கேரள பத்திரிகையாளர் ஜாமினில் விடுவிப்பு
லக்னோ, உத்தர பிரதேச சிறையில், ௨௮ மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திகி கப்பான், நேற்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹத்ராஸ் பகுதியில், ௨௦௨௦ அக்டோபரில் தலித் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஹத்ராசுக்குள் நுழைய வெளி ஆட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ௨௦௨௦ அக்டோபரில் கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திகி கப்பான் உட்பட மூன்று பேர் ஹத்ராஸ் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
கப்பானுக்கு, தற்போது தடை செய்யப்பட்டுள்ள 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறி, சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு கடந்தாண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இருப்பினும் பண மோசடி வழக்கில் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் நேற்று முன்தினம் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இதையடுத்து, லக்னோவில் உள்ள சிறையில் இருந்து அவர் நேற்று காலை விடுவிக்கப்பட்டார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!