மீன்வள உதவி ஆய்வாளர்கள் பணி பி.டெக்., மாணவி தேர்வு எழுத அனுமதி
சென்னை: மீன்வளத் துறை உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வில், பி.டெக்., படித்தவர் பங்கேற்க அனுமதிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கீதப்பிரியா என்பவர் தாக்கல் செய்த மனு:
மீன்வள பல்கலையில், மீன்வளம் தொடர்பான பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். இந்த படிப்பு, 2016ல் அறிமுகம் செய்யப்பட்டது.
மீன்வளத் துறையில் உதவி பொறியாளர் மற்றும் உதவி ஆய்வாளர் பணிகளுக்கான தேர்வில், மீன்வளம் பற்றிய பி.டெக்., படிப்பையும் சேர்க்கும்படி, அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். பின், தமிழக அரசுக்கும், மீன்வள பல்கலை துணைவேந்தருக்கும் மனு அனுப்பினேன்.
கடந்த மாதம் மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவழைத்து, தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், மீன்வளம் பற்றிய பி.டெக்., படிப்பை சேர்க்கவில்லை. இதனால், என்னைப் போன்று, பி.டெக்., படித்தவர்களால் விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, மீன்வளம் பற்றிய பி.டெக்., படிப்பையும் சேர்க்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க, மனுதாரரை அனுமதிக்கும்படி, முதல் பெஞ்ச் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதையடுத்து, இன்று நடக்க உள்ள தேர்வில் பங்கேற்க, கீதப்பிரியாவை அனுமதிக்கும்படி தாக்கல் செய்யப்பட்ட மனு, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் காசிநாதபாரதி ஆஜரானார்.
தேர்வில் பங்கேற்க அனுமதி அளிக்கும்படி, முதல் பெஞ்ச் உத்தரவிட்டு, விசாரணையை, அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!