Advertisement

மின் வாரியத்திற்கு ரூ.100 கோடி இழப்பு

சென்னை:தமிழக மின் வாரியம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் என்ற நிறுவனங்களாக செயல்படுகிறது.

மின் பகிர்மான கழகம், மின் வினியோக பணிகளையும்; மின் தொடரமைப்பு கழகம், மின் கோபுர வழித்தடத்தில் மின்சாரம் எடுத்து செல்லும் பணியையும் செய்கிறது.

'மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ள பெருக்கால் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் இருந்த, மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட பல சாதனங்கள் சேதமடைந்தன.

மின் கோபுர வழித்தடங்களும் சேதமடைந்ததுடன், சென்னை அடுத்த சோழிங்கநல்லுார் அருகே உள்ள கிட்ஸ்பார்க், 230 கி.வோ., துணைமின் நிலையமும், 110 கி.வோ., துணைமின் நிலையமும் நீரில் மூழ்கின.

மின் ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.

இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை. சேத மதிப்பீடு கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. எனவே, நேற்று முன்தினம் நிலவரப்படி, மின் வாரியத்திற்கு, 100 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதில், மின் தொடரமைப்பு கழகத்தின் பங்கு, 35 கோடி ரூபாய். தொடர்ந்து, சேத மதிப்பீடு கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

ரயில்வே பாதிப்பு



'மிக்ஜாம்' புயல் பாதிப்பினால், தெற்கு ரயில்வேக்கு, 35 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

புயல் காரணமாக, சென்னை உட்பட பல இடங்களில் ரயில் பாதைகள் மழைநீரில் மூழ்கி, ரயில் சேவையும் பாதித்தது. ஏராளமான ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.

கடந்த ஒரு வாரமாக, ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால், தெற்கு ரயில்வேக்கு, 35 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'தெற்கு ரயில்வேயில், 605 மெயில் மற்றும் விரைவு ரயில்களின் போக்குவரத்து நான்கு நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதில், 449 ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டது. 51 ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டது. இதுதவிர, சென்னை புறநகர் மின்சார ரயில்கள் அனைத்துப் பகுதியிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

விரைவு ரயில்கள், புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து காரணமாக, தெற்கு ரயில்வேக்கு, 35 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement