Advertisement

கோவை அணி கலக்கல் வெற்றி * சேலத்தை சாய்த்தது

நத்தம்: டி.என்.பி.எல்., தொடரில் முதல் வெற்றி பெற்றது கோவை அணி. நேற்று நடந்த போட்டியில் சேலத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தமிழகத்தில் டி.என்.பி.எல்., தொடரின் ஆறாவது சீசன் நடக்கிறது. நேற்று நத்தம் என்.பி.ஆர்., மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சேலம், கோவை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கோவை அணி கேப்டன் ஷாருக்கான் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

மழை காரணமாக 5 நிமிடம் தாமதமாக போட்டி துவங்கியது.

கோபிநாத் ஆறுதல்

சேலம் அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. விக்னேஷ் வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரில், ஜாபர் (1), கவின் (0) அவுட்டாகினர். மனம் தளராத கோபிநாத், விக்னேஷ் வீசிய நான்காவது ஓவரில், 2 சிக்சர், 4பவுண்டரி விளாச, சேலம் அணிக்கு 26 ரன் கிடைத்தது. அக்சய் (12) ஏமாற்றினார். 18 பந்தில் 41 ரன் எடுத்து கோபிநாத் அவுட்டானார்.

இதன் பின் அணியின் ரன்வேகம் அப்படியே குறைந்தது. முருகன் அஷ்வின் 31 ரன் எடுத்தார். கடைசி ஓவரில் பிரனவ் (32), பிரனேஷ் (1), கணேஷ் (0) அவுட்டாகினர். சேலம் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 146 ரன் மட்டும் எடுத்தது.

சுரேஷ் விளாசல்

கோவை அணிக்கு சுரேஷ் குமார், கங்கா ஸ்ரீதர் ராஜு ஜோடி துவக்கம் கொடுத்தது. பெரியசாமி ஓவரில் 2 பவுண்டரி அடித்த கங்கா (13), கணேஷ் பந்தில் அவுட்டானார். பின் சுரேஷ், சாய் சுதர்சன் இணைந்தனர். கணேஷ், பிரனேஷ் ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார் சுரேஷ். தொடர்ந்து பெரியசாமி பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய இவர், 35வது பந்தில் அரைசதம் எட்டினார்.

கோவை அணி வெற்றி இலக்கை வேகமாக நெருங்கியது.

சுதர்சன் அபாரம்

அடுத்து வந்த முருகன் அஷ்வின் ஓவரிலும் பவுண்டரி, சிக்சர் விளாசி மிரட்டிய சுரேஷ், 43 பந்தில் 64 ரன் எடுத்து அவுட்டானார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுதர்சன், 42வது பந்தில் அரைசதம் எட்டினார். இது இவரது முதல் அரைசதம். பின் கணேஷ் பந்தில் ஒரு 'சூப்பர்' சிக்சர் அடிக்க, கோவை அணி 16.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது. முதல் இரு போட்டியில் தோற்ற கோவை அணி, இம்முறை 8 விக்கெட் வித்தியாசத்தில் இத்தொடரில் முதல் வெற்றி பெற்றது. சுதர்சன் (56), ஷாருக்கான் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement