Advertisement

பணம் ஒதுக்கப்படும் திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

Tamil News

பா.ஜ.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி:சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் தி.மு.க., தான் பொறுப்பில் இருக்கிறது. இந்த மழைக்கு அவர்கள் எங்கே சென்றனர் என்றே தெரியவில்லை. தமிழக அரசு இனிமேலாவது எந்த திட்டத்திற்கு பணம் ஒதுக்கப்படுகிறதோ, அதை நிறைவேற்ற முன் வர வேண்டும்.

இவரை மாதிரி யாருமே நாக்கு மேல பல்லை போட்டு பேசிட கூடாதுன்னு தான், கவுன்சிலர் முதல் முதல்வர் வரை எல்லாரும் வெள்ளத்துல, 'போட்டோ ஷூட் ' நடத்துனாங்களோ?

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை:'நீங்க ஒரு கேவலமான ஆட்சியை நடத்துங்க. நாங்க ஆட்சிக்கு வந்திடுறோம். நாங்க மகா கேவலமான ஆட்சியை நடத்துறோம். மறுபடி நீங்க ஆட்சிக்கு வந்திடலாம். மறுபடி நீங்க ஒரு படு கேவலமான ஆட்சியை நடத்துங்க. நாங்க ஆட்சிக்கு வந்திடுறோம். இப்படியே மாத்தி, மாத்தி ஆட்சி விளையாட்டு விளையாடுவோம்' என்ற கதையே நடக்கிறது. 'கிறுக்குப்பய ஊருல கேணப்பய நாட்டாமை'ங்கிறது இது தானோ?

இதெல்லாம் முதல்வரா, அமைச்சரா இருந்த இவங்க தலைவர் பன்னீர்செல்வத்துக்கும் பொருந்துமா?

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:மாநில அரசு செய்வதறியாது திகைத்து நிற்கும் போது, நிவாரண பணிகளை திட்டமிட, மத்திய அரசு, 24 மணி நேரத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பார்வையிட அனுப்பி வைத்த வேகம், இதுவரை தமிழகம் காணாதது. மத்திய அரசு, விரைவாக செயல்பட்டு மக்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்ற அக்கறையுடன், நிவாரண தொகையை உடனே வழங்கியுள்ளது. தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகளை இனியாவது எடுக்க வேண்டும்.

பேரிடரை அரசியலாக்காமல், பாதிக்கப்பட்ட சென்னை மாநகரை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் உடனடியாக வந்து பார்த்தது பாராட்டுக்குரியதே!

பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் பேட்டி:தமிழகத்தில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 8,000 கோடி ரூபாய், தற்போதைய தி.மு.க., ஆட்சியில், 4,000 கோடி ரூபாய் என, மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கு சென்றது என தெரியாமல், சென்னை மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சென்னையில் மெழுகுவர்த்தி 50, பால், 100 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. மழை நின்று ஐந்து நாட்களாகியும் இன்று வரை வெள்ளம் வடிந்தபாடில்லை.

அந்த 12,000 கோடி ரூபாய்க்கு கணக்கு கேட்கவும், நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்யவும் மத்திய அரசு குழுவை அனுப்பலாமே!

தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பேட்டி:வெள்ள மீட்பு நடவடிக்கை குறித்து, பா.ஜ.,வினர், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உள்ளிட்டோர் கூட வெளிப்படையான எண்ணத்தோடு அரசை பாராட்டியுள்ளனர். ஆனால், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி எல்லாவற்றையும் அரசியலுக்காக மட்டுமே பேசி வருகிறார்; மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு இல்லை.

பாராட்டியவர்கள் இவங்க, 'போஸ்' கொடுத்த போட்டோவை மட்டும் பார்த்திருப்பாங்க... களத்துக்கு போயிருந்தா தானே உண்மை தெரிஞ்சிருக்கும்!

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை:உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி, உடுத்த உடையின்றி, எந்தவிதமான அடிப்படை வசதி களுமின்றி, சிரமத்திற்கு உள்ளாகி இருக்கும் மக்களை மீட்கும் பணியில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகம், மக்கள் வரிப்பணமான, 40 கோடி ரூபாயை செலவு செய்து, கார் பந்தயம் நடத்த வேண்டிய அவசியம் என்ன?

இவரை போல பல தரப்பில் இருந்தும், கார் பந்தயத்திற்கு எதிர்ப்பு வந்ததாலோ, என்னமோ, அரசு காலவரையின்றி அதை ஒத்தி வைத்துவிட்டதே!

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை:தமிழகத்தில், 1,021 அரசு மருத்துவர்களை நியமிக்க விளம்பரம் கொடுக்கப்பட்டு, 10 மாதங்கள் ஆகியும் நியமனம் நடைபெறவில்லை என்பதை சொல்லவே, தனக்கு வெட்கமாக இருக்கிறது என, சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், இங்கு ஒரே ஒருவருக்கு, அதுவும் கொரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவரின் மனைவிக்கு, ஏற்கனவே உறுதியளித்தபடி, அரசு வேலை தரப்படவில்லையே... அதற்கு அமைச்சர் வெட்கப்பட்டது உண்டா?

வெட்கம், வேதனை, பரிதாபம்னு ஏதாவது சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பது, துறை அமைச்சருக்கு அழகா என்ன?

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:'ஐந்து மாநில தேர்தல் தோல்வி அல்ல; எச்சரிக்கை' என, தமிழக காங்., தலைவர் அழகிரி கூறியுள்ளார். நாங்களும் அதைத்தான் சொல்கிறோம்... இது காங்கிரசுக்கான தோல்வி அல்ல. வரும், 2024 தேர்தலுக்கான எச்சரிக்கை.

எது, எப்படியோ... தோல்வியில் இருந்து, அவங்க எச்சரிக்கையா காலடி எடுத்து வச்சு மீண்டு வர பார்ப்பாங்க... வெற்றி மிதப்பில் இவங்க கோட்டை விடாம இருந்தா சரி!

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • raja - Cotonou,பெனின்

    "பணம் ""ஒதுக்கப்படும்"" திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்"... அததான் விங்யான முறையில் ஒதுக்குறானுவோலே...

Advertisement