Advertisement

அறிமுக குஜராத் அணி அமர்க்களம் * முதல் பைனலில் நுழைந்தது

கோல்கட்டா: 'டி-20' கிரிக்கெட் தகுதிச்சுற்று-1ல் வென்ற குஜராத் அணி, பைனலுக்குள் ஜோராக நுழைந்தது. ராஜஸ்தான் பவுலர்கள் ஏமாற்றம் அளித்தனர்.

கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த'டி-20' கிரிக்கெட் தகுதிச்சுற்று-1ல் குஜராத், ராஜஸ்தான் அணிகள்மோதின. 'டாஸ்' ஜெயித்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 'பவுலிங்' தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் அணிதுவக்கத்தில் தடுமாறியது. 'ஆமை வேகத்தில்' ஆடிய ஜெய்ஸ்வால் (8 பந்தில் 3 ரன்) விரைவில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடி 'மூடில்' இருந்தார். யாஷ் தயால் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். தொடர்ந்து அல்ஜாரி ஜோசப் ஓவரில் 2 சிக்சர் பறக்க விட்டார். முதல் 6 ஓவரில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்தது. சாய் கிஷோர் 'சுழலில்' சாம்சன் (47 ரன், 5 பவுண்டரி, 3 சிக்சர்) சிக்கினார். ஹர்திக் பாண்ட்யா 'வேகத்தில்' தேவ்தத் படிக்கல் (28) போல்டானார்.

பட்லர் விளாசல்

கடைசி கட்டத்தில் அதிரடியில் மிரட்டினார் பட்லர். யாஷ் தயால் வீசிய போட்டியின் 17வது ஓவரில் 4 பவுண்டரிகள் அடித்தார். 42 பந்தில் அரைசதம் எட்டினார். ஹெட்மயர்(4) ஏமாற்றினார். தனது கலக்கல் பேட்டிங்கை தொடர்ந்த பட்லர், ஷமி ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். ஒரு கட்டத்தில் 38 பந்தில் 39ரன் தான் எடுத்திருந்தார் பட்லர். அடுத்த 18 பந்தில் 50 ரன் எடுத்தார். 56 பந்தில் 89 ரன் (12 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ரன் அவுட்டானார்.இத்தொடரில் அதிக ரன் எடுத்தவரான இவர், 15 போட்டியில் 718 ரன் குவித்துள்ளார்.கடைசி 5 ஓவரில் 64 ரன்கள் எடுக்கப்பட்டன. ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 188 ரன் எடுத்தது.

பொறுப்பான ஆட்டம்

சவாலான இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு துவக்கத்தில் சகா(0) ஏமாற்றினார். பின் சுப்மன் கில், வேட் அசத்தினர். அஷ்வின் வீசிய போட்டியின் 6வது ஓவரில் சுப்மன் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடிக்க, 17 ரன்கள் எடுக்கப்பட்டன. சுப்மன்(35) ரன் அவுட்டானார். மெக்காய் பந்தை துாக்கி அடித்த வேட்(35), பட்லரின் சூப்பர் 'கேட்ச்சில்' அவுட்டானார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, மில்லர் பொறுப்பாக ஆடினர். பவுண்டரி, சிக்சர்களாக விளாசி, 'ரன் ரேட்' குறையாமல் பார்த்துக் கொண்டனர்.

மில்லர் 'ஹாட்ரிக்' சிக்சர்

கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டன. அனுபவம் இல்லாத பிரசித் கிருஷ்ணா பந்துவீசினார். முதல் மூன்று பந்தில் தொடர்ந்து மூன்று சிக்சர்கள் விளாசிய மில்லர், வெற்றியை உறுதி செய்தார். குஜராத் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 191 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 'டி-20' கிரிக்கெட் தொடரில் அறிமுக அணியாக களமிறங்கிய குஜராத், ஆரம்பத்தில் இருந்தே முத்திரை பதித்தது. முதல் முறையாக பைனலுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ஹர்திக்(40), மில்லர்(68) அவுட்டாகாமல் இருந்தனர்.



இன்னொரு வாய்ப்பு

தகுதிச்சுற்று 1 ல் தோற்ற ராஜஸ்தான் அணி, பைனலுக்கு செல்ல இன்னொரு வாய்ப்பு உள்ளது. இன்று நடக்கும் 'எலிமினேட்டர்' போட்டியில் வெல்லும் அணியுடன், மே 27ல் நடக்கும் தகுதிச்சுற்று 2ல் ராஜஸ்தான் மோதும். இதில் வென்றால், பைனலுக்கு செல்லலாம்.





'டாஸ்' ராசியில்லை

ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் நேற்றும் 'டாஸ்' வெல்ல தவறினார். இம்முறை 15 போட்டிகளில் 13ல் 'டாஸ்' வெல்லவில்லை. இதன் மூலம் ஒரு தொடரில் அதிக முறை 'டாஸ்' இழந்த கேப்டன் ஆனார். இதற்கு முன் 2012ல் சென்னை அணி 12 போட்டியில் 'டாஸ்' இழந்தது.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement