பள்ளி, கல்லூரிகளில் போதை பயன்பாடு வகுப்பறை நேரத்து மயக்கம்!
சூலுார்: பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்தி வகுப்பறைக்கு வரும் போக்கு அதிகரித்துள்ளதாக ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சாக்லேட் உட்பட பல்வேறு வடிவங்களில் தற்போது போதைப்பொருட்கள் எளிதாக கிடைப்பதால், மாணவர்கள் பலர் இதற்கு அடிமைகளாகி வருகின்றனர். புகை வராத போதை பொருட்கள் என்பதால், பெற்றோரால் எளிதில் கண்டறிய முடிவதில்லை.
மோசமான சுற்றுச்சூழல், தவறான நட்பு வட்டாரம், எளிதில் குறைந்த விலைக்கு கிடைக்கும் போதை பொருட்களால் இளைஞர் சமூகம் சீரழிந்து வருகிறது.
குறிப்பாக டீன் ஏஜ் பருவ மாணவர்கள், புகை வராத புகையிலை பொருட்கள், கஞ்சா சாக்லேட்டுகளை பயன்படுத்தி போதையில் மிதக்கின்றனர். இது போன்ற போதை பொருட்களை பள்ளி வளாகத்திலேயே பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.
கூல் லிப்ஸ் மற்றும் கஞ்சா கலந்த சாக்லேட்டுகளை மாணவர்கள் சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை காண்பதாக ஆசிரியர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
அவற்றை வாயில் வைத்த, சில நிமிடங்களிலேயே, அந்த மாணவர்களின் கண்கள் மயங்கிய நிலைக்கு செல்கிறது. அதீத சுறுசுறுப்பாகவோ அல்லது மந்தமாகவோ வகுப்பறைகளில் வலம் வருவதை காணமுடிவதாக ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறுவதுடன், வெளியில் சென்று, பல சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுவதால், சமுதாயமே சீரழியும் நிலைக்கு உள்ளாகியுள்ளது.
இதுகுறித்து, பிரபல தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் கூறுகையில், மாணவர்கள் சிலர் வகுப்பறையில் கண்கள் சிவந்து மயங்கிய நிலையில் இருப்பதை காணமுடிகிறது. அம்மாணவர்களை எதிர்கொள்ளவே அச்சம் ஏற்படுகிறது. கண்டிக்க எவ்வித உரிமையும் இல்லாமல் தவிக்கின்றோம். பல பள்ளிகளில் மாணவர்களிடம் போதை பொருட்கள் எடுத்தும் பள்ளியின் பெயரை காக்க, வெளியில் சொல்லாமல் பெற்றோருக்கு மட்டும் தகவல் அளித்து மறைத்துவிடுகின்றனர். பெற்றோரோ பள்ளி தரப்பில் சொன்னாலும் நம்ப மறுக்கின்றனர். இக்காலத்து மாணவர்களின் நிலை வேதனை அளிக்கிறது, என்றார்.
பள்ளி கல்வித்துறை, குழந்தைகள் பாதுகாப்பு துறை மற்றும் போலீசார் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை எதிர்காலத்தில் பார்ப்பது கேள்விக்குறியாகிவிடும்.
இதுகுறித்து, கோவை அரசு மருத்துவமனை புற்றுநோயியல் துறைத்தலைவர் பிரபாகரன் கூறுகையில்,புகையில்லாத போதை பொருட்கள் என்பதால் மாணவர்களுக்கு எவ்வித அச்சமும் இருப்பதில்லை. அவர்களுக்கு உரிய, வயது காரணமாக நாம் கூறுவதை கேட்கமாட்டார்கள். இதுபோன்ற மாணவர்கள் கண்டறிந்தால், கட்டாயம் கவுன்சிலிங் கொடுத்தால் மட்டுமே தீர்வு காணமுடியும். சிறு வயது முதல் போதை பயன்பாட்டால் புற்றுநோய் பாதிப்புக்கான வாய்ப்பும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதை உணரவேண்டும், என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!