Advertisement

பட்டாசு தொழிலில் 15 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி!

Tamil News


சிவகாசியில் உள்ள, 'அஜந்தா பயர் ஒர்க்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் மணிகண்டன்:

நான், மூன்றாவது தலைமுறை பிசினஸ் மேன். சிவகாசியில், ஒரு பெரிய பட்டாசு கம்பெனியில் வேலை பார்த்து விட்டு, சிறிய அளவில் பட்டாசு தயாரிக்க ஆரம்பித்தார் என் தாத்தா. அதை என் அப்பாவும், சித்தப்பாவும் அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுத்தனர்.

நான், 2011ல் பிசினசுக்குள் நுழைந்தேன். மூன்று ஆண்டுகள் தொழிலை நன்றாக கற்றுக் கொண்டேன். பட்டாசு வியாபாரம் என்றாலே, கடனில் தான் பொருட்களை தருவது வழக்கம்.

தீபாவளிக்கு முன் பட்டாசுகளை தருவோம்; தீபாவளி முடிந்து, பட்டாசை விற்று பணத்தை தருவர்.

என் பிசினசில் தனித்துவத்தை கொண்டு வர முடிவெடுத்தேன். எல்லாரும் தயாரிப்பது போல், நானும் தயாரிக்காமல், குழந்தைகள் கொளுத்தி மகிழும்படியான பட்டாசுகளை மட்டும் தயாரிக்க முடிவு செய்து, செயல்படுத்த துவங்கினேன்.

பந்து போன்ற வடிவில் இருக்கும் பட்டாசு, கத்தி போல் இருக்கும் பட்டாசு என, பல வடிவங்களில் தயாரித்த போது, குழந்தைகளின் கவனத்தை எளிதாக ஈர்க்க முடிந்தது.

குழந்தைகளுக்கு விலங்குகள் மிகவும் பிடிக்கும் என்பதால், முயல், மயில் என, பல வடிவங்களில் பட்டாசு செய்து வெளியிட்டோம்.

லைசென்ஸ் பிரச்னை இல்லாத கார்ட்டூன் கேரக்டர்களையும், பட்டாசின் மேல் அச்சிட்டு கொடுத்ததை கண்டு, குழந்தைகள் குதுாகலித்தனர்.

குழந்தைகளுக்கான பட்டாசு என என் தொழிலை மாற்றிய பின், 'இனி கடன் கிடையாது; பணம் தந்து தான் பட்டாசு வாங்க வேண்டும்' என்று, என் வாடிக்கையாளர்களிடம் சொன்னேன்.

இதற்காக என் லாபத்தை குறைத்துக் கொண்டேன். என்னை சரியாக புரிந்து கொண்டவர்கள், பணம் தந்து பட்டாசு வாங்கினர். மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, புதுடில்லி, ஹரியானா, மேற்கு வங்கம் என எல்லா மாநிலங்களுக்கும் சென்று விற்க துவங்கினேன்.

கொரோனா பெருந்தொற்று வாயிலாக, ஓராண்டு காலத்துக்கு மேல் பெரிய வியாபாரம் எதுவும் இல்லாமலே, நிறுவனத்தை நடத்தி, இயல்பு நிலைக்கு திரும்பி வந்தோம். இன்றைக்கு தொழிலை ஓரளவு நிலை நிறுத்தி விட்டோம்.

பட்டாசு ஏற்றுமதியில் மிகப் பெரிய வாய்ப்பு இந்தியாவுக்கு இருக்கிறது. நம் நாட்டில் விற்பனையாகும் பட்டாசுகளின் மதிப்பு, 8,000 கோடி ரூபாய்; ஆனால், உலக மார்க்கெட், 80,000 கோடி ரூபாய்.

பட்டாசு தொழிலை இன்னும்கூட முறைப்படுத்தி செய்தால், மிகப் பிரமாதமாக இந்த தொழிலை வளர்த்தெடுத்து, பல லட்சம் பேருக்கு வேலை தரலாம். கடந்த, 15 ஆண்டுகளில், 10 மடங்குக்கு மேல் வளர்ந்திருக்கிறேன்.

இதை மென்மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே என் ஆசை.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement