Advertisement

நெரிசலில் சிக்கி சிறுமி உயிரிழப்பா அ.தி.மு.க., நிவாரண நிகழ்ச்சியில் விபரீதம்

சென்னை:'மிக்ஜாம்' புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆர்.கே.நகர் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க அ.தி.மு.க., வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.

சென்னை, கொருக்குப்பேட்டை, சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியை கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி துவக்கி வைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி, பெட் ஷீட், பிரெட், பால் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவை வழங்கினார்.

நிவாரண பொருட்களுக்காக கொருக்குப்பேட்டை சுற்றுவட்டார மக்கள் குவிந்தனர். தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 3வது தெருவைச் சேர்ந்த தனலட்சுமி, 44. ஒன்பதாவது வகுப்பு படிக்கும் தன் அண்ணன் மகள் யுவஸ்ரீ, 14, மற்றும் தம்பி மனைவி தேவியுடன் சென்றிருந்தார்.

பொருட்கள் வாங்க தனலட்சுமி மற்றும் தேவி, மேடைக்கு அருகே சென்றுள்ளனர். அப்போது தனியாக நின்றிருந்த சிறுமி யுவஸ்ரீ, கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்து மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள், உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தினர். அங்கு மருத்துவ பரிசோதனையில் சிறுமி உயிரிழந்தது தெரிய வந்தது.

ஆர்.கே.நகர் போலீசார் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை முடிவை பொறுத்தே சிறுமியின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நெரிசலில் சிக்கி சிறுமி உயிரிழந்ததை கண்டித்தும் அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு பதிவு செய்ய கோரியும், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement