ஞானக்குழந்தையாக இருந்த திருஞானசம்பந்தரை, அவரைவிட வயதில் பெரியவரான சிவனடியாரான அப்பர் பெருமான் பல்லக்கில் துாக்கிச் சென்றது சைவ சமய வரலாறு.ஒவ்வொரு சிவ ஆலயமாக வழிபாடு செய்தபடி இருந்தார் திருஞானசம்பந்தர்.
திருவையாறில் வழிபாடு செய்தவர், திருப்பூந்துருத்தியில் அப்பர் இருப்பதை அறிந்தார். அவரைக் காணும் பொருட்டு, பல்லக்கில் ஏறி புறப்பட்டார். வரும் வழியில் 'அப்பர் பெருமான் எங்கு உள்ளார்?' என்று அங்குள்ளோரிடம் கேட்டார்.'தேவரீருடைய அடியே னாகிய யான் உம் அடிகள் தாங்கி வரும் பெருவாழ்வு பெற்று இங்குற்றேன்' என்றார் அப்பர்.ஆம்... திருஞானசம்பந்தர் பல்லக்கை, அடியார் கூட்டத்தினிடையே, வயதில் மூத்தவரான அப்பர் தோளில் சுமந்து கொண்டிருந்தார்.இப்படி சிவத்தொண்டர்கள், ஞானம் தரும் குருவை தோளில் துாக்கி செல்வது,ஹிந்து ஆன்மிகத்தின்ஆழமிக்க பண்பாட்டு வேர். அடியார் தோளில் தாங்கி செல்வது அடிமைத்தனம் அல்ல; அன்பின் வெளிப்பாடு. குருவுக்கான அர்ப்பணம்.அன்று அப்பருக்கு திருஞானசம்பந்தர் போல, இன்று பக்தர்களுக்கு தருமபுர ஆதீனம், ஆன்மிக குரு. இது கடவுள் மறுப்பாளர்களுக்கு புரியாத பந்தம். அன்று அப்பர் பெருமான் பெருவாழ்வு பெற்றது போன்று தான் இன்று, மடத்தின் சிஷ்யர்களும் ஆத்மார்த்தமாக குரு வணக்கம் செய்கின்றனர்.
அதுவும் ஆதீனம் பல்லக்கில் ஊர் சுற்றி பார்க்க வரவில்லை. பக்தர்களுக்கு ஆசி வழங்கவே வருகிறார். அந்த பல்லக்கை பக்தர்கள் சுமையாக கருதவும் இல்லை. இது ஒரு வழிபாட்டு முறை.இங்கு எப்படி வந்தது மனித உரிமை மீறல்? தினமும் என்னை துாக்கிச் செல் என்று பக்தர்களை தருமபுர ஆதீனம் அடிபணிய வைத்தாரா? இல்லையே. வழிவழியாக ஆண்டுக்கொரு முறை நடக்கும் அற்புத நிகழ்வு தானே இது. கோவில்களை உடைத்து அதிகார துஷ்பிரயோகம் நடந்த ஆங்கிலேய ஆட்சியில் கூட இந்த 'பட்டினபிரவேசம்' நடந்தது.
மதுரை மடம்
ஹிந்து மதத்தையும், தமிழ் பண்பாட்டையும் பாதுகாக்கும் பல ஆதீன மடங்களுக்கு அந்தக் காலத்தில், 'ஈகோ' இல்லாமல், பல்லக்குகள் பரிசளித்ததும் மன்னர்கள் தான். மதுரை மடத்தில் புதிய ஆதீனம் பொறுப்பேற்கும் நாளில், சித்திரை வீதியில் பல்லக்கில் வந்து பக்தர்களுக்கு ஆதீனம் அருளாசி வழங்கும் மரபு உள்ளது.மதுரை ஆதீனம் கூறுவது போல, மனிதன் மனிதனை சுமக்கவில்லை. குருவை சிஷ்யர்கள் சுமந்து செல்கின்றனர். அதனால் தான் அவரே 'தருமபுர ஆதீனத்தின் பல்லக்கை நான் துாக்குவேன்' என்கிறார். அனைத்து மதங்களிலும் இது போன்று பல நம்பிக்கைகள் உள்ளன. அவை ஆண்டாண்டு காலமாக நடந்தும் வருகின்றன. பக்தர்களின் காலை கழுவுவது, தீ மிதிப்பது, சாட்டையால் அடித்து உடலை வருத்துவது என பல.
மதத்திற்கு அப்பாற்பட்ட மரபுகள்
மதத்திற்கு அப்பாற்பட்டும் பல மரபுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.தமிழக காவல் துறையில் போலீஸ் துறை தலைவராக இருக்கும் டி.ஜி.பி., ஓய்வு பெறும் நாளின் போது, அவர் காரில் அமர்ந்திருக்க சீருடை அணிந்த போலீஸ் அதிகாரிகள் அவர் காரை இழுத்து செல்லும் மரபு உள்ளது. இது ஆங்கிலேயர்கள் காண்பித்து சென்றது.தேர்தலில் ஜெயிக்கும் தலைவனை தொண்டர்கள் தலையில் துாக்கி கொண்டாடவில்லையா! கிரிக்கெட்டில் வெற்றி வசமானதும் கேப்டனை துாக்கியபடி, மைதானம் முழுக்க சக வீரர்கள் வலம் வரவில்லையா! இவை எல்லாம் எங்கும் நடந்து கொண்டிருக்கின்றன. ஹிந்து மதத்தின் நம்பிக்கை, சடங்குகள் என்பதால் மட்டுமே இவர்கள் எதிர்க்கின்றனர்.தருமபுர ஆதீன பட்டினபிரவேசத்தை எதிர்க்கும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் அவர்கள் ஆட்சி நடத்தும் கேரளாவில் சபரிமலையில், பக்தர்களை மனிதர்கள் தலையில் சுமந்து செல்வதை தடை செய்ய ஏன் கேட்கவில்லை? கோவில் விவகாரங்களில் தலையிட்டால் அங்கு ஓட்டு கிடைக்காது என்பது அவர்களுக்கு தெரியும்.ஆன்மிக விவகாரங்களில் இந்த ஆட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்துவது, ஆட்சிக்கு 'பல்லக்கு துாக்கும்' கட்சிகள் என்பதை ஸ்டாலின் அறிவாரா?
-ஜி.வி.ரமேஷ் குமார்
பத்திரிகையாளர்
rameshkumargv@dinamalar.in
அருமையான கடிதம். அன்பினாலும், குருபக்தியாலும் செய்வது இந்த கடவுள் மறுப்பாளர்களுக்கு தெரியாது.அறிவீனர்கள்.