Advertisement

கூட்டு மதிப்பு: பதிவுத்துறை அரசாணைக்கு எதிர்ப்பு இனி கேட்டடு கம்யூனிட்டி எல்லோருக்கும் எட்டாக்கனியாகும்

அடுக்கு மாடிக் குடியிருப்பு மற்றும் வில்லாக்களை உள்ளடக்கிய 'கேட்டடு கம்யூனிட்டி' வீடுகளுக்கு பதிவுத்துறை விதித்துள்ள கூட்டு மதிப்பு முறைக்கு கட்டுமானத்துறையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்குபவர்கள் பத்திரப்பதிவு செய்யும் முறையை டிச. 1ல் இருந்து மாற்றி தமிழக அரசின் பதிவுத்துறை புதிய அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுவரை அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளுக்கு வீடுகளுக்கான நிலக்கிரயம் மற்றும் கட்டட ஒப்பந்தம் இரண்டுக்கும் தனித்தனியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு வந்தது.

புதிய அரசாணையின்படி டிச.1ல் இருந்து இரண்டுக்கும் சேர்த்து ஒரே பத்திரமாகப் பதிவு செய்தால் போதும். இம்முறையில் கட்டடம் அது கட்டப்பட்டுள்ள நிலம் இரண்டையும் சேர்த்து கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இந்தத் தொகையை பதிவுத்துறை மண்டல டி.ஐ.ஜி.க்களே நிர்ணயிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வேட்டு வைக்கும் கூட்டு மதிப்பு



புதிய அரசாணையின்படி 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்பு வீட்டுக்கு பழைய முறையை விட 18 சதவீதமும் ஒரு கோடி ரூபாய் வீட்டுக்கு 38 சதவீதமும் 3 கோடியே 5 லட்ச ரூபாய் வீட்டுக்கு 51 சதவீதமும் அதிகமாகச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதாவது 'கேட்டடு கம்யூனிட்டி' எனப்படும் தொகுப்பு வீடுகளை - அடுக்கு மாடிக் குடியிருப்பு மற்றும் வில்லாக்கள் அதில் செய்து தரப்படும் வசதிகளின் அடிப்படையில் 'பேஸிக் பிரிமீயம் அல்ட்ரா பிரமீயம்' என்று மூன்று பிரிவாகப் பிரித்து சதுர அடி வீதமாக கூட்டு மதிப்பை பதிவுத்துறை நிர்ணயித்துள்ளது.

இரட்டிப்பு விலை



உதாரணமாக கோவையில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் 'பேஸிக்' குடியிருப்பு வீடுக்கு சதுரடிக்கு 6000 ரூபாய் பிரிமீயம் என்றால் 8100 ரூபாய் அல்ட்ரா பிரிமீயம் என்றால் 10000 ரூபாய் என பதிவுத்துறை கூட்டு மதிப்பு நிர்ணயித்து அந்தத் தொகைக்கு ஏழு சதவீதம் முத்திரைத் தீர்வையை செலுத்தச் சொல்கிறது.

அந்தப் பகுதியில் ஒரு கட்டுமான நிறுவனம் 2000 சதுரடி பரப்பிலான ஒரு வில்லா அல்லது அடுக்கு மாடிக் குடியிருப்பு வீட்டை ஒரு கோடியே 40 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.

அந்த வீட்டுக்கு 'அல்ட்ரா பிரிமீயம்' என்ற வகைப்பாட்டில் சதுரடிக்கு 10000 ரூபாய் என்று பதிவுத்துறை கூட்டு மதிப்பு நிர்ணயித்துள்ளது. இதன்படி அந்த வீட்டின் மதிப்பு 2 கோடி ரூபாயாகிறது.

அதற்கு 7 சதவீதம் அதாவது 14 லட்ச ரூபாய்க்கு முத்திரைத் தீர்வை செலுத்த வேண்டியுள்ளது. பழைய முறையில் இதற்கு 5ல் இருந்து 6 லட்ச ரூபாய் மட்டுமே பதிவுச் செலவாகும்.

இதில் இன்னொரு சிக்கல் யாதெனில் கட்டுமான நிறுவனம் வாங்காத 60 லட்ச ரூபாய்க்கும் சேர்த்தே ஜி.எஸ்.டி.யும் வருமான வரியும் விதிக்கப்படும் வாய்ப்புள்ளது. இந்த வரிகளின் நிலை பற்றி கேள்விக்குறியாக உள்ளது.

கோரிக்கையின் பேரில் கூட்டு மதிப்பை 10 சதவீதம் குறைக்கலாம்; அதற்கும் மேல் குறைக்க மைய வழிகாட்டிக் குழுவில் முடிவு செய்யலாம் என்று பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் எவ்வளவு குறைத்தாலும் வீடுகளின் கூட்டு மதிப்பு முறை எந்த வகையிலும் நடைமுறையுடன் ஒட்டாததாகவும் 'கேட்டடு கம்யூனிட்டி'களுக்கே மொத்தமாய் வேட்டு வைப்பதாகவுள்ளது.

இனி புதிதாக இந்த வீடுகளை வாங்கவும் யாரும் வரமாட்டார்கள்; பழைய வீடுகளையும் விற்பது மிகவும் கஷ்டம்.

இது குறித்து பதிவுத்துறை உயரதிகாரிகள் கூறுகையில் 'இந்த கூட்டு மதிப்பு முறையால் எவ்வளவு பாதிப்பு என்பது இப்போது தான் தெரிகிறது. ஆனால் நிதித்துறையின் நிர்ப்பந்தமே இதற்குக் காரணம்.

'வழக்கமாக ஆண்டுக்கு 10 சதவீதம் வருவாய் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்படும். இப்போது 25 சதவீதம் நிர்ணயம் செய்திருப்பதால் வேறு வழியின்றி இந்த கூட்டு மதிப்பு முறை இப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என்றார்.
-நமது சிறப்பு நிருபர்-

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement