Advertisement

மனம் எப்படி கர்மவினையை உண்டாக்குகிறது?

மனதால்கூடத் தீமை நினைக்காதே! அது அந்தத் தீமையைச் செய்வதற்குச் சமம்' என்று ஓர் ஆன்மீகப் புத்தகத்தில் படித்தேன். என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. செய்யாத செயலுக்கு ஏது விளைவு? மனதால் நினைத்தாலே அதற்குச் செயலைச் செய்ததன் விளைவு எப்படி வரும்?

சத்குரு:

"செயல் என்பது நான்கு விதமாக நடக்கிறது. உடலின் செயல், மனதின் செயல், உணர்வின் செயல், சக்தியின் செயல். மற்றவற்றை ஒப்பிடும்போது, உடலின் செயலுக்குத் தாக்கம் குறைவு.

யார் மீதோ கோபம். கோபத்தின் தருணத்தில் அவரைப் பொளேர் என்று அடித்தீர்கள். அது ஒருவிதமான கர்மா. ஆனால் அந்தத் தருணத்தில் சூழ்நிலை சரியாக இல்லாமலோ, தைரியம் இல்லாமலோ அடிக்காமல் விட்டுவீட்டீர்கள். மாறாக, அவனை அடிக்க வேண்டும்... அடிக்க வேண்டும் என்று சதாமனதில் திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். அது மிகப்பெரிய கர்மா.
ஊரிலேயே பெரிய செல்வந்தர் அவர். குருவை நாடி வந்தார். 'குருவே இவ்வளவு வசதிகள் இருந்தும் மற்றவர்கள் செய்த துரோகம், நான் சந்தித்த ஏமாற்றங்கள், தோல்விகள் என்று என் மனம் முழுவதும் ரணங்கள். என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. எனக்கு வழிகாட்டுங்கள்'.

குரு அங்கு விளையாடிக்கொண்டிருந்த சேரிக் குழந்தையைக் காட்டி, 'அதைப்போல் வாழ்' என்றார்.

செல்வந்தர் குழம்பினார். 'எல்லாச் செல்வங்களையும் துறந்து ஏழையாகச் சொல்கிறீர்களா?'

'இல்லை மகனே! இங்கிருந்தாலும், எங்கிருந்தாலும் குழந்தைகள் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அழத் தோன்றினால், ஓவென்று அழும். சிரிக்க நினைத்தால், வாய்விட்டு சிரிக்கும். அச்சம், அழுக்காறு, ஏமாற்றம், வன்மம் என்று எதுவும் குழந்தைகளின் மனதில் நிரந்தரமாகக் குடியேறுவதில்லை. உணர்ச்சிகளை அவ்வப்போது வெளிப்படுத்திவிட்டு, தங்கள் இதயங்களில் சுமை இல்லாமல், அடுத்தக்கட்ட சாகசத்துக்குத் தயாராகிவிடுவதைக் குழந்தைகளிடம் கற்றுக்கொள்' என்றார் குரு.

ஒருவரைத் தலையில் தட்ட வேண்டும் என்று அவசியப்படும்போது கோபம் இல்லாமல், மனதில் எந்த வன்மமும் பாராட்டாமல் தட்டினால், அதற்குப் பெரிய விளைவு இல்லை.

ஆனால் மனதில் அடிக்கத் திட்டமிட்டு அது செயலாக அமையும்போது, மேலோட்டமாக இல்லாமல் மிக ஆழமாகப் போகிறது. கோபம், வெறுப்பு, பழிவாங்கும் உணர்ச்சி எல்லாவற்றையும் சுமந்துகொண்டு செயலற்று உட்கார்ந்திருப்பதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் பாதிப்பு. அடித்திருந்தால்கூட ஏற்பட்டு இருக்காது. இப்படிச் செய்வது, வீட்டில் இருந்துகொண்டு வெளியில் இருப்பவன்மீது, கண்ணை மூடிக்கொண்டு கல்லை வீசுவதைப்போல்தான். அந்தக் கல் மறுபடி மறுபடி உங்கள் வீட்டுக்குள்ளேயே விழுந்து எதையாவது உடைத்துக்கொண்டு இருக்கும். பாதிப்பு அவனுக்கா... உங்களுக்கா?

அந்தக் கல்லை வீசுவதற்கு எவ்வளவு தூரம் கவனத்தைச் செலுத்தினீர்கள்? எந்த அளவுக்கு உங்கள் சக்தியைப் பயன்படுத்தினீர்கள்? கடைசியில் அத்தனை சக்தியும் உங்களையே காயப்படுத்துவதற்கு அல்லவா பயன்பட்டுவிட்டது!

உடலிலும் மனதிலும் வலு இல்லாதவர்களுக்குத்தான் கோபமோ, வெறுப்போ, ஆத்திரமோ பொங்கிவருகிறது. தம் சக்தியைச் சரிவரப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாதவர்களுக்குச் சும்மா உணர்ச்சிவசப்படுவது மட்டுமே சுலபமாகச் சாத்தியமாகிறது.

உண்மையில், ஒரு செயலைவிட அதன் நோக்கம்தான் அதன் பலனைத் தீர்மானிக்கிறது.

அந்த இளைஞன் உணவு விடுதியில் இருந்து வெளிப்பட்டான். தெருவில் 100 ரூபாய் நோட்டு ஒன்று கிடந்தது. யாரும் அதைத் தேடி வராதது கண்டு, அதை பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். தன் பைக்கை நிறுத்தியிருந்த இடத்துக்குப் போனான். பைக்கைக் காணவில்லை. இங்கே வண்டிகளை நிறுத்தக்கூடாது என்று போலீஸ் அதை இழுத்துக்கொண்டு போய்விட்டது. இதை எல்லாம் ஒரு சாது கவனித்துக் கொண்டிருந்தார்.
'தெருவில் கிடந்த பணம் வேறு ஒருவருடையது. அதை எடுத்ததால்தான் இப்போது செலவு வந்துவிட்டது' என்று அச்சம் கொண்டான். அந்தப் பணத்தை சாதுவின் தட்டில் போட்டான்.

சாது சொன்னார், 'நீ எடுத்தது பாவம் இல்லை. கொடுத்தது புண்ணியம் இல்லை'.

பணத்தை இளைஞன் எடுத்தபோது, யாரிடம் இருந்தும் அதைக் களவாடும் எண்ணத்தில் செய்யவில்லை. சாதுவுக்குக் கொடுத்த செயல் அச்சத்தினால் விளைந்தது. கருணையினால் நேரவில்லை.

வெளியில் செய்யும் செயல் ஒரு முறையோடு முடிந்துபோகிறது. அதற்கான விளைவு ஏற்படாது என்று சொல்லவில்லை. அதையே மனதில் செய்யப் பார்க்கும்போது திருப்தியுறாமல், மறுபடி மறுபடி கற்பனையில் நிகழ்ந்து, அது அங்கேயே தங்கி, வேர் பிடித்துவிடுகிறது.

எதிரில் இருப்பவனைச் சாகடிக்க விஷத்தை எடுத்தீர்கள். ஆனால் அதை நீங்கள் அருந்திவிட்டு, அவன் சாகவேண்டும் என்று எதிர்பார்த்தீர்கள். நல்லவேளையாக வாழ்க்கை அப்படி நடப்பதில்லை. அடுத்தவனுக்கானது என்று மனதில் சொல்லிவிட்டு நீங்கள் அருந்திக்கொண்டு இருக்கும் விஷம் ஒருநாள் உங்களைத்தான் கொன்றுபோடும்.

தந்தையும் ஆறு வயது மகனும் மலைச் சாரலில் நடந்துகொண்டு இருந்தனர். மகனை ஒரு கல் தடுக்கியது.

'ஒழிந்து போ!' என்று கோபத்தில் அதை எட்டி உதைத்தான் மகன். 'ஒழிந்து போ!' என்று எங்கிருந்தோ பதில் குரல் வந்தது.

அப்பா பக்கத்தில் இருக்கும் தைரியத்தில், 'எதிரில் வந்தால், உன் முகரையைப் பெயர்த்துவிடுவேன்' என்று கத்தினான். அதே மிரட்டல் பதிலாக வந்தது.

பையன் இந்த முறை மிரண்டான். அப்பாவின் கையைப் பற்றிக்கொண்டான். 'என்னைக் கவனி' என்றார் அப்பா. உன்னை மிகவும் விரும்புகிறேன் என்று கத்தினார். 'உன்னை மிகவும் விரும்புகிறேன்' என்று அதே வார்த்தைகள் திரும்ப வந்தன.

அவர் அடுத்தடுத்து, அன்பாகப் பேசிய வார்த்தைகள் அதேபோல் திரும்ப வந்தன. மகனிடம் சொன்னார்...

'விஞ்ஞானத்தில் இதை எதிரொலி என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் இதுதான் வாழ்க்கை. அன்போ, கோபமோ, துரோகமோ, நீ மற்றவர்களுக்கு என்ன வழங்குகிறாயோ, அதுதான் உனக்குத் திரும்பி வரும். உனக்கு என்ன வேண்டுமோ, அதையே மற்றவர்களுக்கும் வழங்கக் கற்றுக்கொள்' என்றார்.

உண்மையில் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளும் பலர், கடைசிவரை உள்ளுக்குள் ஒன்று வைத்து, வெளியில் வேறுவிதமாக நடந்துகொள்ளும் ஏமாற்றுக்காரர்களாகவே விளங்குகிறார்கள். இவர்களுடைய மனதில் தந்திரங்களும், கள்ளத்தனங்களும் சதா உற்பத்தியாகிக்கொண்டு இருக்கின்றன.

எல்லாவற்றையும் மனதிலேயே செய்து பார்த்துவிடுவதால், இவர்கள் கர்மவினையில் இருந்து தப்பிக்கமுடியும் என்று நினைத்திருந்தால், அது மிகத் தவறான கருத்து. அவர்களுடைய கர்மவினைதான் மிகத் தீவிரமானது. கர்மவினை என்பது உடல் செயலினால் மட்டும் எற்படுவது இல்லை. மனதின் விருப்பத்தால்தான் முக்கியமாக ஏற்படுகிறது. நல்ல எண்ணங்கள் கொண்டு நல்லதைச் செய்வதற்கும், தகாத எண்ணங்களை மனதில் புதைத்துவிட்டு, வெளியில் நல்ல செயல்களைச் செய்வதற்கும் வெகுவாக வித்தியாசம் இருக்கிறது. இதை நினைவில்கொண்டு மனதாலும் உடலாலும் செயல்பட்டால், வாழ்க்கை நலமாகும்".

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Sampath Kumar - chennai,இந்தியா

    kaasu yaepadi unkalku வருதோ அப்படிதான் கர்மமும் உண்டாகிறது ஹி ஹி

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement