Advertisement

ஜானி, ஜோ 'எஸ்' பாப்பா... இந்தியாவுக்கு 'நோ' பாப்பா * ஐந்தாவது டெஸ்டில் தோல்வி

பர்மிங்காம்: ஐந்தாவது டெஸ்டில் சதம் விளாசிய இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட் சேர்ந்து இந்திய கனவை தகர்த்தனர். பவுலர்களும் சொதப்ப, பரிதாபமாக தோல்வியடைந்தது. டெஸ்ட் தொடர் 2-2 என சமன் ஆனது.

இங்கிலாந்து மண்ணில் கடந்த ஆண்டு இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐந்தாவது டெஸ்ட், பர்மிங்காமில் நடந்தது.

முதல் இன்னிங்சில் இந்தியா 416, இங்கிலாந்து 284 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 245 ரன் எடுத்தது. பின் 378 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, நான்காவது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 259 ரன் எடுத்து, 119 ரன் பின்தங்கி இருந்தது.

மீண்டும் ஏமாற்றம்

நேற்று ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. பேர்ஸ்டோவ், ஜோ ரூட் அபார ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவரும் மாறி மாறி பவுண்டரிகள் விளாசினர். ரன்ரேட் ஓவருக்கு சராசரியாக 5.00 ரன் என்ற வேகத்தில் செல்ல, இங்கிலாந்து அணி வெற்றியை வேகமாக நெருங்கியது.

சிராஜ் பந்தில் பவுண்டரி அடித்த ரூட், டெஸ்ட் அரங்கில் 28வது சதம் கடந்தார். இந்த ஆண்டு இவர் அடித்த 5வது, 2021க்குப் பின் அடித்த 11வது சதமாக இது அமைந்தது.

பேர்ஸ்டோவ் 'இரண்டு'

ஷர்துல் வீசிய போட்டியின் 72வது ஓவரின் 2 வது பந்தில் பவுண்டரி அடித்த ரூட், 4வது பந்தை சிக்சருக்கு அனுப்பினார். மறுபக்கம் இவருக்கு 'கம்பெனி' கொடுத்த பேர்ஸ்டோவ், இந்த டெஸ்டில் தொடர்ந்து இரண்டாவது சதம் எட்டினார். தொடர்ந்து மிரட்டிய இவர், சிராஜ் ஓவரில் (76வது) 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

நேற்று காலை வீசப்பட்ட 130வது (21.4 ஓவர்) பந்தில் வெற்றிக்கு தேவையான 119 ரன்களை எடுத்தனர். ஒட்டுமொத்தமாக 76.4 ஓவரில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 378 ரன் (சராசரி 4.93 ரன்) எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நான்காவது விக்கெட்டுக்கு 52.3 ஓவரில் 269 ரன்கள் குவித்த பேர்ஸ்டோவ் (114), ஜோ ரூட் (142) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்டநாயகன் விருதை பேர்ஸ்டோவ்(106, 114 ரன்), தொடர் நாயகன் விருதை ஜோ ரூட்(5 போட்டி 737 ரன்) வென்றனர்.



378

ஐந்தாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 378 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் அதிகபட்ச ரன்களை 'சேஸ்' செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீட்ஸ் டெஸ்ட், நான்காவது இன்னிங்சில் 359 ரன் எடுத்து (2019) வெற்றி பெற்றது.

* பர்மிங்காம் மைதானத்தில் இங்கிலாந்து அணி அதிகபட்ச ரன்களை (378) 'சேஸ்' செய்து சாதித்தது.

* ஒட்டுமொத்த டெஸ்ட் வரலாற்றில் இது எட்டாவது அதிகபட்ச ரன் 'சேஸ்' ஆக அமைந்தது.



முதன் முறை

சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக பங்கேற்ற மூன்று டெஸ்டிலும் நான்காவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 279, 299, 296 என 'சேஸ்' செய்து வென்றது. நேற்று 378 ரன்கள் எடுத்து இந்தியாவை வீழ்த்தியது. இதையடுத்து டெஸ்ட் வரலாற்றில் நான்காவது இன்னிங்சில் தொடர்ந்து 4 முறை 250 ரன்னுக்கும் மேல் 'சேஸ்' செய்த அணி என சாதனை படைத்தது இங்கிலாந்து.



கோஹ்லியை முந்தினார்

தற்போது விளையாடும் கிரிக்கெட் வீரர்களில் அதிக சதம் அடித்தவர்கள் வரிசையில் இந்தியாவின் கோஹ்லி (27), ஆஸ்திரேலியாவின் ஸ்மித்தை (27) முந்தி முதலிடம் பிடித்தார் ஜோ ரூட். இவர் 28 சதம் அடித்துள்ளார்.



சோகமான 'சேஸ்'

டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்கு எதிராக, நான்காவது இன்னிங்சில் அதிக ரன் எடுத்து வெற்றி பெற்றது அணியானது இங்கிலாந்து (378). இதற்கு முன் 1977ல் பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா 339 ரன் எடுத்து வெற்றி பெற்றிருந்தது.



132

முதல் இன்னிங்சில் 100 ரன்னும் மேல் (பர்மிங்காமில் 132 ரன்) முன்னிலை பெற்ற போதும், கடைசியில் இந்திய அணி தோற்றது இரண்டாவது முறையாக நடந்தது. இதுபோல 2015ல் காலே டெஸ்டில் இந்தியா, 192 ரன் முன்னிலை பெற்றும், தோல்வியடைந்தது.



அபராதம்

பர்மிங்காம் டெஸ்டில் குறித்த நேரத்துக்குள் இந்திய அணி 2 ஓவர் குறைவாக பந்துவீசியது. இதனால் வீரர்கள் சம்பளத்தில் 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. தவிர, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என்பதால் 2 ஓவருக்கு, 2 புள்ளி என, இந்தியா எடுத்த புள்ளியில் குறைக்கப்பட்டது.

* தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா, 52.08 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இரு இடத்தில் ஆஸ்திரேலியா (77.78%), தென் ஆப்ரிக்கா (71.43%) உள்ளன.



சரிந்தது எப்படி

பர்மிங்காம் டெஸ்டில் துவக்கத்தில் இருந்தே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 125/3 ரன் எடுத்து 257 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

* கைவசம் 7 விக்கெட் இருந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு 400 ரன்னுக்கும் மேல் இலக்கு நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

* மாறாக, நான்காவது நாள் காலையில் இங்கிலாந்து பவுலர்கள் எழுச்சி பெற்றனர். அடுத்த 120 ரன் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை வீழ்த்த இந்தியா 245 ரன் மட்டும் எடுத்தது.

* 378 ரன் என்ற இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்து சேர்த்தது.

* ஜோ ரூட், பேர்ஸ்டோவ் இணைந்தனர். பேர்ஸ்டோவ் 14 ரன் எடுத்த போது, சிராஜ் பந்தில் கொடுத்த 'கேட்ச்சை', விஹாரி கோட்டை விட்டனர். அப்போது 153/3 என இருந்தது இங்கிலாந்து அணி. இதன் பின் ரூட் (142), பேர்ஸ்டோவ் (114) சதம் விளாச, இந்தியா வெற்றி பறிபோனது.



தடுமாறும் கோஹ்லி

கடந்த 2019, நவ. ல் நடந்த பகலிரவு (கோல்கட்டா) டெஸ்டில் கோஹ்லி 136 ரன் எடுத்தார். இதன் பின் 32 டெஸ்ட் இன்னிங்ஸ், 21 ஒருநாள், 22 'டி-20' என மொத்தம் மூன்று வித கிரிக்கெட்டிலும் மொத்தம் 75 இன்னிங்சில் களமிறங்கி விட்டார். ஒன்றில் கூட சதம் அடிக்கவில்லை.

* அதிகபட்சம் டெஸ்டில் 79, ஒருநாள் அரங்கில் 89, 'டி-20'ல் 94 ரன் எடுத்தார். டெஸ்டில் இவரது சராசரி 27.00 ரன்னாகி விட்டது. மூன்று வித கிரிக்கெட்டில் கடைசி 31 போட்டிகளில் இவரது பேட்டிங் சராசரி 27.48 ஆக குறைந்தது. இதனால் கோஹ்லி ஓய்வு பெற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



ஐ.பி.எல்., போதுமா

இந்திய அணி வீரர்கள் கோடிகள் கொட்டும் ஐ.பி.எல்., தொடருக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பாரம்பரியமிக்க டெஸ்ட் தொடரில் தடுமாறுகின்றனர். அலட்சியமாக பேட் செய்வது, பொறுப்பற்ற முறையில் பந்துவீசுவது தொடர்கிறது. இதன் காரணமாக தான் ஐந்தாவது டெஸ்டிலும் தோற்க நேர்ந்தது.



தேறாத டிராவிட்

பயிற்சியாளர் டிராவிட் தலைமையில் இந்திய அணி, அன்னியமண்ணில் பங்கேற்ற 4 டெஸ்டில் 3ல் தோற்றது. பும்ராவுக்கு இது முதல் சோதனை என்ற போதும் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் வெற்றிக்கு போதிய திட்டங்களை டிராவிட் வகுக்கவில்லை. தற்காப்பு ஆட்டத்தை கையாண்டதால், இங்கிலாந்தின் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த முடியவில்லை.

* இங்கிலாந்து 378 ரன்களை 'சேஸ்' செய்த போது, நெருக்கமாக பீல்டர்களை நிறுத்தாமல், துவக்கத்தில் பீல்டிங்கில் இந்தியா தளர்வு செய்தது.

* நான்காவது நாள் மாலையில் சரியான இடங்களில் பந்துவீசாமல் போக, ஒன்று, இரண்டு ரன்களை தாராளமாக எடுத்தனர். இதனால் நெருக்கடி குறைய ரூட், பேர்ஸ்டோவ் பவுண்டரி மழை பொழிந்தனர்.

* இதை தடுப்பதற்கு எவ்வித திட்டமும் இல்லாமல் திணறியது இந்தியா. ஜடேஜா ஏமாற்ற, சிராஜ், ஷர்துல் ரன்களை வாரி வழங்கினார்.

* ஐந்தாவது டெஸ்டில் அஷ்வினுக்குப் பதில் ஷர்துலை சேர்த்ததும் தவறாகி போனது.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement