Advertisement

12 பெண்கள் மீட்புக்கு உதவிய பிரதமர் அலுவலகம்!

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

Tamil News
'மாஜி அமைச்சரை தடுத்து நிறுத்திட்டு, 'ரெடிமேட்' சிலைக்கு மாலை போட்டு, மரியாதை பண்ணியிருக்காங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''முன்னாள் முதல்வர் ஜெ.,யின் நினைவு தினம், சமீபத்துல வந்துச்சே... திருச்சி கோர்ட் எம்.ஜி.ஆர்., சிலை பக்கத்துல, ஜெயலலிதா நினைவு தினத்தை அனுசரிக்க, அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலர் சீனிவாசன், போலீஸ்ல அனுமதி வாங்கியிருந்தாரு பா...

''பன்னீர்செல்வம் அணியின், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும், அதே இடத்துல நினைவு தினம் அனுசரிக்க ஏற்பாடு செஞ்சாரு... உடனே அ.தி.மு.க., வக்கீல்கள், 'எங்க கட்சி கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது'ன்னு கோர்ட் தீர்ப்பை சுட்டிக்காட்டி, போலீசாரிடம் முறையிட்டாங்க பா...

''அதை மீறி, நடராஜன் அந்த இடத்துல நிகழ்ச்சி நடத்துனா, நாங்க கோர்ட்டுக்கு போவோம்னு சீனிவாசன் தரப்பு மிரட்டவும், நடராஜன் ஆட்களை போலீசார் தடுத்து நிறுத்திட்டாங்க... அப்புறமா, சீனிவாசன் தரப்பு கையோட எடுத்துட்டு வந்த ஜெயலலிதா சிலைக்கும், அவரது படத்துக்கும் மலர் துாவி மரியாதை செலுத்திட்டு கிளம்புச்சு பா...

''அ.தி.மு.க., ஆட்சியில, திருச்சிக்கு ரெண்டு அமைச்சர்கள் இருந்தும், ஜெ.,க்கு சிலை அமைக்கலை... அதான், சீனிவாசன் தரப்பு கையோட சிலையை எடுத்து வந்து அஞ்சலி செலுத்திட்டு, திரும்ப எடுத்துட்டும் போயிடுச்சு பா...'' என்றார், அன்வர்பாய்.

''ஆளுங்கட்சியினர் கைவிட்ட கர்ப்பிணி பெண்ணை, விஜய் மக்கள் இயக்கத்தினர் காப்பாத்தியிருக்காங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''சென்னை புயல், வெள்ள பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரண பணிகள்ல, நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினரும் களம் இறங்கினாங்களே... இதுல, எண்ணுார், எர்ணாவூர் பகுதியில உள்ள ஆலைகள்ல இருந்து வெளியேறிய ரசாயன கழிவுகள், மழை தண்ணீரில் கலந்து வீடுகளை சூழ்ந்துடுச்சுங்க...

''அதுல சிக்கிய ஒரு கர்ப்பிணி பெண் மற்றும் மூதாட்டியை காப்பாற்ற, ஆளுங்கட்சியினரின் உதவியை சிலர் நாடியிருக்காங்க... 'இதோ வர்றோம்'னு சொன்னவங்க எட்டியே பார்க்கலைங்க...

''இது, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தெரிய வந்ததும், ரசாயானம் கலந்த இடுப்பளவு தண்ணீருல இரண்டு நிர்வாகிகள் இறங்கி போய், ரெண்டு பேரையும் காப்பாத்திட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''மீட்பு பணியில, பிரதமர் ஆபீஸ் காட்டிய அக்கறையை கேளுங்கோ ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''மிக்ஜாம் புயல் மழையால, சென்னை புறநகர் பகுதியில, வேலைக்கு போகும் பெண்கள் தங்கியிருக்கற விடுதிக்குள்ள வெள்ளம் புகுந்துடுத்து... மின்சாரமும் இல்ல ஓய்...

''சாப்பாடு, தண்ணீர் கிடைக்காம அங்க மாட்டிண்டு, 12 பெண்கள் அவதிப்பட்டிருக்காங்க... அதுல ஒரு பெண்ணின் தந்தை, தன் சென்னை நண்பருக்கு இதை தெரிவிச்சிருக்கார் ஓய்... அவரும், 5ம் தேதி இரவு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தொடர்பு கொண்டு, மீட்பு பணிக்கு உதவி கேட்டிருக்கார்...

''அதுவும் இல்லாம, பிரதமர் ஆபீசுக்கும் மெயில் அனுப்பியிருக்கார்... மறுநாள் காத்தால, அங்க வந்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் பெண்களை மீட்டு உணவு, தண்ணீர் குடுத்தா ஓய்...

''அதே நேரம், மெயில் அனுப்பியவரை தொடர்பு கொண்ட பிரதமர் ஆபீஸ் அதிகாரிகள், 'பெண்கள் அனைவரும் பத்திரமா மீட்கப்பட்டாங்களா'ன்னு கேட்டு உறுதிப்படுத்திண்டா ஓய்...''

'ரோட்டுல குறுக்கால பாய்ஞ்சு, வாகன ஓட்டிகளுக்கு கிலியை ஏற்படுத்துதாவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''விபரமா தான் சொல்லுங்களேன்...'' என்றார், அந்தோணிசாமி.

''போக்குவரத்து மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீஸ்காரங்க, வாகன சோதனை செய்யும்போது உதவிக்காக, 'பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ்' என்ற அமைப்பை பயன்படுத்தினாங்கல்லா... இப்ப, அந்த அமைப்புக்கு தடை போட்டுட்டாவ வே...

''ஆனா, கோவையின் ஒரு சில இடங்களில், மாநகர போக்குவரத்து போலீசாரின் வாகன சோதனையின் போது, சாதாரண உடையில் சில இளைஞர்களை குண்டர்கள் மாதிரி பயன்படுத்துதாவ வே...

''அவங்க, சாலையின் குறுக்கே புகுந்து, வாகன ஓட்டிகளை திடீர்னு வழிமறிக்காவ... போலீஸ்காரங்க ரோட்டு ஓரமா நின்னு, மும்முரமா அபராத சீட்டு எழுதுறதால, வாகன ஓட்டிகளுக்கு அவங்க நிற்குறதே தெரியல வே...

''வழிமறிக்குறது யாரோ ரவுடி பசங்கன்னு நினைச்சு, நிலைகுலைஞ்சு விழுந்துடுதாவ... 'போலீசுக்கு உதவ, ஊர்க்காவல் படை இருக்கும்போது, இதெல்லாம் தேவையா'ன்னு மக்கள் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''மின் வாரிய அதிகாரியிடம் இப்படியா அடாவடியா நடந்துப்பா...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''சென்னையை புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயலால, மின் வாரிய அதிகாரிகள் பம்பரமா சுத்தி வேலை பார்த்துண்டு இருக்கா ஓய்...

''தாம்பரம் மாநகராட்சியின் மூன்றாவது மண்டலம், திருமலை நகர்ல விழுந்த மின் கம்பத்தை, மின்வாரிய உதவி பொறியாளரும், சில ஊழியர்களும் சரி பண்ணின்டு இருந்தா... அப்ப, அங்க வந்த மண்டல குழு சுயேச்சை தலைவர், மின் கம்பத்தை உடனே நடும்படி சொன்னார் ஓய்...

''பொறியாளரும், பழுதை சரி பண்ணி நடறதா சொன்னார்... உடனே, மண்டல குழு தலைவருக்கு வந்ததே கோபம்... உதவி பொறியாளரை கன்னா பின்னான்னு திட்டி, கையால தள்ளியும் விட்டுட்டு போயிட்டார் ஓய்...'' என்ற குப்பண்ணா, ''வாங்கோ ஜெயபிரதீப் சார்... காபி சாப்பிடறேளா...'' என, நண்பரை வரவேற்றார்.

''மேயருக்கு, ஆளுங்கட்சி கவுன்சிலர்களே தலைவலியா மாறிட்டு வர்றாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''பட்டுக்கு பிரசித்தி பெற்ற ஊரில், தி.மு.க.,வை சேர்ந்த பெண், மேயரா இருக்காங்க... மாநகராட்சி டெண்டர் பணிகள்ல, தங்களுக்கு வர வேண்டிய, 9 லட்சம் ரூபாய், 'கட்டிங்' பணத்தை, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் கேட்கிறாங்க பா...

''மேயரம்மா தரப்பு பணத்தை கொடுக்காம இழுத்தடிக்குது... சமீபத்தில் மாநகராட்சி கூட்டம் நடந்தப்ப, 'புதுசா வந்த கமிஷனர் எங்களை மதிக்கிறதில்ல'ன்னு சொல்லி, தி.மு.க., கவுன்சிலர்கள், 20 பேர் தடாலடியாக வெளிநடப்பு செஞ்சுட்டாங்க பா...

''ஆனா, மேயரை குறிவச்சு தான் இந்த வெளிநடப்பை அவங்க நடத்தினதா அப்புறமா தெரியவந்துச்சு... 'கட்டிங்' பண வசூல்ல, மேயரை வழிக்கு கொண்டு வர, அடுத்த கூட்டத்தையும் நடத்த விடாம வெளிநடப்பு செய்ய கவுன்சிலர்கள் திட்டமிட்டிருக்காங்க பா...

''மேயரின் கணவர், ஆளுங்கட்சி இளைஞரணியில, மாவட்ட நிர்வாகியா இருக்காரு... அதனால, அமைச்சர் உதயநிதி உதவியோட பிரச்னையை முடிக்க, ஏற்பாடு பண்ணிட்டு இருக்காரு பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • sridhar - Chennai,இந்தியா

    திறமைஅற்றவர்களுக்கு வாக்களித்துவிட்டு பிரதமரை கெஞ்ச வேண்டி இருக்கிறது.

Advertisement