Advertisement

ஆயிரம் ஆண்டு கடந்த தொன்மைச் சிவாலயம்!

Tamil News
காங்கயம் தாலுகா, பரஞ்சேர்வழியில், ஆயிரம் ஆண்டுகள் பழமையானதும், ஆயுள் பலம் கூட்டும் முக்கிய ஸ்தலம் என்ற பெருமை பெற்றதுமான, ஸ்ரீமத்யபுரீஸ்வரர் கோவில் திருப்பணி துவங்கியுள்ளது.

சிவாலயங்களில், பாடல் பெற்ற, 276 தலங்கள் இருப்பது போல், வைப்பு தலங்களும் சிறப்பு பெற்றுள்ளன. திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற, 147 வைப்பு தலங்களில், 111வது வைப்புத்தலம், பரஞ்சேர்வழி ஸ்ரீமத்யபுரீஸ்வரர் கோவில் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய தொழில்நுட்ப கழகம், தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி, மண்ணில் புதைந்து வரும் கோவில் திருப்பணி செய்யலாம் என பரிந்துரைத்துள்ளன. பழமை மாறாமல் புதுப்பிக்கும் முயற்சியாக, திருப்பணி நடந்துள்ளது. சுவாமிகளுக்கு, பாலாலயம் செய்து நித்ய பூஜைகள் நடந்து வருகின்றன.

கோவில் வளாகத்தில், கொங்கு சோழர் என்று போற்றப்பட்ட, இரண்டாம் விக்ரம சோழன் கோவிலுக்கு அளித்த கொடைகள் தொடர்பான கல்வெட்டுகள் உள்ளன. இதேபோல், கி.பி., 1038, 1257, 1261 ஆண்டின் கல்வெட்டும் கிடைக்கப்பட்டுள்ளது. அதில், கோவில், திருவிழாக்கள், நிலவகை, சமூகம் போன்ற அரிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

சுயம்பு திருமேனி

பரஞ்சேர்வழியில் அருள்பாலிக்கும் சிவபெருமான், மத்யபுரீஸ்வரர் என்றும், அம்மன் சுகுந்த குந்தலாம்பிகை என்ற நாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர். அத்திமரம், பவளமல்லி ஆகியவை தலவிருட்சம். மூலவர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தமிழகத்தில், சில கோவில்களில் மட்டும் இருப்பது போல், சதுர வடிவ ஆவுடை மீது சற்றே தென்புறம் சாய்ந்தது போன்ற லிங்கத்திருமேனி வடிவில் அருள்பாலிக்கிறார்.

கம்பீரமாக கயிலாய நந்தி

தனி சன்னதியில் அருள்பாலிக்கும் மட்டுவார் குழலி எனப்படும் சுகுந்த குந்தாலம்பிகை சன்னதி எதிரே, தீர்த்தகிணறு இருப்பதும் தனிச்சிறப்பு. சிவபெருமான் எதிரில் அமைந்துள்ள நந்தி, கயிலாய நந்திக்கான அனைத்து சர்வ லட்சணங்களையும் பெற்றுள்ளது என்று சிற்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். பிரதோஷ வழிபாட்டுக்கான அதிகார நந்தியும், அழகிய வேலைப்பாடுகளுடன், சிவ பெருமானை நோக்கி நேராக பார்க்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த, 70 ஆண்டுகளாக திருப்பணி நடக்காமல், சிதைந்த நிலையில் உள்ள இக்கோவில் திருப்பணி தற்போது துவங்கியுள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரசு அனுமதியுடன், திருப்பணி துவங்கியுள்ளது.

இறைசேவையில் இணையலாமே!

கோவில் திருப்பணியில், திருப்பூரை சேர்ந்த ஏராளமான தொழில் நிறுவனங்கள் பங்கேற்க முன்வந்துள்ளன. பக்தர்களும் தங்களை திருப்பணியில் இணைத்து கொண்டு பங்காற்றலாம். கூடுதல், விவரங்களுக்கு, 99441 88881 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, கோவில் அறங்காவலர் தங்கமுத்து தெரிவித்துள்ளார்.

---

பரஞ்சேர் வழியில் உள்ள தொன்மைவாய்ந்த ஸ்ரீமத்யபுரீஸ்வரர் கோவில்.

சதுர வடிவ ஆவுடை

கயிலாய நந்தி

கல் துாணில் உள்ள நரசிம்மர் சிற்பம்

கோவிலில் இடம்பெற்றிருந்த கல்வெட்டுகள்சைவ, வைணவ ஒற்றுமையின் அடையாளம்இக்கோவில் அருகிலேயே, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவீரநாராயண பெருமாள் சன்னதியும் அமைந்துள்ளது. சைவ, வைணவ ஒற்றுமையின் சின்னமாக இது விளங்குகிறது. சிவ பெருமான் மற்றும் அம்மன் சன்னதி அர்த்த மண்டபங்கள், நான்கு கற்துாண்களுடன் அமைந்துள்ளன.துாண்களில், நந்தியம்பெருமான், அனுமன், ரிஷிகள், மகாலட்சுமி, முருகப்பெருமான், லிங்கத்துக்கு பால் சுரக்கும் காமதேனு, நரசிம்ம பெருமாள் போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, கோவிலின் பல்வேறு இடங்களில், மீன் சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீசக்ரம் பொருத்திய கல்நிலவுஇந்தியாவில், 12 கோவில்களில் மட்டும், ஸ்ரீசக்ரம் பொருத்திய கல் நிலவு இருக்கின்றன. அதில் ஒன்றாக, மத்யபுரீஸ்வரர் கோவிலில், நிலவின் கஜலட்சுமி உருவத்துக்கு கீழ், ஸ்ரீசக்ரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீசக்ரம் இருப்பதால், சிவனருள் பரிபூரணமாக கிடைக்கும். வழிபடும் பக்தருக்கு, நேர்மறை எண்ணம் மேலோங்கி, ஆன்ம ஞானமும், செல்வ செழிப்பும் உருவாகும் என்பதும் ஐதீகம்.ரிஷிகள் தோற்றுவிக்கும் சிவாலயத்தில், சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் இருக்காது. அவ்வகையில், இந்த கோவிலிலும், நவக்கிரகம், சனீஸ்வரர் சன்னதி இல்லை. கோவிலில், எமதர்மன் வழிபட்டதாகவும், இங்குள்ள சிவனை சரணடைந்தால், முக்தி கிடைக்கும் என்றும் அறியப்பட்டுள்ளது.
- நமது நிருபர்
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

    ஓம் நமசிவாய .....

Advertisement