Advertisement

முதுமைக்கு மரியாதை கொடுங்க இளைஞர்களே!

பிரபல முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன்: அன்பும், பாசமும், கூட்டுக் குடும்பமும் உடைந்து வரும் இன்றைய சூழ்நிலையில், பல முதியவர்கள் ஒரே வீட்டில் இருந்தும், தனியாக வசிக்கின்றனர்.

தொடர்ந்து தனிமை யில் இருப்பவர்களுக்கு, மனச்சோர்வும், மறதி நோயும் வர வாய்ப்பு உள்ளது. அவருக்கு 80 வயதிருக்கும். பார்க்க நல்ல பர்சனாலிட்டியாக இருந்தாலும், கொஞ்சம் பலவீனமாக இருந்தார்.


அவரோட தினசரி வாழ்க்கை முறை பற்றி பேசியதும், 'என்னென்ன மாத்திரைகள் சாப்பிடுறீங்க?' என்றேன்.'எனக்கு ஒண்ணும் தெரியாது; மனைவிகிட்ட கேளுங்க. அவங்க நேரத்துக்கு கொடுப்பாங்க; சாப்பிடுவேன்' என்றார். உணவு முறை பற்றி கேட்டபோது, 'அவங்க சமைச்சுப் போடுறதை சாப்பிடுவேன்' என்றார்.

'வெளியே எங்காவது போவீங்களா?' என்றேன். 'அவங்க அழைச்சுட்டுப் போனா, போவேன்' என்றார். இப்படி, என் கேள்வி ஒவ்வொன்றுக்கும், அவருடைய பதில் மனைவியை சார்ந்ததாகவே இருந்தது. அவரிடம், 'சார்... உங்களை மாதிரி தான், அவங்களுக்கும் வயசாகிட்டு வருது. எத்தனை நாளைக்கு, உங்க வேலையையும், அவங்க சேர்த்து செய்வாங்க. உங்க வேலையை, முடிஞ்ச அளவுக்கு நீங்களே செய்ய பழகிக்கோங்க' என்றேன். இவரை போல பலர், மனைவியை சார்ந்தே இருந்து விடுவதால், மனைவி இல்லாத போது வெறுமையை சட்டென்று உணர்ந்து, அதிலிருந்து மீள முடியாமல் அவதிப்படுகின்றனர்.

எந்த வயதாக இருந்தாலும், தங்களின் வேலைகளை தாங்களே செய்து கொள்வோருக்கு, இந்த வெறுமை ஏற்படாது என்பதே உண்மை!இன்றைய தலைமுறையினருக்கு, ஆயிரம் அவசர வேலைகள் இருக்கத் தான் செய்கின்றன. வீட்டில் இருக்கும் முதியவரிடம் ஆபீசுக்கு புறப்பட்டு போகும் போது, 'அப்பா ஆபீஸ் கிளம்புறேன்' என்று சொல்லி சென்றாலே போதும்; அன்றைய நாள் அவர்களுக்கு இனிய நாளாக துவங்கும்.


வீட்டுக்கு திரும்பியதும், 'என்னப்பா மதியம் சாப்பிட்டீங்களா; சாயந்திரம் எங்கேயாவது போயிட்டு வந்தீங்களா... 'டிவியில இன்னிக்கு என்ன ஸ்பெஷல் நியூஸ்' என்று கேட்டு, அவர்கள் சொல்வதை ஐந்து நிமிடங்கள் கவனித்தால் போதும்... அதுவே, மகன் தன்னையும் மதிக்கிறான் என்கிற நிறைவை தரும்.

உங்களுக்கு நேரமிருந்தால், அவர்களை வெளியில் அழைத்து செல்லலாம். அவர்கள் விரும்பியதை வாங்கிக் கொடுக்கலாம். பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷ நாட்களில் சிறு பரிசு தரலாம்; அவர்களிடம் ஆசீர்வாதம் பெறலாம். முதுமைக்கு இளைஞர்கள் தரும், மிக சிறந்த மரியாதை இதுதான்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement