Advertisement

கோவில் தல புராணங்களை மாற்றி எழுத சதியா? அறநிலைய துறை விளக்கம்

'கோவில்களின் தல புராணங்கள் மாற்றி எழுதப்பட உள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவலில் உண்மையில்லை' என, அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.

ஹிந்து கோவில்களின் தல வரலாற்றை தயார் செய்வது குறித்து, அறநிலையத்துறை கமிஷனர் தலைமையில், செப்., மாதம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

அதில், தல வரலாற்றில் கோவில் சார்ந்த கல்வெட்டு குறிப்புகள் இடம் பெற வேண்டும்; ஆங்கில மொழியாக்கம் செய்ய வேண்டும்; கோவில்கள் குறித்து இதுவரை வெளிவராத தகவல்களை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 13 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இதற்காக ஒரு குழு அமைத்து, மூன்று மாதங்களுக்குள் இப்பணியை முடிக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், கோவில்களின் தல புராணத்தை, காலத்திற்கு ஏற்றபடி மாற்றி எழுத, அறநிலையத்துறை முனைந்துள்ளதாகவும், ஆன்மிகப் பெரியவர்கள் இதில் தலையிட வேண்டும்.

இல்லாவிட்டால் திராவிட கண்ணோட்டத்தில் தல புராணம் மாற்றி எழுதப்படும் என்றும், சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.

அதற்கு மறுப்பு தெரிவித்து, அறநிலையத்துறை அளித்துள்ள விளக்கம்:

ஹிந்து சமய அறநிலைத்துறை நிர்வகிக்கும், முக்கியத்துவமான பாடல் பெற்ற தலங்கள், திவ்ய தேசங்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட தலங்களுக்கு புராணங்கள், தல வரலாறுகள் காலத்திற்கு ஏற்ற வகையில் இல்லை.

மேலும், வெளிநாட்டு வாழ் தமிழர்களின் தேவை உணர்ந்து, கோவில் தல வரலாற்றை மொழியாக்கம் செய்து ஆங்கிலத்திலும் வெளியிடும் தேவை உள்ளது.

தொன்மையான செய்யுள் நடை புரியவில்லை என, மொழி பெயர்க்க யாரும் முன்வரவில்லை. எனவே, எளிமையான நடையில் அனைத்து கோவில்களுக்கும், தல வரலாறுகளை எழுத வேண்டிய அவசிய தேவை ஏற்பட்டது.

தல வரலாற்றுக்காக குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு, புராண கூறுகளில் எவ்வித சிறு மாற்றமும் இன்றி, தற்கால தமிழில் தல வரலாறுகள் எழுதப் பணிக்கப்பட்டுள்ளன.

இதற்கு, அந்தந்த கோவில் அருகில் வசித்து வரும் சிறந்த தமிழறிஞர்கள், ஆன்மிக ஆய்வாளர்களையும் தேர்ந்தெடுத்து, இப்பணிகளை மேற்கொள்ள ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

தற்போது, கல்வெட்டுத் தரவுகள், சுவடிகள், செப்பேடுகள், சுவரோவியத் தகவல்களுடனும் நல்ல புகைப்படங்களுடனும் தல வரலாறு தொகுத்து வெளியிடும் வகையில் எழுதப்பட்டு வருகிறது.

சமூக ஊடகங்களில் பேசப்படுவது போல, புராணங்கள் மாற்றி எழுதப்படுவதாக கூறுவது உண்மையல்ல. புராணங்களை யாரும் மாற்றி அமைக்க முடியாது; அது மாறாதது. இந்த ஆக்கப்பூர்வமான பணிகளை இழிவுபடுத்த வேண்டாம்.

இவ்வாறு அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
-- -நமது நிருபர்- -
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement