விண்வெளி வீரர்களுக்கு சென்னைஐ.ஐ.டி.,யில் பயிற்சி
சென்னை: விண்வெளி பயணத் திட்ட வீரர்களுக்கு மெய்நிகர் பயிற்சியை, சென்னை ஐ.ஐ.டி., அளிக்க உள்ளது.
இந்திய மனித விண்வெளி பயணத் திட்டத்தில், அதிதீவிர மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் இதர தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பாக, இஸ்ரோ நிறுவனம், சென்னை ஐ.ஐ.டி.,யுடன் சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அதன்படி, விண்வெளி பயணத் திட்ட வீரர்களுக்கு, மெய்நிகர் பயிற்சியை சென்னை ஐ.ஐ.டி., அளிக்க உள்ளது.
இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் மணிவண்ணன் கூறுகையில், மனித விண்வெளி பயணத் திட்டத்தின் போது, அதிதீவிர மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், வடிவமைப்பு சுழற்சியை குறைப்பதிலும், விண்வெளி சூழலை உருவகப்படுத்துவதிலும், மதிப்பு கூட்டும் ஆற்றலை பெற்றுள்ளது, என்றார்.
இஸ்ரோவின் மனித விண்வெளி விமான மைய இயக்குனர் உமா மகேஸ்வரன் கூறியதாவது:
இஸ்ரோவின் பயணத் திட்டங்களில், சென்னை ஐ.ஐ.டி., நீண்ட காலமாக தன் பங்களிப்பை வழங்கி வருகிறது. மனித விண்வெளி பயண திட்ட இன்ஜினியர்களுக்கு, மெய்நிகர் பயிற்சியை அளிப்பதுடன், அங்குள்ள ஆய்வகத்தில் தேவையான பரிசோதனைக் கூடத்தை அமைக்கவும், சென்னை ஐ.ஐ.டி.,யில் உள்ள தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!