Advertisement

ஏலத்தில் எடுத்த நிலத்தை ஒப்படைக்க கோர்ட் உத்தரவு

சென்னை:ஏலத்தில் எடுத்த நிலத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கும்படி, சிதம்பரம் முன்சிப் நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலுார் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்; நீதிமன்றத்தால் ஏலம் விடப்பட்ட 1 ஏக்கர், 30 சென்ட் நிலத்தை வாங்கினார். விற்பனை சான்றிதழை, சிதம்பரம் முன்சிப் நீதிமன்றம் வழங்கியது.

நிலத்தை தன் வசம் எடுக்க முயன்ற போது, அங்கு குடிசை, வீடுகள் கட்டியிருந்தவர்கள் காலி செய்ய மறுத்தனர்.

குறிப்பிட்ட நிலம், ரத்னவேல் நாடார் என்பவருக்கு சொந்தமானது என்றும், அதை குத்தகைக்கு விட்டிருப்பதாகவும், ரயத்வாரி பட்டா வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

முன்சிப் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, சிதம்பரம் சார்பு நீதிமன்றத்தில், அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.

இதை விசாரித்த சிதம்பரம் சார்பு நீதிமன்றம், முன்சிப் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.

இதையடுத்து, சார்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் முத்துகிருஷ்ணன் மனுத் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, 'ரயத்வாரி நிலங்களை, விவசாயத்துக்காக மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் தன்மையை மாற்ற முடியாது.

'ரயத்வாரி பட்டா வழங்கப்பட்டிருப்பதாக, குடியிருப்பவர்கள் கூறுவதை ஏற்க முடியாது. எனவே, சார்பு நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சட்டப்படி நிலத்தை மீட்டு, ஏலத்தில் எடுத்தவரிடம் ஒப்படைக்க, தேவையான நடவடிக்கைகளை, முன்சிப் நீதிமன்றம் எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement