பாரதி சாலையில் நெரிசல்: தீர்வு காண எதிர்பார்ப்பு
சென்னை, திருவல்லிக்கேணி பாரதி சாலையின் இருபுறங்களிலும், காய்கறி, பழம், உணவு, ஆடை, வீட்டு அத்தியாவசிய பொருட்கள் என, பல கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இங்கு வருவோர், சாலையின் இருபுறங்களிலும், தங்கள் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். தவிர, அவ்வப்போது தள்ளுவண்டிகள், சிறு கடைகள் புதிதாக முளைத்து, சாலையை ஆக்கிரமித்து வருகின்றன.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
வாகனம் நிறுத்துவதற்கான வசதி இல்லாததால், பாரதி சாலையை ஆக்கிரமித்து, பலர் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.
சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளால், பாதசாரிகளால் நடைபாதையை பயன்படுத்த இயலாத சூழல் நிலவுகிறது.
இதனால், இச்சாலையில் போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் தொடர்கதையாகி வருகிறது.
இது குறித்து மாநகராட்சி மற்றும் போலீஸ் உயரதிகாரிகள், அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பல ஆண்டுகளாக, நீடித்து வரும் போக்குவரத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!