்ற வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. சிலருக்கு 5 ஆயிரம், பத்தாயிரம் ரூபாய் என சொற்ப இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. குண்டு வெடிப்பு நடந்து 25 ஆண்டுகள் ஆன பின்னரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என்ற மனக்குமுறல் அவர்களுக்கு உள்ளது. இது, அவர்களின் ஆதங்கம்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement