Advertisement

மனதில் தெம்பு இருக்கும் வரை உழைப்பு தொடரும்!

ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே சிரமப்பட்ட நாங்க, இன்னிக்கு நல்லா வந்துட்டோம். நேரம், காலம் பார்க்காம உழைக்குற உழைப்பு எல்லாத்தையும் கொடுக்கும் என்று சொல்லும், கரூர் மாவட்டம், ஓணாம்பாறப்பட்டியைச் சேர்ந்த, போதும் பொண்ணு:

எங்கள் குடும்பம் ஏழ்மையானது என்பதால் படிக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன் எனக்கு திருமணமாச்சு; கணவர் அருணாசலம். கரூர் அருகே காந்தி கிராமத்துல தங்கி, சம்பளத்துக்கு பால் வியாபாரம் பார்க்க கிளம்பினார்; நானும் அவர் கூடவே கிளம்பினேன். விவசாயிகள் வளர்க்கும் மாடுகளில் பால் கறந்து, கம்பெனியில் கொடுப்பது தான் கணவரின் வேலை.விற்காத பால், தயிரை, கணவரின் முதலாளி என்கிட்ட வந்து கொடுக்க, அதை நான் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு விற்று கொடுப்பேன்; முதலாளி, 100 ரூபாய் கொடுப்பார். முதலில் எங்களுக்கு மகன் பிறந்தான்; அடுத்து பெண் குழந்தை பிறந்தது. கூடுதல் வருமானம் தேவைப்பட்டதால், நானும் பால் வியாபாரம் பார்க்க முடிவெடுத்தேன்.இரண்டு ஆண்டுகளுக்கு பின், நானும், கணவரும், தனியாகவே தொழில் பார்க்க ஆரம்பித்தோம். நாங்கள் வசித்த ஊரை சுற்றியுள்ள பகுதி விவசாயிகளிடம் பால் எடுக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் பால் கறக்கும் போது, மாடுங்க எட்டி உதைச்சு, கை, முகத்தில் எல்லாம் உதை வாங்கியிருக்கேன். ஆனா, வாழ்க்கையில் முன்னுக்கு வரணும்ங்கிற எண்ணம், அந்த வலிகளை எல்லாம் துாசா நினைக்க வெச்சுது. கணவர் வைத்திருந்த பழைய, 'பஜாஜ் எம்.ஐ.டி.,' வண்டியை ஓட்டி கத்துக்கிட்டேன். பின், எனக்குன்னு வண்டி வாங்கினேன். இப்போ காலையில், 60 லிட்டர்; மாலையில், 90 லிட்டர் பால் கறந்து எடுத்துட்டு வந்து விற்பனை செய்கிறேன். விவசாயிகள் கிட்ட லிட்டர், 26 ரூபாய்க்கு வாங்கி, வாடிக்கையாளர்களுக்கு, ௪௦ ரூபாய்க்கு விற்கிறேன். எம்.ஐ.டி., வண்டியில் நான் பால் விற்க போவதால், 'எம்.ஐ.டி., பால்காரம்மா'ன்னு எல்லாரும் பேர் வெச்சுட்டாங்க. 10 ஆண்டுக்கு முன், காந்தி கிராமத்துல, 10 லட்சம் ரூபாய்க்கு வீடு விற்பனைக்கு வந்தப்ப, ஒரு பைனான்ஸ்ல கடன் பெற்று வீட்டை வாங்கினோம். கடனை கட்டுற வைராக்கியத்தை வெச்சுக்கிட்டு, தலைவலி, காய்ச்சல்னா கூட லீவு போடாம கடுமையா உழைத்து, இப்போ தான் கடனை அடைச்சோம். நான் பால் ஊற்றுகிற வீடுகளில், சில பெண்கள் தங்களின் கஷ்டத்தை சொல்லி கலங்கும் போது, 'தைரியம் தான் பெண்கள் லட்சணம்'ன்னு சொல்வேன். இப்ப, 40 வயசாவுது; உடம்புலயும், மனசுலயும் தெம்பு இருக்கிற வரை என் வண்டி நிக்காது.

விடுமுறையை தியாகம் செய்யாதீங்க!சிறந்த குடும்ப தலைவியாக மட்டுமின்றி, திறமையான நிர்வாகியாகவும் மாற, நீங்கள் எடுக்கும் முயற்சிகளே அடிப்படை என்று கூறும், ஐ.டி.சி., லிமிடெட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டாளர் விஜயலட்சுமி: வேலையானது பணம் சம்பாதிக்க மட்டுமல்ல; அது, உங்களின் இலக்கு மற்றும் ஆர்வம் சம்பந்தப்பட்டது என்பதை குடும்பத்தினருக்கு புரிய வையுங்கள். வீடு மற்றும் அலுவலக பொறுப்புகள் அழுத்தம் தரும் போதெல்லாம், நீங்கள் எதற்காக வேலைக்கு செல்ல ஆரம்பித்தீர்கள், உங்களின் இலக்கு என்ன என்பதை, மீண்டும் ஒருமுறை நினைவுகூர்ந்து முன்னேறி செல்லுங்கள்.விடுமுறை நாளில் அல்லது அலுவலக நேரத்துக்கு பிறகும், வேலை பார்க்கும் சூழல் ஏற்படலாம். அலுவலகத்தில், உங்கள் பணிக்கு அவ்வளவு, 'டிமாண்ட்' இருக்கிறது என, குடும்பத்தினருக்கு தெரியப்படுத்துங்கள்.
அத்துடன், அலுவலக பிரச்னைகளை அலுவலகத்திலேயே விட்டுச் செல்லுங்கள். வீட்டுக்கு சென்ற பின், உங்கள் நேரத்தை குடும்பத்துக்காக மட்டும் முழு மனதுடன் செலவிடுங்கள்.நீங்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேலைகளை செய்யவும், 'டே கேர், ஹவுஸ் கீப்பிங்' போன்ற மாற்று வழிகளை ஏற்பாடு செய்யுங்கள்.
பயமும், 'ஸ்ட்ரெஸ்சும்' இல்லாத போது, வேலையின் மீதும், குடும்பத்தினர் மீதும் சலிப்பும், கோபமும் வராது.

குடும்பம், அலுவலகம் என சுழன்றாலும், உங்கள் மனதுக்கு பிடித்த விஷயங்களை செய்வதை மிஸ் பண்ணாதீங்க. அலுவலகத்தில் நல்ல பெயரெடுக்கவோ அல்லது விடுப்பை ஒப்படைத்து பணம் வாங்கும் எண்ணத்திலோ, உங்கள் விடுமுறைகளை தியாகம் செய்ய வேண்டாம்; இது, உங்கள் வாழ்க்கையை இயந்திரத்தனமாக மாற்றி விடும்.
ஆண்டுக்கு ஒருமுறை, குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று புத்துணர்வு பெறுங்கள். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஹீமோகுளோபின் அளவு, ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை பரிசோதியுங்கள். எவ்வளவு, 'பிசி'யாக இருந்தாலும், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளத் தவறாதீர்கள்; காலை உணவை தவிர்க்காதீர்கள்.நீங்கள் பார்க்கும் வேலையில், 'ஸ்ட்ரெஸ்' அதிகமானால், உங்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் பொறுப்புகளை முடித்து, சில மாதங்கள், 'பிரேக்' எடுத்துக் கொள்ளுங்கள்.
விருப்பப்பட்டால், புதிய கோர்ஸ் படித்து, மீண்டும் ஒரு புது நிறுவனத்தில், பணியை துவக்குங்கள். '

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Rajarajan - Thanjavur,இந்தியா

    தினமலர் மற்றும் இதுபோன்ற தன்னம்பிக்கை மிக்க பெண்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் ஒன்று கூடி, பாழாய்ப்போன சாராய கடைகளை மூட நடவடிக்கை எடுத்தால் என்ன ?? சாராய கடைகளை மூடாத அரசுக்கு எங்கள் வாக்கு இனிமேல் இல்லைனு அடிச்சி விட்டு பாருங்களேன். அப்புறம் அடுத்தகட்ட நடவடிக்கை தானே வரும். பெண்கள் வீட்டின் மற்றும் நாட்டின் கண்கள்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement