Advertisement

திருச்சியை வீழ்த்தியது சேப்பாக்கம்: ராதாகிருஷ்ணன், சசிதேவ் அரைசதம்

நத்தம்: திருச்சிக்கு எதிரான டி.என்.பி.எல்., லீக் போட்டியில் ராதாகிருஷ்ணன், சசிதேவ் அரைசதம் விளாச, சேப்பாக்கம் அணி 44 ரன் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

நத்தத்தில் நடந்த தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) 6வது சீசனுக்கான லீக் போட்டியில் சேப்பாக்கம், திருச்சி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருச்சி அணி கேப்டன் ராஹில் ஷா 'பீல்டிங்' தேர்வு செய்தார்.



சூப்பர் ஜோடி: சேப்பாக்கம் அணிக்கு கேப்டன் கவுசிக் காந்தி (19), நாராயண் ஜெகதீசன் (15) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. பின் இணைந்த ராதாகிருஷ்ணன், உதிரசாமி சசிதேவ் ஜோடி, திருச்சி அணி பந்துவீச்சை வெளுத்துவாங்கியது. மதிவண்ணன், ராஹில் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட ராதாகிருஷ்ணன், பொய்யாமொழி பந்தை பவுண்டரிக்கு விரட்டி 36 பந்தில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய இவர், மதிவண்ணன் வீசிய 14வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். பொய்யாமொழி வீசிய 17வது ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி விரட்டிய சசிதேவ், 28 பந்தில் அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 117 ரன் சேர்த்த போது அஜய் கிருஷ்ணா பந்தில் ராதாகிருஷ்ணன் (81) போல்டானார்.



பொய்யாமொழி 'ஹாட்ரிக்': பொய்யாமொழி வீசிய 19வது ஓவரின் முதல் மூன்று பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த சதிஷ் (15), 4வது பந்தில் அவுட்டானார். அடுத்த இரு பந்தில் ஹரிஷ் குமார் (0), சோனு யாதவ் (0) அவுட்டாக 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார் பொய்யாமொழி. பொறுப்பாக ஆடிய சசிதேவ் (65), அஜய் கிருஷ்ணாவிடம் சரணடைந்தார். மணிமாறன் சித்தார்த் (1) 'ரன்-அவுட்' ஆனார்.



சேப்பாக்கம் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 203 ரன் குவித்தது. திருச்சி சார்பில் அஜய் கிருஷ்ணா, பொய்யாமொழி தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.



சந்தோஷ் ஆறுதல்: கடின இலக்கை விரட்டிய திருச்சி அணிக்கு அமித் சாத்விக் (33), சந்தோஷ் ஷிவ் (59) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. நிரஞ்சன் (11), நிதிஷ் ராஜகோபால் (9) நிலைக்கவில்லை. ஆதித்யா கணேஷ் (28) ஆறுதல் தந்தார்.



திருச்சி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. சரவண குமார் (1), மதிவாணன் (2) அவுட்டாகாமல் இருந்தனர். சேப்பாக்கம் சார்பில் ஹரிஷ் குமார் 3, ராமதாஸ் அலெக்சாண்டர் 2 விக்கெட் கைப்பற்றினர்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement