புதிதாக பணியில் சேர்ந்தவர்களில் 600 பேரை நீக்கிய இன்போசிஸ்
புதுடில்லி: இன்போசிஸ் நிறுவனம், புதிதாக பணியமர்த்தியவர்களில் 600 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. நிறுவனத்தில் புதிதாக சேர்ந்தவர்களின் திறனை அறிந்துகொள்வதற்காக நடத்திய தேர்வில், இவர்கள்தோல்வியடைந்ததை அடுத்து, பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இது குறித்து, இத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின், புதிதாக பணியில் சேர்ந்தவர்களை மதிப்பீடு செய்யும் பொருட்டு, அண்மையில் அவர்களுக்கு திறனறிவு தேர்வை நடத்தியது, இன்போசிஸ். இதில் தேர்ச்சியடையாத 600 ஊழியளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பணி நீக்கம் செய்யப்பட்ட 280 பேரும், இந்த பட்டியலில் அடங்குவர். இதற்கிடையே, புதிதாக பணிக்குச் சேர தேர்வு செய்யப்பட்டு, பணி ஆணை பெற்றுள்ளவர்களுக்கு, இந்த பணிநீக்க நடவடிக்கை, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், 6 ஆயிரம் பேரை புதிதாக இன்போசிஸ் பணியமர்த்தியது. இந்நிலையில், அடுத்த நிதியாண்டில் 50 ஆயிரம் பேர் வரை பணியமர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும்; இதில், ஏற்கனவே 40 ஆயிரம் பேருக்கு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் தெரிவித்திருந்தார்.
தற்போது திடீரென திறனறிவு தேர்வு நடத்தி, பலரை பணி நீக்கம் செய்துள்ளது, ஏற்கனவே பணி ஆணை பெற்று, நிறுவனத்தில் சேர காத்திருப்பவர்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
மற்றொரு ஐ.டி., நிறுவனமான விப்ரோவும் கடந்த மாதம், திறனறித் தேர்வில் தோல்வியடைந்த 800 பேரை பணி நீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!