Advertisement

கடகம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 – 2023 .. சங்கடங்கள் நீங்கும்

புனர்பூசம் 4 ஆம் பாதம்: அறிவால் வெல்வீர்கள்

மனதை ஆளக்கூடிய சந்திரனை ராசிநாதனாகவும், அறிவுக்காரகனான குருவை நட்சத்திர அதிபதியாகவும் கொண்டதால் சிந்தித்து செயல்பட்டு அதில் வெற்றியைக் காண்பவர்கள் நீங்கள். உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் முன்னேற்றத்தில் தடைகளை உண்டாக்கி வந்த நிலையில் .2022 ஏப்.13 அன்று உங்கள் ராசிக்கு பாக்கியஸ்தானமான மீனராசியில் சஞ்சரிக்கிறார் குரு. வாக்கு பலமும், சாதுரியமான பேச்சாற்றலும், எதையும் ஆராயக்கூடிய சக்தியும் படைத்தவராக செயல்படுவீர்கள். குரு சஞ்சாரத்தில் ஒன்பதாமிடம் என்பது பாக்கியத்தை வழங்கும் இடமாகும். குருதான் உங்களுக்கு பாக்கியாதிபதி என்பதால் இதுவரை நீங்கள் அனுபவித்த சங்கடங்கள் எல்லாம் இல்லாமல் போகும். தன்னுடைய ஸ்தான பலத்தால் மட்டுமல்ல, தனது 5ம் பார்வையால் உங்கள் ராசியையும் குரு பார்ப்பதால் இது அதிர்ஷ்ட காலமாக அமையும். இது வரையில் உங்கள் கனவாக மட்டுமே இருந்த சில காரியங்கள் இப்போது நினைவாகப் போகிறது. புகழும் பெருமையும் உங்களை வந்தடையும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி அடைவீர்கள். எதையோ பறி கொடுத்ததுபோல் வாழ்ந்து வந்த நிலை மாறி எல்லாம் கிடைத்தது என கருதும் அளவிற்கு உங்கள் மனம் இக்காலத்தில் சந்தோஷமடையும்.

நிதி: தடைபட்டிருந்த வருமானம் வர ஆரம்பிக்கும். பூமி, வீடு போன்றவற்றில் உங்களுடைய முதலீடு பல மடங்காகும். எதிர்பார்த்திருந்த வருமானம் உங்களை வந்தடையும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலையில் புதிய மாற்றம் உண்டாகும். சொந்த வீடு இல்லாதவர்கள் புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். வீடு இருப்பவர்கள் வசதிக்கேற்ப விரிவு செய்வீர்கள். முதலீட்டில் மோசம். கொடுத்த இடத்தில் ஏமாற்றம் என்றிருந்த நிலையில் மாற்றம் உண்டாகும். நீங்கள் இழந்த யாவும் மீண்டும் உங்களை வந்தடையும். இக்காலத்தில் புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள். அதனால் இழப்புகளே உண்டாகும்.

குடும்பம்: உங்கள் நிலையில், செயலில் மாற்றம் உண்டாகும். இதுவரையில் திருமணம் கூடி வரவில்லையே என்று வருந்தியவர்களுக்கும், வீட்டில் வயது வந்த பிள்ளைகள் இருந்தும் திருமணம் நடக்கவில்லையே என்று சோகத்தில் இருந்தவர்களுக்கும் இக்காலம் நன்மையை உண்டாக்கும். வீட்டில் மங்கள ஓசை கேட்கும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் ஏக்கம் தீரும். ஒரு சிலருக்கு இருப்பிட மாற்றம் நிகழும். ஒரு சிலர் வெளியூரில் குடியேறுவர். வாழ்க்கைத் துணையின் வழியே நன்மைகள் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்னைகள் தீரும். சகோதர வகையில் ஒற்றுமை உண்டாகும். இக்காலம் பல வகையிலும் உங்கள் குடும்பத்திற்கு நன்மைகளை வழங்கிடும் காலமாகவே இருக்கும்.

கல்வி: குரு உங்கள் நட்சத்திர அதிபதி என்பதுடன் அவர் உங்கள் ராசியில்தான் உச்சமாகிறார் என்பதால் பாக்கிய ஸ்தானத்தில் அவர் சஞ்சரிக்கும் இக்காலத்தில் உங்கள் அறிவாற்றலை அதிகரிப்பார். தடைபட்ட கல்வியில் வேகம் தோன்றும். காமர்ஸ், அக்கவுண்ட்ஸ், பொறியியல் மாணவர்கள் மேன்மை அடைவர். பாடங்களில் இருந்த குழப்பம் விலகும். உயர்கல்வியில் முயற்சி வெற்றியளிக்கும். கடல் கடந்து செல்லும் யோகம் உங்கள் ராசியினருக்கே அதிகம் என்பதால் அதற்கான முயற்சி வெற்றி பெறும். அரசு வகையில் உதவியும் உண்டாகும். அரசுத் தேர்வு உங்களுக்கு சாதகமாகும்.

பெண்கள்: அழகு, ஆற்றல் கொண்டவர்களாக இருந்தாலும் உங்கள் மனம் எப்போதும் ஒருநிலைப்பாட்டில் இருக்காது. அதனால் குடும்பத்தில் வீண் பிரச்னைகள் தலைதுாக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் தோன்றும். 4ம் இடமான சுகஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் கையில் வெண்ணெய் இருந்தும் நெய்க்கு அலையும் நிலைக்கு ஆளாவீர்கள். பூர்வீக வழியிலும், சகோதரர்களாலும் நன்மை காண்பீர்கள். 7ல் உள்ள சனியால் கணவரின் உடல்நிலைக் குறித்த அச்சம் தோன்றும் என்றாலும் 2022 மே 25 அன்று சனி வக்ரமடைவதால் அந்த பயம் விலகும். பிள்ளைகள் வழியே நன்மைகள் கண்டு மகிழ்வீர்கள். ஒரு சிலர் சுகத்தைத்தேடி மாற்றுவழியும் காண்பீர்கள் என்றாலும் அங்கும் நீங்கள் தேடியது கிடைக்காமல் போகும்.

உடல்நிலை: மனக்குழப்பமே முதல் நோயாக இருக்கும். தேவையற்ற பிரச்னைகளை எப்போதும் மனதிற்குள் கொண்டு வராதீர்கள். நடப்பது எல்லாம் அவனின் செயல் என எண்ணுங்கள். சிலருக்கு சுவாசக்கோளாறு, மாரடைப்பு, நெஞ்சுவலி தோன்றினாலும் சிகிச்சையால் அவை சரியாகும். சிலர் ஒவ்வாமையாலும், தொற்று நோயாலும் பாதிக்கப்படலாம். எனவே அனைத்திலும் கவனமுடன் இருப்பதால் நோய்களில் இருந்து தப்பிக்கலாம். சப்தம சனி 2022 மே25 முதல் வக்ரமடைவதால் உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் குறையும் என்றாலும் சுகஸ்தானத்தில் கேதுவால் ஒழுக்க குறைவுகளால் மறைமுக நோய்கள் சிலருக்கு தோன்றவும் வாய்ப்புண்டு.

தொழில்: முடங்கிப்போன உங்கள் தொழிலில் மாற்றம் உண்டாகும். தொழில் அக்கறை அதிகரிக்கும். வியாபாரத்திற்காக இடத்தை மாற்றுவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அரசு பணியில் இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். அதன்வழியே நன்மைகள் உண்டாகும். தொழில் ஸ்தானத்தில் உள்ள ராகு குறுக்கு வழிகளில் உங்களை கொண்டு செல்வார். உங்கள் தகுதிக்கு ஏற்பில்லாத தொழிலில் ஈடுபடுத்தி லாபத்தை வழங்குவார். சிலருக்கு வெளிநாட்டு தொடர்புகள் உண்டாகும் என்றாலும் சட்டத்திற்கு புறம்பான தொழில்களில் ஈடுபட வேண்டாம். அதனால் சங்கடங்களுக்கு ஆளாக நேரிடும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ப வருமானம் கூடும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு இக்காலத்தில் தகுதிக்குரிய வேலைகள் கிடைத்து மகிழ்வீர்கள்.

பரிகாரம்: திங்களூரில் குடியிருக்கும் சந்திரனை வேண்டி செயல்களில் ஈடுபட அச்சம் நீங்கும். வெற்றி உண்டாகும்.

பூசம்: சங்கடங்கள் நீங்கும்

ஆயுள் காரகனும் நீதிமானுமாகிய சனியை நட்சத்திர அதிபதியாகவும், அறிவு, ஆற்றல் காரகனான சந்திரனை ராசி நாதனாகவும் கொண்டதால் சரியெனப் பட்டதை சரியென்றும், தவறெனப் பட்டதை தவறென்றும் தைரியமாக சொல்லக் கூடியவர்கள் நீங்கள். வாதம் புரிவதில் உங்களுக்கு நிகர் நீங்களாகவே இருப்பீர்கள். உங்களிடம் சண்டையிட்டோ விவாதம் புரிந்தோ அவ்வளவு எளிதாக யாரும் வெல்ல முடியாது. ஆனால், உங்கள் நட்சத்திர அதிபதியும், ராசி அதிபதியும் ஒருவருக்கொருவர் பகை பெற்றவர்கள். உங்களுக்கு களத்திர ஸ்தானாதிபதியாகவும் சனி விளங்குவதால் உங்களில் பலருடைய திருமண வாழ்க்கை நிம்மதியற்றதாக இருக்கும். ஆனால் கவுரவத்தை வழங்கும் குரு உங்கள் ராசியில் உச்சம் பெறுவதால் எல்லோராலும் மதிக்கக் கூடியவர்களாக இருப்பீர்கள். இந்நிலையில் ஏழாமிடத்து கண்டக சனியாலும், அஷ்டம குருவாலும் சங்கடங்களை அனுபவிக்கும் நிலையில் நன்மை வழங்க 2022 ஏப்.13ல் குரு பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறர். ராசியை 5ம் பார்வையால் பார்ப்பதால் நல்ல மாற்றங்களை காண்பீ்ர்கள். மனதில் புதிய வலிமை பெருகும். வெற்றியை நோக்கி இனி நடை போடுவீர்கள்.

நிதி: பாக்கியாதிபதியும் பொன்னன் என புகழப்படுபவருமான குரு, பாக்கியஸ்தானத்திலேயே சஞ்சரிப்பதால் பண வரவு அதிகரிக்கும். பொன்னும் பொருளும் சேரும். முதலீடுகளில் இருந்து வருமானம் வரும். புதிய சொத்து சேரும். குடும்பத்திற்குத் தேவையானவற்றை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை பதிவதால் பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் விலகும். அரசு தரப்பில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகைகள் வந்து சேரும். புதிய வாகனம். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். நிலம், மனை என்று ஒரு சிலருக்கு யோகம் உண்டாகும். பிள்ளைகளின் வழியே சுபச்செலவுகள் தோன்றும். அனைத்தையும் சமாளிக்கும் வகையில் உங்கள் நிதி நிலை வலுவாகும்.

குடும்பம்: வருமானத் தடையாலும், சப்தம சனி ஏற்படுத்திய சங்கடத்தாலும் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையை சந்தித்த நீங்கள், 2022 ஏப்.13ல் நடைபெறும் குருப்பெயர்ச்சியாலும். 2022 மே 25ல் சனி வக்ரமடைவதாலும் முன்னேற்றத்தை சந்திப்பீர்கள். குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்குவீர்கள். பெரியவர்கள் வழியில் தேவையான உதவிகள் கிடைக்கும். சிலருக்கு பிள்ளைகளின் வழியே வருமானம் வரத்தொடங்கும். கணவன். மனைவி உறவில் சங்கடங்கள் விலகும். வீடு வாசல் வாங்கி சந்தோஷமடைவீர்கள். முயற்சியில் வெற்றிகள் காண்பீர்கள். மனதிற்குள் நம்பிக்கையும் துணிச்சலும் உண்டாகும். திருமண யோகத்தாலும், குழந்தை பாக்கியத்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

கல்வி: குடும்ப சூழ்நிலை, பொருளாதார நெருக்கடியால் கல்வியில் ஏற்பட்ட தடைகள் விலகும். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். பொறியியல், சட்டம், கல்வியியல், கம்ப்யூட்டர் மாணவர்கள் முன்னேற்றம் காண்பர். ஜல ராசிக்காரரான உங்களை தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு வேறு மாநிலம், வேறு தேசம் என்று அனுப்பி வைப்பார். அரசுத் தேர்வுகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். பள்ளி, கல்லுாரி நேரத்திற்குப் பிறகும் கூடுதல் பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள். போட்டித் தேர்வுகளில் பங்கேற்க இது ஏற்ற காலம்.

பெண்கள்: பாக்கியஸ்தானத்து குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் செல்வாக்கு அதிகரிக்கும். கர்ப்பப்பை பாதிப்பால் சங்கடப்பட்டு வந்தவர்கள் சிகிக்சையால் நலமடைவீர்கள். கணவன், மனைவி உறவில் இருந்த பிரச்னைகள் விலகி அன்பு வைப்பீர்கள். பிள்ளைகளின் நலனுக்கான முயற்சிகளில் வெற்றியடைவீர்கள். பூர்வீக சொத்துகள் உங்கள் கைக்கு வரும். பெற்றோர் வகையில் ஆதரவு அதிகரிக்கும். வெளியூர் பயணம், வெளியூர் வாசம் என்ற நிலை ஒரு சிலருக்கு உண்டாகும். 2022 ஆக.8 வரை மகிழ்ச்சியும் இன்பமும் உங்கள் வாழ்க்கையில் மேலோங்கும். உங்கள் உடலில் உற்சாகமும் வீரியமும் அதிகரிக்கும். ஆசைகளும் மேலோங்கும். 4 ல் உள்ள கேது சுகம் சம்பந்தப்பட்டவற்றில் சில தவறுகளுக்கு உங்களைத் துாண்டுவார். ஆனால் நீங்கள் எல்லை மீறும் போதெல்லாம் குருவின் பார்வை உங்களை யோசிக்க வைத்து விடும் என்றாலும் எதிர்பாலினரிடம் இக்காலத்தில் எச்சரிக்கை வேண்டும்.

உடல்நிலை: சப்தமத்தில் சஞ்சரிக்கும் சனி ஒன்று போய் ஒன்றாய் உங்கள் உடல் நிலையில் சங்கடங்களை உண்டாக்குவார். சாதாரண சில பிரச்னைகளும் கண்டம் போல் உங்களுக்கு சோதனையை உண்டாக்கும். இந்த நேரத்தில் சுக ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். துாக்கமின்மையும், வேலைக்கு உணவருந்தாமல் போவதும் உங்கள் உடல் நிலையில் கடுமையான பாதிப்பை உண்டாக்கும். நெஞ்சுவலி, வயிற்றுவலி, நோய்த்தொற்று, உடல் பலவீனத்தால் பயம் என்று உங்கள் மனமும் உடலும் சங்கடத்திற்கு ஆளாகும் என்றாலும். 2022 மே25 முதல் சப்தம சனி வக்ரமடைவதால் ஓரளவிற்கு உங்கள் உடல் நிலையில் நன்மைகள் தோன்றும். உடல் நலனிலும் அதற்குரிய பாதுகாப்பிலும் எச்சரிக்கை மிக அவசியம்.

தொழில்: முதலீடு செய்தும் முன்னேற்றமில்லை, முயற்சிகள் செய்தும் ஆதாயமில்லை என வருந்திய உங்களுக்கு 10ம் இடத்து ராகு நன்மைகளை வழங்குவார். வருமானத்திற்கு புதிய வழியைக் காட்டி அதன் வழியே பெரிய லாபத்தை வழங்குவார். பாக்கிய ஸ்தானத்து குரு அவர் பங்கிற்கு உங்களுக்கு ஆதாயம் அளிப்பார். தொழிலில் இருந்த தடைகள் அகலும். புதிய உத்திகளால் தொழிலை விரிவு செய்வீர்கள். கம்பெனிகள், கம்ப்யூட்டர் தொழில், ஐ.டி. நிறுவனங்கள், இரும்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். ஆசிரியர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதுடன் நினைத்த இடத்திற்கு மாறுதல், பதவி உயர்வு என முன்னேற்றம் காண்பர். ஆன்மிகவாதிகள் புகழுடன் இருப்பர். சட்டம், கல்வி, அரசியல், சினிமா, கலை, இலக்கிய, பத்திரிகைத் துறையினர் புகழுடன் திகழ்வர்.

பரிகாரம்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோயிலுக்கு ஒருமுறை செல்லுங்கள். விஷ்ணு துர்க்கையை வழிபட்டு செயல்படுங்கள். வாழ்வில் எல்லாம் நலமாக நடப்பதை உணர்வீர்கள்.

ஆயில்யம்: குரு பார்க்க கோடி புண்ணியம்

கல்விக்கும் அறிவுக்கும் காரகனாகிய புதனை நட்சத்திர அதிபதியாகவும், உடலுக்கும் மனதிற்கும் காரகனாகிய சந்திரனை ராசி நாதனாகவும் கொண்டவர் நீங்கள். வாழ்வின் நெளிவு சுளிவுகள் அனைத்தும் உங்களுக்கு அத்துப்படியாகும். உங்கள் சிந்தனை அழகியல் சார்ந்ததாகவும், பொதுநலம் குறித்ததாகவும் இருக்கும். செயற்கரிய செயல்கள் செய்து சாதனையாளராக விளங்க வேண்டும் என செயல்படுவீர்கள் என்றாலும், கண்டச்சனியாலும், அஷ்டம குருவாலும் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வந்தீர்கள். 2022 ஏப்.13 ல் குரு பாக்கிய ஸ்தானத்திற்கு சென்று பாக்கிய குருவாக உங்களுக்கு நற்பலன்களை வழங்கி உங்கள் சங்கடங்களை அகற்ற காத்திருக்கிறார். .2022 மே25 முதல் சனியும் வக்ரகதியடைவதால் நடுக்கடலில் தத்தளித்த நீங்கள் கரையை அடைந்தது போல் மாற்றம் பெறுவீர்கள். உங்களின் சாதுர்யத்தால் நீங்கள் நினைத்ததை எல்லாம் இப்போது சாதித்துக் கொள்வீர்கள்.

நிதி: வாழ்வின் அத்தியாவசியத் தேவைக்கும் நெருக்கடியை சந்தித்த உங்களுக்கு இனி நிதிநிலையில் தாராளப்போக்கு தென்படும். எதிர்பார்த்திருந்த வருமானம் வந்து சேரும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் சுமூகமான தீர்வு காண்பீர்கள். தாய்வழி மாமன் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார். புதிய சொத்துகள் வாங்குவது குறித்த சிந்தனை உண்டாகும். வண்டி, வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கையிருப்பு அதிகரிக்கும் என்பதால் உங்களிடம் புதிய வேகம் உண்டாகும். நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வீர்கள். எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடாதீர்கள். அதனால் சங்கடங்கள் உருவாக வாய்ப்புண்டு.

குடும்பம்: உறவினர் வகையில் இருந்த பிரச்னைகள் விலகும். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் நலன் சார்ந்த பணிகளில் ஈடுபடுவீர்கள். கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் என அவர்களுடைய வாழ்க்கைக்குத் தேவையானவற்றை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே உண்டான கருத்து வேறுபாடு அகலும். உங்கள் குடும்பம், உங்கள் குடும்பத்தினர் என்று உங்கள் செயல்பாடு இருக்கும். குடும்பத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்குவதில் அதிகபட்ச அக்கறை கொள்வீர்கள். ஒரு சிலர் வேலை, தொழிலின் காரணமாக தான் ஓரிடம் குடும்பம் ஓரிடம் என்றிருந்தாலும் உங்கள் வருவாயைக் குடும்பத்தின் நலனுக்கே செலவு செய்வீர்கள்.

கல்வி: 7 ல் சனி, 8 ல் குரு என்ற நிலையால் சோதனையை சந்தித்திருப்பீர்கள். கற்றலின் மீதான ஆர்வத்தில் தடை, நெருக்கடி இருந்திருக்கும். பாக்கிய ஸ்தான குரு அந்த நிலையை மாற்றி அமைப்பார். உங்களுடைய ஆற்றல் பன்மடங்கு வெளிப்படும். மருத்துவம், ஏரோ நாட்டிக்ஸ், மெரைன், கல்வியியல், வரலாறு, இலக்கியத்துறை மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். படிப்பில் உங்கள் கவனம் முழுமையாக செல்லும். விரும்பிய பாடத்தில் விரும்பிய கல்லுாரியில் சேர வாய்ப்புண்டாகும். உங்களுக்கு உண்டாகும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதால் வெற்றி எளிதாகும்.

பெண்கள்: சமீப காலமாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்த நிலையில் இக்காலம் உங்களுக்கு நற்காலமாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கணவன், மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். கணவரின் உடல் நிலையில் கவனம் தேவைப்படும். பிள்ளைகள் குறித்த அச்சம் விலகும். உங்களுக்கு உதவி புரியக்கூடிய அளவில் அவர்களின் நிலை உயரும். பெற்றோர் வழி உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். 4 ல் உள்ள கேது ஆசைகளையும் துாண்டுவார், உடல் நிலையிலும் சங்கடத்தை உண்டாக்குவார். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளாலும் மறைமுக நோய்களாலும் உங்களில் சிலர் பாதிக்கப்படுவீர்கள். 2022 மே25ல் சனி வக்ரமடைவதால் கண்டச்சனியால் உண்டான பாதிப்புகள் குறையும். அந்நிய மத, இனத்தினரின் நட்பு உங்களைத் திசை திருப்பலாம் என்பதால் எதிர்பாலினரிடம் பழகும் போது உங்கள் அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மனரீதியான நெருக்கங்களை உருவாக்கிக் கொள்வதின் வழியே வாழ்வில் சங்கடங்களை சந்திக்கலாம் கவனம்.

உடல்நிலை: ஜலதோஷம், காய்ச்சல், நரம்பு பாதிப்பு, மன உளைச்சல், தொற்று நோய் என ஏதாவது ஒரு பாதிப்பு உங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும். 4ல் உள்ள கேது உங்கள் ஆரோக்கியத்தில் ஏதாகிலும் ஒரு சங்கடத்தை உண்டாக்குவார். உடல்நிலை நன்றாக இருப்பதுபோல் தோன்றினாலும் திடீர் சோர்வு, ஹீமோகுளோபின் குறைவு, மயக்கம் பலவீனம் என சங்கடங்கள் உண்டாகும். ஓய்வு, உறக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். வேளா வேளைக்கு சாப்பிடுங்கள். பாக்கிய குருவாலும், சனி வக்ரமடைவதாலும் நோயிலிருந்து விடுபடுவீர்கள்.

தொழில்: கடுமையான நெருக்கடிகளும், வருமானத்தில் தடைகளும், எவ்வளவு முயற்சி மேற்கொண்டாலும் ஒரு முன்னேற்றமும் இல்லையே என்று சங்கடத்தை அடைந்திருப்பீர்கள். உங்களின் பாக்கிய ஸ்தானத்தையும், ஜென்ம ஸ்தானத்தையும் சனி பார்ப்பதால் வருமானம் இல்லையே என்ற வருத்தம் காரணமாக வாழ்வின் எல்லைக்கும் சென்றிருப்பீர்கள். இந்த நிலையில் தான் பாக்கிய குரு உங்கள் சங்கடங்களை நீக்கப் போகிறார். உங்களின் சிறு முதலீடும் இக்காலத்தில் நல்ல லாபத்தை உண்டாக்கும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். தொழிலை விரிவு செய்வீர்கள். உங்களுடைய முயற்சிகள் ஒவ்வொன்றும் இப்போது வெற்றியாகும். அரசு பணியாளர்கள் முன்னேற்றம் காண்பீர்கள். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் நிர்வாகத்தால் மதிக்கப்படுவர். உங்கள் திறன் வெளிப்பட்டு அதன் வழியே பொருள் வளம் காணப்போகிறீர்கள்.

பரிகாரம்: வேங்கடவனை மனதில் எண்ணி செயல்படுங்கள். அருளும் பொருளும் நலமும் வளமும் உண்டாகும்.

Advertisement
Advertisement
 
Advertisement