Advertisement

வாங்கலாம்; விற்கலாம்; மோசடி நெருங்காது

பொருட்கள் விற்பனையும் டிஜிட்டல்மயமாகி வருகிறது. பழைய காரை விற்க நினைக்கிறோம்; ஆன்லைனில் விளம்பரம் கொடுத்தால் தெரியாத ஒரு நபர்தான் 'காரை வாங்கிக் கொள்வதாக' கூறுகிறார். வாங்கப்போகும் நபர் நல்லவரா பணம் தருவாரா போன்ற கேள்விகள் மனதில் எழும். சந்திக்காத ஒருவரை எப்படி நம்புவது? இவற்றுக்கு விடை தருவது 'எஸ்க்ரோ' என்ற பணப்பரிவர்த்தனை.

'எஸ்க்ரோ' என்றால் என்ன



'எஸ்க்ரோ' என்ற வார்த்தை பழைய பிரெஞ்ச் கால 'escroue' என்ற வார்த்தையிலிருந்து தோன்றியது; 'எழுதப்பட்ட ஒப்பந்தம்' என்று அர்த்தம்.

ஒரு 'எஸ்க்ரோ' கணக்கு என்பது இருதரப்பினரின் (வாங்குபவர் - விற்பவர்) இடையிலான பரிவர்த்தனையின் போது மூன்றாம் தரப்பினர் வைத்திருக்கும் கணக்காகும். ஒரு பரிவர்த்தனை செயல்முறை முடியும் வரை நீடிக்கும்; இது ஒரு தற்காலிக கணக்காகும்; இது வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையிலான அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்ட பின் பணம் பட்டுவாடா செய்யப்படும் ஒரு ஒப்பந்தத்தைக் குறிக்கும்.

உலகளவில் பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் 1.36 லட்சம் கோடி ரூபாய் மோசடிகளால் இழக்கப்படுகிறது. இதைத் தடுக்கும் யோசனையில்தான் 'காஸ்லர்'( Castler) என்ற 'ஸ்டார்ட்-அப்' நிறுவனம் துவங்கப்பட்டது.

பிறந்தது நம்பிக்கை



இணையத்தில் தங்கள் வணிகத்தை நடத்தும் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ற 'எஸ்க்ரோ' சேவைகளை முடிவு வரை வழங்குவதற்காக துவங்கப்பட்ட இந்நிறுவனம் 'எஸ்க்ரோ' சேவையில் வங்கிகளையும் பங்குதாரராக இணைக்க முடிவெடுத்தது.

இது வாங்குபவர் விற்பவர்களிடையே நம்பிக்கையைப் பிறக்கச் செய்தது. 'யெஸ்' வங்கி உள்ளிட்ட ஒன்பது வங்கிகளை இணைத்து கொண்டிருக்கிறது.

இந்நிறுவனம் வாங்குபவருக்கு உடனடி 'டிஜிட்டல் எஸ்க்ரோ' வசதியை உருவாக்க அனுமதிக்கிறது. வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவரும் தங்கள் மின்னணு கே.ஒய்.சி.-ஐ பூர்த்தி செய்து 'டிஜிட்டல் எஸ்க்ரோ' ஒப்பந்தம் மூலம் சேவை விதிமுறைகளை ஒப்புக்கொண்டு பரிவர்த்தனை மதிப்பைக் குறிப்பிட வேண்டும்.

வாங்குபவர் காஸ்லருடன் உருவாக்கப்பட்ட 'எஸ்க்ரோ' கணக்கில் பணம் செலுத்துவார்; விற்பனையாளர் பொருட்கள்/சேவைகளை வழங்குவார். வாங்குபவர் அதை ஏற்றுக்கொண்டால் 'காஸ்லர்' விற்பனையாளருக்கு கட்டணத்தை அனுப்புவார். இது இரு தரப்பிலும் எந்த மோசடியும் நடக்காது என்பதை உறுதிப்படுத்துகிறது.

காஸ்லரைப் பயன்படுத்த குறைந்தபட்ச பரிவர்த்தனை மதிப்பு 1000 ரூபாய். உச்சவரம்பு இல்லை. இதுவரை 1500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 2500 கோடி ரூபாயைப் பரிவர்த்தனை செய்துள்ளது. மாதம் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளது.
- சேதுராமன் சாத்தப்பன் -
இணையதளம்:www.castler.com.

இ - மெயில்:info@castler.com
சந்தேகங்களுக்கு

இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com

அலைபேசி 98204 51259

இணையதளம்: www.startupandbusiness news.com

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement