Advertisement

வேறு என்ன சந்தோஷம் வேண்டும்?

'அரசியலில் நவ்ஜோத் சித்துவின் சகாப்தம் முடிந்து விட்டது...' என்று உற்சாகத்துடன் பேசுகின்றனர், பஞ்சாப் மாநில காங்கிரசில் உள்ள, அவரது அதிருப்தியாளர்கள்.


இம்மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. முன்னாள் கிரிக்கெட் வீரரான சித்து, பஞ்சாப் மாநில காங்., தலைவராக பதவி வகித்தார்.கட்சியின் மூத்த தலைவர்களுடன் தொடர்ந்து மோதல் போக்கை பின்பற்றியதால், தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.


சித்துவின் குளறுபடி அரசியலால், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. ஆனாலும், சித்துவின் ஆட்டம் அடங்கவில்லை.பஞ்சாப் காங்கிரசில் உள்ள மூத்த தலைவர்கள் சிலர், 'சித்துவை கட்சியை விட்டு நீக்கினால் மட்டுமே, மாநிலத்தில் மீண்டும் கட்சியை பலப்படுத்த முடியும்; இல்லையெனில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை தான்...' என புலம்பி வந்தனர்.


இந்த நேரத்தில் தான், 34 ஆண்டுகளுக்கு முன் முதியவர் ஒருவரை தாக்கிய வழக்கில் சித்துவுக்கு தற்போது ஓராண்டு சிறை தண்டனை விதித்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதைக் கேள்விப்பட்டதும், சித்துவின் அதிருப்தியாளர்களுக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. பட்டாசு வெடிக்காத குறைதான். 'இதைவிட வேறு சந்தோஷம் எங்களுக்கு என்ன இருக்க முடியும்...' என்று மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.

ஆட்சியை பிடிக்க முடியுமா!



தேர்தல்களில் சந்தித்த தொடர் தோல்வி தான், இவரை கண்டிப்பானவராக மாற்றி விட்டது போலிருக்கிறது...' என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலைப் பற்றி, அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் முணுமுணுக்கின்றனர்.



தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆட்சி நடக்கிறது.இங்கு அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி - பா.ஜ., - காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.ஆளுங்கட்சிக்கு இங்கு நல்ல செல்வாக்கு உள்ளது. பா.ஜ.,வும் உள்ளாட்சி தேர்தல்களில் கணிசமான வெற்றியை பெற்றது. ஆனால், காங்கிரஸ் பெரிய அளவில் சாதிக்கவில்லை.


இதையடுத்து, தேர்தல் பணிகளை முடுக்கி விடுவதற்காக, காங்., முன்னாள் தலைவர் ராகுல், சமீபத்தில் தெலுங்கானாவுக்கு சென்றார். அவரை வரவேற்பதில் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் போட்டி நிலவியது. சில மூத்த நிர்வாகிகள், 'ஹைதராபாத் பிரியாணி, இங்கு பிரபலம். கண்டிப்பாக நீங்கள், அதை சுவைத்து விட்டுத் தான் போக வேண்டும்...' என்று பிடிவாதம் பிடித்தனர்.

இதைக் கேட்டு கடுப்பான ராகுல், 'பிரியாணி சாப்பிடுவதற்காகவா, இங்கு வந்தேன்? தேர்தல் வேலைகளை யாரும் சரியாக பார்ப்பது இல்லை. ஒருவரை ஒருவர் 'போட்டு'க் கொடுப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறீர்கள். இப்படி இருந்தால் எப்படி ஆட்சியை பிடிக்க முடியும்?' என எரிச்சலுடன் கூறி விட்டு, நடையை கட்டினார்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement