Advertisement

சிங்கப்பூர் ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா கோலாகலம்

சிங்கப்பூர் தொபாயா பகுதியில் எழுந்தருளி அருளாட்சி புரிந்து வரும் அன்னை ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆலய வித்துவான்களின் மங்கல இசையுடன் விழா வெகு விமரிசையாகத் தொடங்கியது. நாள்தோறும் அன்னை வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளிக் காட்சி அளித்து பக்தப் பெருமக்களைப் பரவசத்தில் ஆழ்த்தினார்.

முதல் நாள் ஸ்ரீ காமாட்சி அம்மன் அலங்காரத்திலும் இரண்டாம் நாள் அம்மன் சிவ பூஜை செய்யும் காட்சியும் – மூன்றாம் நாள் மஹா மாரியம்மனாகவும் – நான்காம் நாள் கஜலட்சுமி தோற்றத்திலும் – ஐந்தாம் நாள் தனலட்சுமியாகவும் ஆறாம் நாள் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் அலர்மேலு மங்கை அருள்பாலிப்பது போன்றும் ஏழாம் நாள் சாரதாம்பாள் திருவுருவத்திலும் – எட்டாம் நாள் முகாம்பிகையாகவும் அவதரித்து அன்னை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

26 ஆம் தேதி சிங்கை மலையாளி இந்து சமாஜக் குழுவினரின் நடனமும் 27 ஆம் தேதி சுபராகம் குழுவினரின் வாய்ப் பாட்டும் – லட்சுமி தேவி ராஜ சேகரன் குழுவினரின் நடனமும் பக்தர்களைக் களிப்படையச் செய்தன. 28 ஆம் தேதி சித்ர கலா ஆர்ட்ஸ் மற்றும் நீமா நடனக் குழுவினர் நடனமாடி அசத்தினர். 29 ஆம் தேதி நாட்டிய ரஞ்சினி மற்றும் டெம்பிள் ஆஃப் பைன் ஆர்ட்ஸ் குழுவினரின் பரதாஞ்சிலி பக்தர்களைப் பிரமிக்க வைத்தது. 30 ஆம் தேதி வசந்தா காசிநாத் நடன மணிகளும் சாதனா குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.

அக்டோபர் முதல் தேதி ஓம்கார் ஆர்ட்ஸ் நடனமணிகளும் உஷா ராணி நடனமும் அனைவரையும் ஈர்த்தன. அக்டோபர் 2 ஆம் தேதி காண விணோதன் ரத்தினம் குழுவினரின் வாய்ப்பாட்டை எல்லோரும் வாயாரப் புகழ்ந்தனர். அக்டோபர் மூன்றாம் தேதி லஹரி ஆர்ட்ஸ் வாயப்பாட்டும் அப்சராஸ்ஆர்ட்ஸ் மற்றும் பரதாஆர்ட்ஸ் நடனம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. 4 ஆம் தேதி வர்த்தினி ஷர்மா மற்றும் ஆகாஷ் கங்கா குழுவினரின் நிகழ்ச்சிகள்அனைவரையும் சுண்டி இழுத்தன.

ஆலய அர்ச்சகர்கள் அலங்காரத்தில் அசத்த - மேலாண்மைக் குழுவினர் கலை நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டிலும் அறுசுவைப் பிரசாதம் வழங்குவதிலும் தனி முத்திரை பதித்து வருகின்றனர். சுருங்கக் கூறின் தொபாயோ பக்தப் பெருமக்கள் தெய்விக மணம் கமழ நவராத்திரியை அனுபவித்து வருகின்றனர்.

- நமது சிங்கப்பூர் செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement