Advertisement

தமிழ் நிலம் சாப்ட்வேரில் குளறுபடி தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா

பெரம்பலுார்:தமிழகத்தில் உள்ள நிலங்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பட்டா மாற்றம் நிலம் ஒப்படைப்பு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மாநில அளவில் வருவாய் துறையின் ஒரு அங்கமான நில நிர்வாக ஆணையரகமும் மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட நிர்வாகமும் செயல்படுத்தி வருகிறது.

கிராம பகுதிகளில் பொதுமக்கள் நிலம் வாங்கினால் தமிழக அரசின் இணைய தளமான 'தமிழ் ஊரகம்' என்ற இணையதளம் வாயிலாகவும் நகரப் பகுதிகளில் நிலம் வாங்கினால் 'தமிழ் நகர்ப்புறம்' என்ற இணையதளம் வாயிலாகவும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கின்றனர்.

கிராம பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு கூட்டு பட்டா கேட்டு வரும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கும் தனி பட்டா கேட்டு வரும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட குறுவட்ட நில அளவீட்டாளருக்கும் நகரப்பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு கூட்டு பட்டா மற்றும் தனி பட்டா கேட்டு வரும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட நகர சார் ஆய்வாளருக்கும் செல்லும் வகையில் தமிழக அரசால் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நகரப் பகுதிகளில் உள்ள நிலங்கள் வார்டு வாரியாகவும் பிளாக் வாரியாகவும் பிரிக்கப்பட்டு நகர சர்வே எண்கள் கொடுக்கப்பட்டு பொதுமக்கள் அளிக்கும் உட்பிரிவு மற்றும் உட்பிரிவு அற்ற மனுக்கள் யாவும் ஒரே உள் நுழைவிற்கு (லாக்இன் ஐடி) செல்லும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பட்டா பெற மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

தமிழக அரசின் அரசாணைப்படி கூட்டு பட்டாவாக இருந்தால் 15 நாட்களுக்குள்ளும் தனி பட்டாவாக இருந்தால் 30 நாட்களுக்குள்ளும் பட்டா தர வேண்டும் என விதி இருந்தாலும் தற்போதுள்ள 'தமிழ் நகர்ப்புறம்' மென்பொருளை பயன்படுத்தி வழங்கப்படுவதில்லை.

இதனால் தமிழகத்தில் நகராட்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தை வாங்கும் பொதுமக்களுக்கு விரைவாக பட்டா வழங்கும் வகையில் வருவாய் நிர்வாக ஆணையரகம் நில நிர்வாக ஆணையரகம் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட ஆணையரகம் ஆகியவை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement