Advertisement

மிதுனம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 – 2023 .. வீடு வாகனம் வாங்குவீர்கள்

மிருகசீரிடம் 3, 4 பாதம்: வீடு வாகனம் வாங்குவீர்கள்

பாக்கிய ஸ்தானத்து குருவால் குடும்ப ஸ்தானத்தின் மீதான சனியின் பார்வையை சமாளித்து வந்த உங்களுக்கு 2022 ஏப்.13 முதல் குரு 10ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். வித்யாகாரகனாகிய புதனை ராசி நாதனாகவும், வீரிய காரகனாகிய செவ்வாயை நட்சத்திர அதிபதியாகவும் கொண்ட உங்களுக்கு வீரமும் விவேகமும் நிறைந்திருக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனைகள் கூறி வழிநடத்தும் அளவிற்கு நீங்கள் ஆற்றல் பெற்றவராக இருப்பீர்கள். எதிர்வரும் பிரச்னைக்கேற்ப செயல்படுவதில் வல்லவராக இருப்பீர்கள். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடையக் கூடியவர்களாகவும் விளங்குவீர்கள். 10ம் இடம் என்பது கேந்திர ஸ்தானம் என்பதால் இந்த இடத்தில் அமரும் குரு உங்களுக்கு யோகத்தை வழங்க மாட்டார் என சொல்லப்பட்டாலும் பாதகத்தை ஏற்படுத்த மாட்டார். குடும்ப, சுக, ரோக ஸ்தானங்களை குரு பார்ப்பதால் அவை மூலம் யோகம் ஏற்படும். ஆயுள் காரகனான சனி ஆயுள் ஸ்தானத்திலேயே மறைவதும் உங்களுக்கு நன்மையே. வாழ்வில் எத்தனையோ சங்கடங்களை சந்தித்து வெற்றி பெற்று வந்துள்ள உங்களுக்கு 11ம் இடத்து ராகு எதிர்பாராத லாபம், அதிர்ஷ்டத்தை வழங்குவார். உங்கள் நிலையிலும் உங்கள் குடும்ப நிலையிலும் முன்னேற்றம் உண்டாகும்.

நிதி தன ஸ்தானத்தை குரு பார்ப்பதாலும், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதாலும் வருமானம் உயரும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். திடீர் திடீரென வருமானம் வரும். அதனால் வீட்டிற்குத் தேவையானவற்றை ஒவ்வொன்றாக வாங்குவீர்கள். ஆடம்பர செலவு அதிகரிக்கும். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். புதிய தொழில்களின் வழியே வருமானம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகி உங்களுக்கு வரவேண்டிய பங்கு வர ஆரம்பிக்கும். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் சிலருக்கு உண்டாகும். ஆனால், அவற்றின் வழியே சிக்கல்களும் ஏற்படும் என்பதால் வீண் எண்ணத்திற்கு இடமளிக்க வேண்டாம்.

குடும்பம்: நீண்ட நாட்களாக தடைபட்ட சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். தேவையற்ற சச்சரவுகளால் பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பிள்ளைகள் வழியே சில சங்கடங்களை ஏற்படுத்துவார். அவர்களைத் தவறான பாதையிலும் செல்ல வைப்பார் என்பதால் அவர்களுடைய நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். பூர்வீக சொத்துகளில் சங்கடங்கள் இருந்து கொண்டே இருக்கும் என்றாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் சக்தி உங்களுக்கு உண்டாகும். குடும்ப நிலையை சுபிட்சமாக்குவீர்கள். சுக ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் குடும்பத்தில் அன்பும் மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகும்.

கல்வி: உங்கள் ராசி நாதனே கல்விக்காரகன் என்பதால் எப்போதும் நீங்கள் கல்வியில் முன்னிலையில் இருப்பீர்கள். மற்றவர்கள் செலவு செய்து கல்வி நிறுவனங்களில் வாங்கும் இடங்களை நீங்கள் உங்கள் தகுதியினாலேயே வாங்கி விடுவீர்கள். உங்கள் கல்வித்திறன் மேம்படும். கல்வியியல், மருத்துவம், வரலாறு, அறிவியல் மாணவர்கள் சிறப்பாக படிப்பர். உங்கள் சிந்தனையும் கவனமும் கல்வியில் இருக்கும் என்பதால் பனிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பெருமளவில் வெற்றி அடைவர். நீங்கள் விரும்பிய பட்டப்படிப்பில் சேர்ந்து அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாட்டில் கல்வி கற்கும் யோகமும் உண்டாகும்.

பெண்கள்: உங்கள் வாக்கு சாதுர்யத்தால் புதிய நட்புகள் உருவாகும். குடும்ப நிலையை உயர்த்துவதற்காக சில முக்கியமான பணிகளை மேற்கொள்வீர்கள். ராசிக்கு 11 ல் உள்ள ராகு சில தவறான வழிகளைக் காட்டுவார். எதிர்பாலினர் வழியே சில சந்தோஷங்களை வழங்கி அதன் வழியே பிரச்னைகளை உண்டாக்குவார் என்றாலும், குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உறவினர்களிடம் விலகியே இருங்கள். இல்லையெனில் தேவையற்ற சங்கடங்கள் உருவாகும். ஆசைகளுக்கு இடமளிக்காமல் அறிவுக்கு இடமளியுங்கள்.

உடல்நிலை: ரோக ஸ்தானத்தில் சஞ்சரித்த கேது பெயர்ச்சியாகி இருப்பதுடன், குரு ரோக ஸ்தானத்தைப் பார்ப்பதால் இதுவரையில் இருந்த நோய்களின் தீவிரம் குறையும். தலைவலி, ரத்த அழுத்தம், வயிற்றுப் பிரச்னைகள் தோன்றி மறையும். கவனக்குறைவின் காரணமாக தொற்று நோய்களுக்கும் ஆளாகலாம். குடிநீர், உணவில் கவனம் செலுத்துவதுடன் ஓய்வும் உங்கள் உடல்நிலையை மேம்படுத்தும்.

தொழில்: தொழில் ஸ்தானாதிபதி குரு கேந்திரம் பெற்றிருப்பதால் தொழில் நிலை சீராகும். வருவாயில் எந்த சிக்கலும் உண்டாகாது. நிதி நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், தொழிற்கூடங்கள், மருந்து கம்பெனிகள், மருத்துவ மனைகள், ஓட்டல் தொழில்களில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு கமிஷன் தொழில், ரியல் எஸ்டேட் வகையில் திடீர் வருமானம் உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் ஏற்படும். வெளிநாடு, வெளி மாநிலம் சென்று சம்பாதிக்கும் நிலை சிலருக்கு உண்டாகும். தனியார் நிறுவனத்தில் பணி புரிவோருக்கு நிர்வாகத்தால் அனுகூலம் உண்டாகும்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சனீஸ்வரனை வழிபட சங்கடங்கள் அகலும். ஒருமுறை திருநள்ளாறு சென்றால் பிரச்னை விலகும்.

திருவாதிரை: குடும்பத்தில் மகிழ்ச்சி

குரு 10ல் கேந்திர பலம் பெறும் நிலையில் உங்கள் நட்சத்திர அதிபதி ராகு 2022 மார்ச் 21 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகமான நிலை என்றே சொல்ல வேண்டும். புதனை ராசி நாதனாக கொண்ட நீங்கள் சூழலுக்கேற்ப செயல்படுவதில் வல்லவராக இருப்பீர்கள். 8 ல் அமர்ந்து தொழில், குடும்ப ஸ்தானத்தை பார்க்கும் சனி சிரமங்களை உண்டாக்கி வரும் நிலையில், தொழில் ஸ்தானமான 10ல் குரு சஞ்சரிப்பதும் 2 ஆம் வீட்டின் மீது பார்வை செலுத்துவதும் உங்கள் நிலையில் மாற்றத்தையும் ஏற்றத்தையும் உண்டாக்கும். 2022 மே25ல் சனி வக்ரமடைவதால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற வார்த்தைகளை நீங்கள் உணரப் போகிறீர்கள். தொழில் முன்னேற்ற மடையும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகி மகிழ்ச்சி நிலவும். வருமானம் அதிகரிக்கும்.

நிதி: கடன் தொல்லைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி நெருக்கடிகளை சந்தித்த உங்கள் நிலையில் மாற்றம் உண்டாகும். லாப ஸ்தான ராகு பல வழிகளிலும் உங்களுக்கு பண வரவை உண்டாக்குவார். வராமல் இருந்த பணம் உங்கள் கைக்கு வரும். எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கப் பெற்று கடன்களை அடைப்பதுடன், ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்தையொட்டி செலவுகள் செய்வீர்கள். குடும்பத்திற்காக வீடு, மனை வாங்கும் சூழல் உண்டாகும். செலவுக்கேற்ப வருமானம் பலவழிகளில் வரும்.

குடும்பம்: பல்வேறு பிரச்னைகளால் நிம்மதியற்று, இதுநாள் வரை வார்த்தைகளில் கொதிப்பை வெளிப்படுத்தி வந்திருப்பீர்கள். இக்காலத்தில் குரு பார்வை குடும்ப ஸ்தானத்திற்கு கிடைப்பதால் இதுவரையில் குடும்பத்தில் இருந்த குழப்பம், பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிலை உருவாகும். திருமணம், கிரகப்பிரவேசம், உயர் கல்வி, வாகனம் வாங்குதல் என நன்மைகளைக் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்கள் வழியே நன்மையை எதிர்பார்க்கலாம். பரம்பரை சொத்துகளில் சிக்கல் நீடிக்கும். அதன் வழியே சில படிப்பினைகளைக் கற்பீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். தவறான நண்பர்கள் தவறான பழக்க வழக்கங்கங்கள் என்று அவர்களின் போக்கில் மாற்றம் தோன்ற வாய்ப்புண்டு.

கல்வி: புதனை ராசி நாதனாக கொண்ட உங்களுக்கு கல்விதான் வாழ்க்கை என்று சொல்ல வேண்டும். கொரோனாவின் காரணமாக கல்வியில் குறுக்கிட்ட தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். 12ம் வகுப்பில் உங்கள் ராசியினர் அதிக அளவில் தேர்ச்சி அடைவதுடன் கல்லுாரியில் விரும்பிய படிப்பில் இடம் கிடைத்து மகிழ்வீர்கள். ஏரோநாட்டிக்கல், மெரைன், மருத்துவம் என உங்களின் கனவு நிறைவேறும். ஒரு சிலர் கல்விக்காக மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு செல்வர்.

பெண்கள்: இதுவரையில் உடல் நிலையில் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். கர்ப்பப்பை, வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு ஆளானவர்கள் சிகிச்சையால் நலமடைவர். ஆரோக்கியம் மேம்படும். விருப்பம் நிறைவேறும். கணவன், மனைவி உறவில் மகிழ்ச்சி உருவாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை தோன்றும். எதிர்பார்த்திருந்தவை உங்களை வந்து சேரும். எதிர்பாலினரின் நட்பு எல்லையை மீறி சென்று விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் அதன்வழியே வேறு உறவுகளுக்கு ஆட்பட வேண்டிய நிலை உருவாகும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்பதன் வழியாக நன்மை அதிகரிக்கும்.

உடல்நிலை: நோய்களால் உண்டான பயம் விலகும். 2022 மே25 முதல் சனி வக்ரநிலை அடைவதால் அஷ்டம சனியால் உண்டான அச்சம் நீங்கும். ரோக ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பரம்பரை நோய்களால் உண்டான பாதிப்புகள் குறையும். தொற்று நோய்கள் உண்டானாலும் அவை வைத்தியத்தால் சரியாகும். கம்ப்யூட்டர் பணியில் இருப்பவர்களுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்பு தோன்றி மறையும். தவறான பழக்க வழக்கங்களுக்கு இடம் கொடுத்திட வேண்டாம்.

தொழில்: தொழில் ஸ்தான குரு, லாபஸ்தான ராகுவால் தொழிலில் இருந்த மந்த நிலை விலகும். வருவாயில் இருந்த தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்குவதற்குரிய வாய்ப்புகள் சிலருக்கு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி கமிஷன் தொழில்கள் முன்னேற்றம் பெறும். அரசு பணியாளர்கள் முன்னேற்றம் அடைவர் என்றாலும் 11 ல் உள்ள ராகு உங்களுக்கு குறுக்கு வழியைக் காட்டி அதில் சம்பாதிக்க ஆசையை உண்டாக்கி சங்கடத்தையும் வரவழைக்கலாம் கவனம். மருத்துவர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: திருநாகேஸ்வரம் சென்று ராகுவிற்கு பாலாபிஷேகம் செய்துவர முன்னேற்றம் உண்டாகும்.

புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: பிள்ளைகள் விஷயத்தில் உஷார்...

நட்சத்திர அதிபதியாக குரு, ராசி நாதனாக புதனைக் கொண்டதால் எதிலும் சிந்தித்து செயல்பட்டு வெற்றி அடையக் கூடியவர்கள் நீங்கள். அறிவாற்றலே உங்களுக்கு மூலதனமாகும். மனதில் பட்டதை சரியென உரைக்கும் உங்களுக்கு நிரந்தரமான கொள்கை என்பது எப்போதும் இருக்காது. உங்கள் நட்சத்திர அதிபதி பாக்கிய ஸ்தானத்தில் இருந்து நம்பிக்கையை உருவாக்கி வந்த நிலையில் 2022 ஏப்.13ல் உங்கள் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரித்து பலன்களை தர இருக்கிறார். இது உங்களுக்கு நற்காலமாக இருக்கும். தொழில், குடும்ப ஸ்தானங்களை சனி பார்த்து சங்கடங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் குருவின் பார்வையும் அவற்றிலிருந்து விடுவிக்கும். 11 ல் ராகுவும் உள்ளதால் வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். புதிய முயற்சியில் வெற்றியடைவீர்கள்.

நிதி: உங்கள் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தை சனி பார்த்து பொருளாதார சிக்கல், கடன் பிரச்னை, கொடுத்த வாக்கை காப்பாற்றாத நிலை உருவான நிலையில், தன ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால் நெருக்கடிகள் மறையும். வரவுகள் அதிகரிப்பதால் கடன்களை அடைப்பீர்கள். தொழிலில் லாபம் தோன்றும். வங்கியில் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து தொழிலை விரிவு செய்வீர்கள். வீடு, மனை, வாகனம், நகை என்று வாங்குவீர்கள். எதிர்காலத்திற்காக சேமிப்பீர்கள் என்றாலும், இக்காலத்தில் சிந்தித்து செயல்பட்டால் நன்மைகள் அதிகரிக்கும்.

குடும்பம்: குடும்பத்தினரின் ஆதரவு அதிகரிக்கும். 11 ல் சஞ்சரிக்கும் ராகு உங்களுக்கு வருமானத்தை அதிகரிப்பார். வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். கணவன், மனைவி உறவில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உறவினர்களின் வருகையும் ஆதரவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிள்ளைகளின் வழியில் எச்சரிக்கை அவசியமாகும். 5 ல் உள்ள கேதுவால் அவர்களால் உங்களுக்கு நிம்மதியற்ற நிலை உருவாகலாம். அதனால் முடிந்தவரை அவர்களை உங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்திருங்கள். பூர்வீக சொத்துகளில் உண்டான பிரச்னைகள் இக்காலத்தில் முடிவிற்கு வராமல் இழுபறியாக இருக்கும்.

கல்வி: குருவருளும் புதனின் சக்தியும் கொண்ட உங்களுக்கு கல்வியால் மேன்மையுண்டு. இக்காலத்தில் உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். கல்வியில் இருந்த தடைகள் அகலும். அரசு தேர்வுகளில் பங்கேற்பவர்கள் வெற்றி அடைவீர்கள். பொறியியல், கம்ப்யூட்டர், அறிவியல் பயிலும் மாணவர்கள் சிறப்படைவீர்கள். 11 ஆம் இடத்து ராகுவும், 5 ஆம் இடத்து கேதுவும் கல்விக்காக வேறு நாடு, மாநிலங்களுக்கு செல்லும் நிலையை உண்டாக்குவார். உங்கள் கவனம் இக்காலத்தில் முழுமையாக கல்வியில் செல்லும்.

பெண்கள்: நன்மைகள் அதிகரிக்கும். குடும்பத்தினரின் ஆதரவு உண்டாகும். மகிழ்ச்சியான நிலையை எட்டுவீர்கள். 11 ல் உள்ள ராகு யோகத்திலும் போகத்திலும் உங்களைத் திளைக்க வைப்பார். ரோக ஸ்தானத்தைப் பார்க்கும் குருவால் ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் அடைவீர்கள். வீட்டில் சுப நிகழ்வுகள் உண்டாகும். அவற்றை முன்நின்று நடத்தி மகிழ்வீர்கள். உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக நல்ல நட்பு கிடைக்கும். தாய்வழி உறவுகளால் நன்மைகள் உண்டாகும். எல்லோரிடமும் அனுசரித்துச் சென்று உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

உடல்நிலை: ஆயுள் காரகனான சனி 8 ல் அமர்ந்த நாளிலிருந்து உடல் நிலையில் சங்கடங்களை அனுபவித்து வந்தீர்கள். தொற்று, பரம்பரை நோய்களால் ஏற்பட்ட பாதிப்புகள் ரோக ஸ்தானத்தைப் பார்க்கும் குருவால் விலகும். 2022 மே25 முதல் சனியும் வக்ரமடைவதால் உடல்நிலையில் இருந்த பயம் உங்களை விட்டு விலகும். இக்காலத்தில் சுவாசக்கோளாறுக்கு நீங்கள் ஆளாகலாம் என்றாலும் சிகிக்சையால் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வீர்கள். உணவு விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். மனதை ஒருமுகப் படுத்துங்கள். நோய்களைப் பற்றிய பயம் விலகும்.

தொழில்: உங்களின் தொழில் ஸ்தானத்திலேயே தொழில் ஸ்தானாதிபதி ஆட்சியாக அமர்வதால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழிலையும் தொடங்குவீர்கள். வெளிநாட்டு தொடர்புடைய பணிகளில் ஆதாயம் அதிகரிக்கும். பத்திரிகைத் துறைகளில் பணியாற்றுவோருக்கு முன்னேற்றம் உண்டாகும். ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், சட்ட ஆலோசகர்கள், ஷேர் மார்க்கெட் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் ஆதாயம் காண்பர். . அரசு பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர் முதலாளிகளின் நன்மதிப்பிற்கு ஆளாவர்.

பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட்டால் சங்கடங்கள் விலகும். ஒருமுறை திருச்செந்துார் சென்றால் வாழ்வில் நல்ல திருப்பம் உண்டாகும்.

Advertisement
Advertisement
 
Advertisement