Advertisement

79.5 கிலோ தங்க, வைர நகைகளை கொள்ளையடித்தவர் சிக்கியது எப்படி?

Tamil News
திருப்பூர்:தமிழகத்தில், 79.5 கிலோ தங்க, வைர நகைகளை கொள்ளையடித்த ஆசாமி போலீஸ் வலையில் சிக்கியது குறித்த பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பூர் குமரன் சாலையில் செயல்பட்டு வந்த ஆலுக்காஸ் நகைக்கடைக்குள், கடந்த 2012 பிப்., 20ல் 'வென்டிலேட்டர்' வழியாக உள்ளே நுழைந்த மர்ம கும்பல், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, 38 கிலோ தங்க, வைர நகைகளை கொள்ளையடித்தது.

இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது டி.எஸ்.பி.,யாக இருந்த ராஜாராம் தலைமையில் ஐந்து தனிப்படை வடமாநிலங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மூவர் கைது செய்யப்பட்டனர். கொள்ளையில் மூளையாக செயல்பட்ட ஜார்க்கண்டை சேர்ந்த அப்ஜூல் ஷேக், 51 உள்ளிட்ட நபர்களை கைது செய்ய முடியவில்லை.

இந்நிலையில், கடந்த அக்., 12ல், அமைச்சர் பொன்முடி மனைவியின், கடலுாரில் உள்ள இருசக்கர வாகன ஷோ ரூமில் லாக்கரை உடைத்து, 3 லட்சம் ரூபாய், ஆறு தங்க நாணயங்கள் திருடு போயின.

இதுதொடர்பாக, அப்ஜூல் ஷேக் உட்பட மூன்று பேரை கடலுார் மாவட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, அப்ஜூல்ஷேக், திருப்பூர் நகை கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் என்பது தெரியவந்தது. கொள்ளை நடந்த, 11 ஆண்டுகளுக்கு பின், திருப்பூர் வடக்கு போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் வழக்கில் தனிப்படையை வழிநடத்திய டி.எஸ்.பி., ராஜாராம், தற்போது கடலுார் எஸ்.பி.,யாக உள்ளார். இருசக்கர வாகன ஷோரூமில் பணம் திருட்டு தொடர்பாக தனிப்படையினர் விசாரித்தனர்.

அங்கு கிடைத்த கைரேகை, மொபைல் போன் எண், திருடிய முறை போன்ற பலவற்றை, இதற்கு முன் நடந்த குற்ற சம்பவங்களுடன் போலீசார் ஒப்பிட்டு பார்த்த போது, சிலவற்றை கடந்த காலங்களில் நடந்த நகை கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து கண்காணித்து, அப்ஜூல் ஷேக்கை கடலுார் போலீசார் பிடித்தனர். விசாரணையில், திருப்பூர் நகை கொள்ளை வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

டி.எஸ்.பி.,யிடம் இருந்து, நுாலிழையில் தப்பிய நபர், 11 ஆண்டுக்கு பின், அதே அதிகாரி எஸ்.பி.,யாக இருக்கும் போது சிக்கியுள்ளார்.

கைதான அப்ஜூல் ஷேக், நகைக் கடை கொள்ளையில் பலே கில்லாடியாக இருந்துள்ளார்.

கடந்த, 2012ல் திருப்பூரில், 38 கிலோ, 2013ல் கடலுாரில், 4.5 கிலோ, 2017ல் திருநெல்வேலியில், 37 கிலோ என தமிழகத்தில் மட்டும், 79.5 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்து உள்ளார். மற்ற மாநிலங்களிலும் தொடர்ச்சியாக கைவரிசை காட்டியுள்ளார்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement